
கனிவு மிக்க பிளாரன்ஸ்...
என் வயது, 28; நானும், என் கணவரும் தனியார் பணியில் இருக்கிறோம்; இரண்டு வயதில் மகன் இருக்கிறான். அவனுக்கு, மாறுகண் இருப்பதை, முதல் வயதில் கண்டுபிடித்தோம்.
தெருப்பையன்கள், 'ஒன்றரைக் கண் டோரியா... சென்னை பட்டினம் வாரியா...' என, கிண்டல் செய்கின்றனர். அண்டை வீட்டு பெண்களோ, 'மாறுகண் குழந்தை ராசியானது; அப்படியே விடு... இரண்டு பேருக்கும் அதிர்ஷ்டம் கொட்டப் போகுது...' என்கின்றனர்.
யார் என்ன சொன்னாலும், கவலை வாட்டுகிறது. என் மகனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நீங்க என்ன செய்ய வேண்டும். தக்க பதில் கூறுங்கள்!
அன்புள்ள அம்மா...
கவலைப்படும் அளவு இது பெரிய பாதிப்பு இல்லை. மாறுகண் குறைபாடை, 'கிராஸ் ஐஸ்' அல்லது 'ஸ்ட்ராபிஸ்மஸ்' என்பர். ஒரு கண் நேராகவும், இன்னொரு கண் உட்புறமாகவோ, வெளிப்புறமாகவோ, மேல்புறமாகவோ, கீழ்புறமாகவோ பார்க்கும் நிலை, மாறுகண் எனப்படும்.
சுருக்கமாக கூறுவதென்றால், இரு கண்களும் ஒரே நேரத்தில், ஒரே திசையில் பார்க்காது. இந்த நிலை தான் மாறுகண்.
நரம்புகள் காயப்பட்டாலோ, கண்களை கட்டுப்படுத்தும் தசைகள் செயல்படாமல் போனாலோ மாறுகண் பாதிப்பு வரும். இந்தியாவில் ஆண்டிற்கு, 1 கோடி குழந்தைகள், மாறுகண் பாதிப்புடன் பிறக்கின்றன.
இருகண் பார்வைகளையும் இணைத்து, பைனாகுலர் அல்லது முப்பரிமாண பார்வையை வழங்குவது மூளை. ஒவ்வொரு கண்ணையும், ஆறு தசைகள் கட்டுப்படுத்துகின்றன; இரு கண்களின், ஆறு ஆறு தசைகளும் இணைந்து செயல்பட்டால் மாறுகண் பிரச்னை வராது.
மாறுகண் குறைபாட்டில் பல வகைகள் உள்ளன.
அவை...
* துாரப்பார்வை மாறுகண்
* கிட்டப்பார்வை மாறுகண்
* மங்கல் பார்வை மாறுகண்.
முந்தைய தலைமுறையில் யாருக்காவது மாறுகண் இருந்தாலோ, குறைமாதத்தில் எடை குறைந்து பிறந்தாலோ, பெரு மூளைவாத நோய் தாக்கினாலோ, டவுன் சின்ட்ரோ என்ற பாதிப்புடன் பிறந்தாலோ மாறுகண் வர வாய்ப்பு உண்டு.
குழந்தைக்கு, ஏழு அல்லது எட்டு வயதாவதற்குள், இதைக் குணப்படுத்தி விட வேண்டும்; இல்லையென்றால் ஆயுளுக்கும் தொடரும்.
மாறுகண் என்பது ஒரு குறைபாடு; இதை கிண்டல் செய்வதும் தவறு; அதிர்ஷ்டம் என விட்டு விடுவதும் தவறு; அப்படியே விட்டால், கண்பார்வை சீர்கெடும்.
இதை குணப்படுத்த கீழ்க்கண்ட சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.
* ஆயுளுக்கும் மூக்கு கண்ணாடி அணிதல்
* அக்கல்ஷன் தெரபி தருவது
* போடெக்ஸ் ஊசி மருந்து செலுத்துதல்.
இந்த ஊசி கண்பகுதி தசைகளை நெகிழ்த்தி கருவிழிகளை கூர்மைபடுத்தும்; சிலவகை மாறுகண் பாதிப்புகளுக்கு மட்டும் தான், இந்தவகை சிகிச்சைகள் பலனளிக்கும்.
'அட்ரோபின்' என்ற சொட்டு மருந்தை பயன்படுத்தி, இரண்டு கண்களும் ஒரே மாதிரி இணைந்து செயல்படவும் வைக்கலாம்.
மாறுகண் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு, சிலவகை பயிற்சிகளை கொடுப்பர் மருத்துவர்; இதனாலும் சீர்பட வாய்ப்பு உண்டு.
இந்த பாதிப்பு நீங்க, இரண்டு வயதுக்குள் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வது நல்லது. ஒன்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம். கண் மருத்துவரை கலந்தாலோசித்து முடிவு செய்யவும்.
மகன் மாறுகண் பாதிப்பு பூரண குணமடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்!
- அன்புடன், பிளாரன்ஸ்.

