
தர்ப்பூசணியின் தாயகம், தென் ஆப்பிரிக்கா; இதன் தாவரவியல் பெயர் சித்ரூலஸ் லேன்டஸ். இதை, வத்தகை, கோசாப், தண்ணீர் பழம், குமட்டி பழம் என்றும் அழைப்பர். கோடையில் தான் அதிகம் விளைகிறது; பயிர் செய்த, 100 நாட்களில் அறுவடை செய்யலாம்.
உலகளவில், ஆசிய நாடான சீனா தான் தர்ப்பூசணி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது; அடுத்த இடங்களில், மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி, ஈரான் மற்றும் ஆப்பிரிக்க நாடான எகிப்து ஆகியவை உள்ளன.
தர்ப்பூசணியில், கரோலினா கிராஸ், கோல்டன் மிட்கெட், ஆரஞ்சு குளோ, மூன் அண்ட் ஸ்டார்ஸ், கிரீம் ஆப் காஸ்கட்ச்பான் மெனிடோ போல்ஸ்ரி, டென்சூர் என பல வகை உள்ளன.
வெளிப்புறம் கெட்டியான தோலுடன், பச்சை நிறத்தில், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறக் கோடுகள் நிறைந்து இருக்கும் தர்ப்பூசணி பழம். உட்பகுதி, நல்ல சதைப் பற்றுடன், சிவப்பு, பிங்க் நிறத்தில் இருக்கும். சில ரகங்கள், ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். சதைக்குள், கறுப்பு நிற விதைகள் புதையுண்டு இருக்கும்.
தெரு, கடை வீதிகளில் இப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி, தட்டில் வைத்து விற்பனை செய்வர். நீர் சத்து அதிகம் உள்ளதால், கோடை வெயில் பாதிப்பை தணிக்க ஏற்றது. உணவு நன்றாக செரிக்க உதவுகிறது; மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
உடலுக்கு தேவையான பைட்டோ நியூட்ரியன்ஸ், ஆன்டி ஆக்சிடென்ட் போன்றவையும் உள்ளன.
வைட்டமின் சத்துக்களை அதிகம் கொண்டு உள்ளதால், கண் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; நுரையீரல் மற்றும் வாய்ப்புற்று நோய் வராமல் தடுக்கும்.
புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் தோல் வியாதிகளை, இப்பழத்தில் உள்ள, 'லைகோடீன்' தடுக்கிறது.
பொட்டாஷியம் சத்து நிறைந்துள்ளதால் இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் சீராக இருக்க உதவுகிறது. இதன் காரணமாக, மாரடைப்பு, இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.
பசலை கீரைக்கு சமமாக இரும்புச்சத்து, தர்ப்பூசணியில் உள்ளது. இதனால் ரத்த விருத்திக்கு உதவுகிறது.
தர்ப்பூசணியில் பெரும்பாலும், சிவப்பு நிற சதைப்பற்றுள்ள பகுதியை மட்டுமே சாப்பிடுகிறோம். தோலை ஒட்டியுள்ள வெள்ளைப் பகுதியில் தான், 'சிட்ருலின்' என்ற சத்து அதிகம் உள்ளது. இது செல்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. இதனால், உடல் பருமன் குறைக்கப்படுகிறது.
இதயம், ரத்த குழாய் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தர்ப்பூசணி சிறந்தது; ரத்த குழாய்களை விரிவடையச் செய்து, இதயம் சீராக இயங்க உதவுகிறது.
இதில் உள்ள, 'லைகோடீன்' சத்து எலும்புகளை விரிவடையச் செய்யும்; ஆஸ்டியோ பிளாஸ்ட் மற்றும் ஆஸ்டியோ கிளாஸ்ட் போன்றவை உடல் சக்தியை ஒருங்கிணைத்து, எலும்பு உறுதியாக உதவுகிறது.
தமிழகத்தில், நியூ ஹாம்ஷ்யர், மிட்ஜெட், சுகர் பேபி, அஷாஹஜயமாடோ,பெரிய குளம் - 1, அர்கா, மானிக், அர்கா ராஜஹன்ஸ், துர்காபுரா மீதா, கேசர், அர்கா ஜோதி, பூசா பேதனா மற்றும் அம்ருத் என கலப்பின ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.