
ஏழைக் குடும்பத்தில் பிறந்தான், அறிவுச்செல்வன்; பெயருக்கு ஏற்றபடி, மிகுந்த அறிவுடன் விளங்கினான். ௨௦ வயதிற்குள், சகல கலைகளையும் கற்று தேர்ந்தான்.
சித்தர் ஒருவரிடம், மந்திரங்கள் பல கற்றான். அதில், வானத்திலிருந்து ரத்தின கற்களை விழச் செய்யும் திறனும் ஒன்றாகும்.
எப்போதாவது, வானத்தில் குறிப்பிட்ட அமைப்பில் நட்சத்திரங்கள் அணிவகுக்கும்; அப்போது, அந்த மந்திரத்தை உச்சரித்தால், ரத்தினங்கள் மழைபோல் பொழியும்.
அந்த மந்திரத்தை போதித்து, 'இதை உச்சரிப்பதன் மூலம் பணக்காரனாக முயற்சிக்காதே; உழைப்பே உயர்வு தரும்; பேராசை அழிவைத்தான் தரும்...' என உபதேசித்தார் சித்தர்.
ஒருநாள் -
பக்கத்து நகரத்துக்கு புறப்பட்டான் அறிவுச்செல்வன்; அடர்ந்த காடு வழியே நடந்தான். நடுக்காட்டில் வழி மறித்தது பயங்கர திருடர் கும்பல். செய்வதறியாது திகைத்து நின்றவனிடம், 'கையில் வைத்திருக்கும் பணத்தை கொடு அல்லது உயிரை பறிப்போம்...' என மிரட்டியது கும்பல்.
பயத்தில் விழித்தான் அறிவுச்செல்வன்; தற்செயலாக வானத்தை நோக்கினான்; அபூர்வ நட்சத்திரங்கள் அணிவகுக்கும் அமைப்பு காணப்பட்டது.
மறுகணம் மந்திரத்தை உச்சரித்தான். ரத்தினங்கள் மழைத்துளி போல் விழுந்தன.
பரபரப்புடன் அவற்றை பொறுக்கியது திருடர் கும்பல்.
வியப்புடன் நோக்கிய கும்பல் தலைவன், 'இவனால் பயன் அதிகம்' என எண்ணியபடி, அறிவுச்செல்வனை கைதியாக பிடித்து வைத்துக் கொண்டான்.
அப்போது மற்றொரு கொள்ளைக்கும்பல் வந்தது. ரத்தினங்களை அபகரிப்பதில் இரண்டு கூட்டத்துக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. பயத்தில் நடுங்கிய அறிவுச்செல்வன், அடர்ந்த புதரில் ஒளிந்து கொண்டான்.
சண்டை உக்கிரமாகி, இரு கும்பலிலும் அனைவரும் மாண்டனர். பேராசை பேரழிவு ஏற்படுத்தியதை நேரடியாக அனுபவப்பூர்வமாக கண்டான் அறிவுச்செல்வன். அங்கிருந்த ரத்தினங்களை திரும்பி பார்க்காமல் வேகமாக நடந்தான்.
செல்லுாஸ்... பேராசை பெருநஷ்டம் என்பதை அறிந்து கொண்டீர்களா!
ஆ.சுந்தரம்

