
வலி தரும் வழி!
வலியை உணர முடியாவிட்டால் உடலில் என்ன நடக்கும்...
எங்காவது விழுந்து, கை, கால்கள் உடைந்தாலும் எதுவும் தெரியாது. மருத்துவ சிகிச்சையில் சதைப்பகுதியை தைக்கும் போது, வேதனை இருக்காது.
வலி என்பது உடல் பாதிப்பை அறிவிக்கும் ஏற்பாடு. வெளிக்காயம் ஏற்பட்டால் மட்டுமல்ல, உடலின் உள்ளே பிரச்னை என்றாலும், 'இதோ... இங்கே ஏதோ பிரச்னை' என்று உணர்த்தும் அற்புதம். உடனே என்னை கவனி என்ற எச்சரிக்கை.
வேதனையை உணர முடியாத நிலை ஏற்பட்டால், உடலின் இந்த எச்சரிக்கை கவனத்துக்கு வராது. பாதிப்பு கூடுதலாக பிரச்னையை ஏற்படுத்தும்.
உடலில் வேதனை ஏற்படுத்துவது காயமடைந்த பகுதி. அதை முறையாக பராமரித்து சிகிச்சை பெறவேண்டும். தவறினால், அதன்வழியாக நோய்க்கிருமிகள் நுழைந்து புதிய பாதிப்புகளை ஏற்படுத்தும். வலி உணர்வு இல்லை எனில், உடலில் தீக்காயம் ஏற்பட்டால் கூட, அறிந்து கொள்ள இயலாது.
விபத்தில் சிக்காமல் அன்றாடம் வேலை செய்ய உதவுவது வலியின் சக்தியாகும். உடலில் வேதனை, வலி உணர்வு இல்லையெனில் விபத்துகளுக்கு குறைவு இருக்காது.
வலியை உணரும் சக்தி பிறவியிலேயே சிலருக்கு இருப்பதில்லை. இது ஒரு வகை நோய். கடுமையாக அவஸ்தை தரும். இந்த நோயால் பாதிக்கப்படுவோருக்கு, வலியை உணர வைக்க சிகிச்சை முறைகள் உள்ளன.
சிகிச்சை பெற்றபின், சாதாரண மனிதர்கள் போல், வலியுடன் வலம் வருவர். வலிதான், நல்வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது.
ஒளிர்கிறேன்!
பேட்டரி தேவை இல்லை; மின்சாரத்தில், 'சார்ஜ்' செய்ய வேண்டாம். வெறுமனே கையில் எடுத்தால் போதும்... அபாரமாக ஒளிர்கிறது ஒரு, 'டார்ச்' விளக்கு. பிடித்திருப்பவரின் உடல் வெப்பம், தேவையான மின்சாரத்தை வழங்கும். ஆச்சரியமாக இருக்கிறதா...
உடல் இயக்கத்தில் மின்சாரம் உற்பத்தி ஆவதை, 15 வயதில் நிரூபித்தார், ஆன் மகோசின்ஸ்கி என்ற பெண்.
வட அமெரிக்க நாடான கனடாவில், மைக்கேல் பல்கலைக்கழக உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, 2014ல் கண்டுபிடித்தார்.
மனித உடல் இயக்கத்தில், மின்சார பல்பு ஒளிரும் என்பதை நிரூபித்தார். உடல் சக்தியால், 100 வாட்ஸ் திறனுள்ள மின் விளக்கை, ஒளிர செய்தார்.
இவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்து, பணப்பரிசு வழங்கியது கூகுள் நிறுவனம். அத்துடன், தென் அமெரிக்க நாடான ஈக்வெடார், கலப்பாகஸ் தீவுக்கு சுற்றுலா அழைத்து சென்று பாராட்டியது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

