
அனாதை கார்கள்!
பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள், மத்திய கிழக்கு நாடுகளின் சந்தையை மையமிட்டு, சொகுசு கார்களை வடிவமைக்கின்றன. அங்கு விலை உயர்ந்த கார்கள் கேட்பாரற்று நிற்பதை சர்வ சாதாரணமாக காணலாம்.
மத்திய கிழக்கு நாடான துபாயில் திரும்பிய திசையில் எல்லாம் சொகுசு கார்கள்தான். கட்டற்று பெருகும் சொகுசு கார்களால் அரசுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே கைவிடப்பட்ட நிலையில் கிடக்கின்றன.
துபாய் விமான நிலைய வாகன நிறுத்துமிடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், கைவிடப்பட்ட கார்களின் எண்ணிக்கை அதிகம். பிரபலமான நிறுவனங்கள் தயாரித்த அதிசொகுசு கார்கள் இவ்வாறு கைவிடப்படுகின்றன.
ஆண்டுதோறும், 3 ஆயிரம் கார்கள் வரை கைவிடப்படுவதாக ஒரு புள்ளி விவரம் உள்ளது.
இதற்கான காரணத்தை பார்ப்போம்...
துபாயில் சொகுசு கார்களை எளிதாக கடனில் வாங்கலாம். கடனை திருப்பி செலுத்த இயலாவிட்டால், சட்டப்படி சிறைதண்டனை கிடைக்கும். மற்ற நாடுகள் போல் வழக்குப் போட்டு இழுத்தடிக்க முடியாது.
கடனுக்கு கார் வாங்கி அங்கு சுற்றித் திரியும் வெளிநாட்டுக்காரர்கள், திருப்பி செலுத்த முடியாத நிலையில், கார்களை கைவிடுகின்றனர். விமான நிலைய நிறுத்தம், பொது இடங்களில் நிறுத்தி, தப்பி விடுவதாக கூறப்படுகிறது.
இப்படி நிறுத்தப்படும் கார்களை கைப்பற்றி ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். இதனால், மிக குறைந்த விலையில் சொகுசு கார்கள் இங்கு வாங்க முடியும்.
இப்படி வாங்கும் கார்களை, வேறு நாட்டுக்கு கொண்டு செல்ல முடியாது. ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் அதிகம் என்பதால், அங்கே மட்டுமே பயன்படுத்த இயலும்.
கழுகும் வேட்டையும்!
தென்மேற்கு ஆசியாவில், மெசபடோமிய நாகரிக காலத்திலிருந்தே தொடரும் கலை, கழுகு வளர்ப்பு. இடைக்காலத்தில், ஐரோப்பா மற்றும் தெற்காசியப் பகுதிகளில் பரவியது.
அரசர்கள், வீரர்கள், வேட்டை தொழிலை பிரதானமாக கொண்டிருந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இதில் ஈடுபட்டனர்.
தரையில் நாய் போல, ஆகாயத்தில் கழுகு, வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக பலவகை கழுகுகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக, 'கோல்டன் ஈகிள்' எனப்படும், பொன்னாங் கழுகுக்கு மவுசு இருந்தது. இது, ஓடும் ஓநாய், நரியைக் கூட பறந்து பாய்ந்து வேட்டையாடித் துாக்கிவரும் வலிமை பெற்றது.
இந்தவகை கழுகு வளர்ப்பது, இடைக்காலத்தில் அரசர் மற்றும் உயர்குடி மரபுகளில் கவுரவமாகக் கருதப்பட்டது. இந்த வழக்கத்துக்கு, கடந்த நுாற்றாண்டில் நம்நாடு தடை விதித்தது.
பல நாடுகளும் தடையை தீவிரமாக அமல் படுத்தியுள்ளன. ஆனால், ஆங்காங்கே ரகசியமாக வளர்க்கப்படுகின்றன. இந்தியாவின் மத்திய பகுதி, அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் கள்ளத்தனமாக வளர்ப்பது அதிகரித்துள்ளது.
ராணுவத்தில் உளவு வேலைகளுக்கும், கழுகுகள் பயன்படுவதாக கூறப்படுகிறது.
பெரிய ரக கழுகு, குழந்தையையே துாக்கி செல்லும் ஆற்றல் பெற்றது என்பது கூடுதல் தகவல்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.