
முன்னொரு காலத்தில் ஜப்பான் காட்டருகே முதிய தம்பதியர் வாழ்ந்து வந்தனர்; அவர்களை தேடி, தினமும் ஒரு அழகிய சிட்டுக் குருவி வரும். அது, அவர்கள் தோள், தலை மீது உட்கார்ந்து விளையாடும்; கொடுக்கும் உணவை சாப்பிடும்; பின், பறந்து காட்டுக்குச் சென்று விடும்.ஒருநாள் -பக்கத்து வீட்டுப்பெண், 'இனி, சிட்டுக் குருவி, உன் வீட்டுக்கு வராது; உன்னோடு விளையாடாது...' என்றாள்.'ஏன்...' என்று கேட்டார் பாட்டி.'அது, என் வீட்டு அரிசியை தின்றது; அதற்காக, அதன் நாக்கை வெட்டி விட்டேன்...' என்றாள் பக்கத்து வீட்டுப்பெண்.இதைக் கேட்டு, மிகவும் வருந்தினர் தம்பதியர். 'சிட்டுக் குருவி பட்டினியாக கிடக்குமே' என்று கவலைப்பட்டனர்.எப்படியாவது அதை கண்டுபிடித்து, அழைத்து வந்து சிகிச்சை தர தீர்மானித்தனர். இருவரும் காட்டை நோக்கி நடந்தனர்.வெகு துாரம் அலைந்த பின், மூன்றடி உயரமே இருந்த அழகிய, சிறு வீட்டைக் கண்டனர். அதன் கதவை தட்டினர். சிட்டுக் குருவி வெளியே வந்தது.இருவரையும் கண்டு மகிழ்ந்து, இறக்கைகளை அடித்து குதித்தது.'இது தான் என் வீடு... உள்ளே, என் மனைவியும், குழந்தைகளும் இருக்கின்றனர்; அவர்களை கூப்பிடுகிறேன்... ' என வரவேற்றது.சிட்டுக் குருவியின் மனைவியும், குழந்தைகளும் வெளியே வந்தனர்.மனைவியை பார்த்து, 'இவர்களுக்கு சாப்பிட பழங்கள் எடுத்து வா...' என்று கூறியது.மிகச் சிறிய தட்டுகளில் பழங்கள் எடுத்து வந்தது பெண் சிட்டு.சிறு தட்டுகளை முதிய தம்பதியர் தொட்டதும், பெரியதாகி விட்டன. அன்புடன் கொடுத்த பழங்களை சாப்பிட்டனர். சிட்டுக் குருவியை தங்களுடன் வரும்படி அழைத்தனர்.'பொல்லாத பக்கத்து வீட்டுக்காரி இருக்கும் வரை அங்கே வர மாட்டேன்...' என கூறியபடி, மூடி போட்ட கூடைகள் இரண்டை எடுத்து வந்தது சிட்டுக்குருவி.ஒன்றின் எடை குறைவு; இன்னொன்று எடை அதிகம். 'உங்களுக்குப் பிடித்த கூடையை எடுத்துச் செல்லுங்கள்...' என்றது சிட்டுக்குருவி.'எடை குறைவானதே போதும்! ஏனெனில், எங்களுக்கு தேவை குறைவு; அதோடு, நாங்கள் துாக்கி போக வேண்டாமா...' என்று கூறினர்.எடை குறைந்த கூடையுடன் ஊர் புறப்பட்டனர்.ஊரை நெருங்கியதும், கூடையின் எடை அதிகரித்தது.துாக்க முடியாமல் துாக்கியபடி வீட்டுக்கு வந்தனர்.வீட்டில் கூடையை திறந்து பார்த்தனர். அதில், ரத்தினமும், வைரக்கற்களும் இருந்தன!இந்த விஷயம், பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தெரியவந்தது. அவளும் அந்த சிட்டுக்குருவியை தேடி காட்டுக்குச் சென்றாள். குருவியின் வீட்டைக் கண்டுபிடித்து, கதவை இடித்தாள்.சிட்டுக்குருவி வெளியே வந்தது. 'கோபத்தில், உன் நாக்கை அறுத்து விட்டேன்; மன்னித்து விடு; எனக்கும், அந்த முதிய தம்பதிக்கு கொடுத்தது போல, ஒரு கூடை கொடு...' என்றாள்.உள்ளே சென்று, முன் போல், இரண்டு கூடைகளை எடுத்து வந்தது சிட்டுக்குருவி. அதில் எடை அதிகமாக இருந்த கூடையை தேர்ந்தெடுத்தாள் பெண்.ஊரை நெருங்கிய போது கூடையின் எடை அதிகரித்தது. அவளால் துாக்கவே முடியவில்லை. அதனால், கூடையில் என்ன தான் இருக்கிறதென்று தெரிந்து கொள்ள மூடியை திறந்தாள்.இரண்டு பயங்கர பூதங்கள் வெளிப்பட்டு, அவளை துரத்த ஆரம்பித்தன. 'செத்தேன்... பிழைத்தேன்' என்று ஓட்டமாய் வீடு வந்து சேர்ந்தாள்.அன்புள்ளங்களே... கெட்ட புத்தி உள்ளவர்கள் மனதில் கெட்டது தான் தோன்றும். மனதில் நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்!

