
வாய்வழி சுவாசம்!
சுவாசித்தல் என்பதும் கொரோனா தொற்றுக்கு பின், அவசரகால முக்கியத்துவம் பெற்று விட்டது. வாயால் சுவாசிப்பது தவறான நடைமுறை. சிலநேரம் வாய் திறந்தபடி துாங்குவர் குழந்தைகள். அப்போது, சுவாசம் வாய் வழியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்.
இதற்கான காரணங்களைப் பார்ப்போம்...
* சுவாச பாதையில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், மூக்கு வழி சுவாசிக்க சிரமம் ஏற்படும்
* சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும்போதும் சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்படும்.
இது போன்ற நேரங்களில், சுவாசிக்க வாயை உபயோகிப்பர் குழந்தைகள்.
சுவாசப்பாதையில், நாசிப்பகுதியை பிரிக்கும் குருத்து எலும்பு வலுவில்லாமல் இருந்தாலும், வாய்வழி சுவாசம் நடைபெற வாய்ப்பு உண்டு.
மூக்கின் வழியாக சுவாசிப்பதுதான் நல்லது. ஏனெனில் உள்ளிழுக்கப்படும் காற்றில் படிந்திருக்கும் துாசிகளை நாசிப் பகுதி நீக்கிவிடும்.
வாய்வழி சுவாசிக்கும்போது, துாசு, அழுக்கு, வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுக்கிருமிகள் நேரடியாக உள்ளிழுக்கப்படும். அதனால், சுவாச பாதையில் தொற்று ஏற்படக்கூடும்.
எப்போதாவது வாய்வழி சுவாசித்தால் பிரச்னை இல்லை. அடிக்கடி அவ்வாறு செய்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. மருத்துவரை அணுகி, தக்க ஆலோசனை பெற வேண்டும்.
குட்டிப்பூ!
சிறிய உருவத்திற்கு தனி சிறப்பு உண்டு. கடுகு, அதனினும் கோடான கோடி மடங்கு குட்டி உருவமான, 'அணு' மற்றும் சமையலில் பயன்படுத்தும், கிராம்பு எல்லாம் சிறியதில் சிறப்பு பெற்றவை.
கிராம்பில், கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், கால்ஷியம், பாஸ்பரஸ், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சத்துகள் உள்ளன.
கிராம்பு செடியின் மொட்டு, இலை மற்றும் தண்டிலிருந்து, எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில், ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பெரும்பாலும் உடலைத் துாண்டும் மருத்துவப் பொருளாக பயன்படுகிறது.
உடலில் ஏற்படும் வலிகளைப் போக்குகிறது. வயிற்றுப் பொருமல், வாயு தொல்லை போன்றவற்றை சரி செய்யும் மிகச்சிறந்த நிவாரணி.
உடல் வளர்ச்சிதை மாற்றத்தில் மிகவும் உதவும். உடல் சூட்டை சமப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை, கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக் கோளாறு நீங்கி புத்துணர்வு ஏற்படுகிறது.
சிறிது சமையல் உப்புடன், கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்த நிவாரணி. வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம், பல்வலியையும் கிராம்பு குணமாக்கும்.
உணவு வகைகளில் எல்லாரையும் கட்டிப் போடுவது பிரியாணி, பிரிஞ்சி. இவற்றில், சுவையை அதிகரிப்பது கிராம்பு தான்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

