
சிறுவாபுரியை ஆட்சி செய்தான் மன்னன் திவாகரன். அவனுக்கு, ஒரு பட்டு ஜமுக்காளம் கொடுத்தார் கடவுள். அதை விரித்தால், வானத்தில் பறக்கலாம். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
அதை பயன்படுத்தி, காலை சாப்பாட்டுக்கு துபாயில் இருப்பான்; மதிய உணவிற்கு, இந்தியா வருவான். அவனுக்கு இது பெரும் செருக்கை ஏற்படுத்தியது. தன்னை விட உயர்ந்தவர்கள் யாருமில்லை என பெருமையடிக்கத் துவங்கினான்.
ஒரு நாள் -
பட்டு ஜமுக்களத்தில் ஏறி, வானவீதியில் பறந்தான். வழியில் அடர்ந்த காட்டில் ஒரு புற்றைக் கண்டான். அங்கு சில எறும்புகள் பேசிக்கொண்டிருந்தன. அது அவன் காதில் விழுந்தது.
திவாகரனுக்கு எறும்புகளின் மொழி தெரியும்; அதனால் அப்படியே வானில் நின்று, எறும்புகள் பேசியதைக் கவனித்தான்.
ராணி எறும்பு, 'மன்னர் போகிறார்... அவரைப் பார்க்காதே... ஒளிந்துக் கொள்...' என்றது.
உடனே ஆண் எறும்பு புற்றில் மறைந்தது.
ஒன்றும் புரியாமல், 'எதற்காக அந்த எறும்பை ஒளிந்து கொள்ள சொல்கிறாய்...' என்றான் மன்னன்.
சிறிதும் தயக்கமின்றி, 'தங்களைப் பார்த்து, அகந்தையைக் கற்றுக் கொள்ள கூடாது என்பதற்காக தான்...' என்றது ராணி எறும்பு.
திகைத்தபடி, 'உன்னிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்...' என்றான் மன்னன்.
'நீங்கள் பேசுவது காதில் விழவில்லை... அருகே வாருங்கள்...'
இறங்கி வந்த மன்னனிடம், 'என்னால் கத்தி பேச முடியவில்லை; உங்கள் கையில் துாக்கி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்பதற்கு உரிய பதில் கூறுகிறேன்...' என்றது ராணி எறும்பு.
மன்னன் அதை கையில் துாக்கியபடி, 'என்னை விட உயர்ந்தவர்களை பார்த்து இருக்கிறாயா...' என்றான்.
'பார்த்திருக்கிறேன்...'
பதில் கூறியது ராணி எறும்பு.
'யார் அது...'
'நான் தான்...'
'என்ன... கிண்டலா...'
'இல்லை மன்னா... நீங்கள் தானே என்னை கையில் தாங்கி நிற்கிறீர்... இப்போது நான் உங்களை விட உயரமல்லவா...' என்றது ராணி எறும்பு.
தற்பெருமை தவறானது என உணர்ந்தான் மன்னன். செருக்கை விட்டொழித்தான்.
அரும்புகளே... எப்போதும் தற்பெருமை கொள்ளாதீர்... அடக்கமாக இருக்க பழகுங்கள்.

