
அன்புள்ள அம்மா...
என் வயது, 15; தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் சிறுவன். எனக்கு வாய்த்த அப்பா போல், எதிரிக்கு கூட அமைந்து விட கூடாது.
மாதம் ஒருமுறை சலுானுக்கு அழைத்துச் சென்று, பக்கத்தில் அமர்ந்து, 'சம்மர் கிராப்' அடிக்க சொல்வார். பண்டிகைகளுக்கு துணி மணியை அவர் தான் எடுப்பார்; தையற்காரரிடம் அழைத்துச் சென்று, 'தொள...தொள...' என அளவு எடுத்து, உடை தைக்க சொல்வார்.
தினமும் அதிகாலை, 5:30 மணிக்கு எழுப்பி, 1 மணி நேரம் படிக்க சொல்வார்; மாலையில், 1 மணி நேரம் விளையாடவிடுவார்; பின், 1 மணி நேரம் படிக்க சொல்வார்.
தினமும், 1 மணி நேரம், 'டிவி' பார்க்க அனுமதிப்பார்; போன் கிடையாது. கேட்டதற்கு, 'டிகிரி முடித்த பின் தான்...' என்று கூறி விட்டார். மிதிவண்டியில் பள்ளிக்கு சென்று வர கட்டளை இட்டுள்ளார்.
வாரம் ஒருமுறை, மட்டன், மீன் உணவு கிடைக்கும். மாதத்திற்கு ஒரு சினிமா பார்க்கலாம்! வழிச்செலவுக்கு, ஐந்து ரூபாய் தருவார்.
தினமும், செய்திதாள் வாசிக்க வேண்டும்; அதை உறுதி செய்யும் வகையில் சோதிப்பார்; விடுமுறை நாட்களில், கை, கால், நகம் வெட்ட வேண்டும். மாதம் ஒருமுறை, எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
இப்படி ஒரு சர்வாதிகாரிக்கு மகனாய் இருப்பது, நரக வேதனையாய் இருக்கிறது; என் தந்தையை திருத்த என்ன செய்யலாம் ஆன்டி. இந்த நரகத்திலிருந்து விடுபட நல்ல வழி சொல்லுங்கள்.
அன்பு மகனே...
உன் கடிதத்தை பார்த்ததும், வாய் விட்டு சிரித்து விட்டேன்; இந்த காலத்தில், இப்படி ஒரு அப்பாவா என வியப்பாக இருக்கிறது. அவரை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்.
இப்போதெல்லாம், 10 வயதுள்ளவன் கூட, அப்பா பேச்சை, துளிகூட கேட்பதில்லை. சலுானுக்கு போய், மாடர்ன் ஸ்டைலில் முடி வெட்டிக் கொள்கின்றனர். 5,000 ரூபாய் பணம் வாங்கி, இஷ்டத்துக்கு, ஜீன்ஸ், டி சர்ட்டுகள் எடுத்து குவிக்கின்றனர்!
சாயங்காலம் ஆகி விட்டால், ரிமோட், அப்பாவிடமிருந்து பறிக்கப்பட்டு விடும்; ஒட்டு மொத்த குடும்பமும், 10:00 மணி வரை சீரியல் பார்த்து அழும் நிகழ்வு, வீட்டுக்கு வீடு வாடிக்கையாகி விட்டது.
நகம் வெட்டவா, எண்ணெய் குளியலா... அதெல்லாம், மூச்!
இரண்டு வயது குழந்தை அலைபேசியில், 'ரைம்ஸ்' பார்த்து தான் உணவு உண்கிறது; பையனோ, பொண்ணோ, 10ம் வயதிலேயே இரட்டை, 'சிம்' கொண்ட அலைபேசியுடன் அலைகின்றனர்.
ஆன்லைனில் உலகப்படங்கள் பார்க்கின்றனர். ஆர்டர் செய்து, பிரியாணி தின்னாத நாளே இல்லை. கேட்கும் போதெல்லாம், 100, 200 ரூபாய் கொடுத்தாக வேண்டும்.
நகம் வளர்ப்பது பேஷன்; 16 வயதில், 1 லட்சம் ரூபாய், 'ஸ்போட்ஸ் பைக்' வைத்திருப்பது உலக கட்டாயம்!
இப்படியாக, இளைய தலைமுறையில் ஒரு பிரிவு சீரழிந்து நிற்கிறது.
பூனைக்கு மணி கட்டியுள்ளார் உன் தந்தை; அவரைப் போல் மன திடம் இன்று எல்லா தந்தையருக்கும் தேவை. 21 வயதில், சாதாரண அலைபேசி; 30 வயதில் ஸ்மார்ட் அலைபேசி வைத்து கொள்ளலாம் என ஆணித்தரமாக கூறும் திறன் வேண்டும்.
கட்டுப்பாடும், கண்டிப்பும் கசப்பான மருந்துகள்; ஆனால், எதிர்கால வாழ்க்கையை ஆரோக்கியமாக்கும்.
திருத்த வேண்டியது உன் தந்தையை அல்ல; உன்னை!
ராணுவ அதிகாரி போல் நடக்கும் உன் தந்தை செய்ய வேண்டியது என்ன தெரியுமா...
அவரது கண்டிப்புகளுக்கு பின் ஒளிந்திருக்கும் நியாயமான காரணங்களை, மகனுக்கு உரியமுறையில் தெரிவிக்க வேண்டும்.
கண்டிப்பில் சிறு சிறு சலுகைகளும் காட்டலாம்.
விடுமுறை நாளில், மூன்று மணி நேரம், 'டிவி' பார்க்க, மூன்று மணிநேரம் விளையாட அனுமதிக்கலாம்.
பண்டிகைக்கு துணி எடுக்கும் போது, மகன் அபிப்ராயத்தையும் கலந்தாலோசிக்கலாம். மகனுடன் நெகிழ்ச்சியான போக்கை கடைப்பிடிக்கலாம்; இனிமையான தகவல் தொடர்பை பேணலாம். நடைமுறை சிரமங்களை கேட்டறிந்து பரிகாரம் செய்யலாம்.
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே, நகைச்சுவை இழைந்தோட வேண்டும்; ஆண்டிற்கு இருமுறை மனைவி, மக்களை சுற்றுலா அழைத்து சென்றால், உறவு மேன்மை அடையும். 80 சதவீதம் கண்டிப்பு, 20 சதவீத சலுகை என்றிருந்தால், தந்தை - மகன் உறவில் அதிருப்தியை போக்கும்.
- அன்புடன், பிளாரன்ஸ்!

