PUBLISHED ON : பிப் 12, 2022

கங்காரு தாவல்!வயிற்றில் பை உள்ள பாலுாட்டி வகை விலங்கு கங்காரு. ஆஸ்திரேலியா கண்டப்பகுதியே இதன் தாயகம். ஆஸ்திரேலிய தேசிய விமான நிறுவனத்தின் சின்னமாக உள்ளது. ஒரே தாவில், 13 மீட்டர் துாரத்தை தாண்டும் திறன் கொண்டது; ஆனால், பின்னோக்கி நகர இயலாது; நீந்தும் திறன் பெற்றது!முன்னங் கால்களை உயர்த்தி, பின்னங்கால்களை ஊன்றி அதிவேகமாக குதிக்கும். இது வேக ஓட்டமாக கருதப்படுகிறது. நான்கு கால்களையும், தரையில் ஊன்றி நகர்ந்தால் மெதுவாக நடப்பதாக கொள்ளலாம். வலுமிக்க வால் உண்டு. இது தத்தி குதிக்கும்போது, உடல் சமநிலை பேண உதவுகிறது.கங்காருவின் விருப்ப உணவு புல்; உண்டபின், ஆடு, மாடு போல அசை போடும். அபாயச் சூழலை உணர்ந்தால், கால்களை வேகமாக தரையில் தட்டி, சக கங்காருவை எச்சரிக்கும். வளர்ந்த ஆண் கங்காரு, 'பக்' என்றும், பெண், 'டோ' என்றும் அழைக்கப்படுகிறது. இளம் கங்காருவை, 'ஜோயி' என்பர். பிறக்கும்போது, 2 செ.மீ., நீளத்தில் சிறிய புழுப்போல் காணப்படும். பின், தாயின் வயிற்றுப்பகுதி பையில் வளரும். அதிலிருந்து வெளியே வர, ஒன்பது மாதங்கள் வரை ஆகும். பெண் கங்காரு ஒரே சமயத்தில், குட்டிகளை முன்று அடுக்கு முறையில் பராமரிக்கும். அதாவது, முதலில் பிறந்த குட்டி அவ்வப்போது வந்து பால் குடித்துச் செல்லும்; அடுத்து பிறந்த குட்டி, பையில் இருக்கும்; மூன்றாவது, கருவில் இருக்கும். இதனால், பெண் கங்காரு நிரந்தர கர்ப்பிணியாகவே காட்சி தரும். கங்காருவின் பொறுப்புணர்வை போற்றுவோம்.
ஏப்பமும் உண்மையும்!நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதன் தொடர்ச்சி தான், ஏப்பம். உணவுக் குழாயின் முடிவில் இருக்கும் சுருக்குத் தசை, உணவு உண்ணும்போது திறந்தும், பின் மூடியும் இருக்க வேண்டும்.அதிகமாக உணவு சாப்பிட்டால், சுருக்குத் தசை மூடாமல் இருக்கும். இதனால் ஜீரணத்தின் போது, வாயு உண்டாகும். இது ஏப்பமாக வெளிவரும். ஏப்பம் விட்டால், உணவு ஜீரணம் ஆகி விட்டதாக எண்ணுவது தவறு. அதிகமாக ஏப்பம் வந்தால், வயிறு உப்பி, உடல்நல பிரச்னை ஏற்பட்டுள்ளதாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஏப்பம் விடும் முன், சுற்றுப்புறக் காற்று உடலில் புகுவதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த காற்றில், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஏப்பமாக வெளியேறுகிறது. மீதி, வயிற்றுக்குள் தங்கி விடுகிறது. வயிறு உப்பும் பிரச்னைக்கு இதுதான் காரணம். ஏப்பத்தை தடுப்பது மிக எளிது; தேவையான உணவை, தேவையான அளவில், தேவையான போது சாப்பிட்டால் ஏப்பம் வர வாய்ப்பில்லை. உடலில் பிரச்னைகளும் ஏற்படாது.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
