தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : மார் 26, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாங்கி எழு தம்பி!

பிரபல கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய, 'துாங்காதே தம்பி துாங்காதே... நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே...' என்ற பாடலுக்கு ஏற்ப, எம்.ஜி.ஆரின் நடிப்பு, எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும்.

நாள் முழுதும் துாங்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்...

* மறுநாள் மிகுந்த அசதி ஏற்படும்

* எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது

* வாகனம் ஓட்டுபவர் எனில் விபத்தைச் சந்திக்க வேண்டிவரும்.

துாங்காமல், 36 மணி நேரம் தாண்டி விட்டால்...

* உடல் சோர்வு மிகுதியாக இருக்கும்

* மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும்

* கவனம் சிதறும்

* இரு புறமும் கவனித்து சாலையை கடப்பதில் குழப்பம் ஏற்படும்

* உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் நிலை தாறுமாறாகும்

* நினைத்ததை பேச முடியாது. எந்த வார்த்தை பேசுவது என குழப்பம் ஏற்படும்.

அப்படியே, 48 மணி நேரம் தூங்காமல் தவிர்த்தால் என்ன நடக்கும் என்பதையும் பார்த்து விடுவோம்...

இரண்டு நாட்கள் உறங்கவே இல்லை என்றால் பிரச்னை மேலும் அதிகமாகும். கண்கள் தளர்வடையும். எந்த வேலையும் செய்யவே முடியாது. உடலின் எதிர்ப்பு சக்கி குறைந்து விடும். அசதி அதிகரிக்கும்.

அப்படியே, 72 மணி நேரம் கடந்தும் துாங்காமல் கடந்தால்...

* நிற்கவே முடியாது

* கடும் கோபம் வரும்

* பார்க்காத காட்சிகளை பார்த்துக்கொண்டு இருப்பதாகத் தோன்றும்

* ரத்த அழுத்தம் உயர்ந்து இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும்

* உடலை இயக்கிக்கொண்டிருக்கும் ஹார்மோன் சுரப்பில் பிரச்னை ஏற்படும்

* மயக்க நிலைக்கு உடல் சென்று விடும். அப்படியே துாங்கி விட வேண்டியதுதான்.

உடல் ஆரோக்கியம் காக்க, தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் துாக்கம் அவசியம். ஒரு நாளில் ஐந்து மணி நேரமாவது துாங்க வேண்டும்: அதை ஒன்பது மணி நேரம் வரை நீடிக்கலாம். அதற்கு மேல் துாங்காமல் இருப்பது ஆரோக்கியம் தரும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ராண்டி கார்ட்னர். துாக்கம் தொடர்பாக இவர், 1963ல் ஓர் ஆய்வு மேற்கொண்டார். உறங்காமல் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிடும் வகையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது!

இதற்காக, 264 மணி நேரம் துாங்காமல் சோதனை மேற்கொண்டார். ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாக பல பிரச்னைகள் உயர்ந்து கொண்டே வந்தன. அவரை டாக்டர்கள் நன்கு பரிசோதித்தனர்.

அதிக நேரம் துாங்காமல் இருந்தவர் என்ற உலக சாதனைப் பட்டியலில் இவர் பெயர் இடம்பிடித்தது.

தொடர்ந்து பலரும் பல நாட்கள் துாக்கம் தவிர்த்து சாதனையை நிகழ்த்த முயன்றபோது, உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் நிர்வாகம் அதை ஏற்க முன்வரவில்லை. அந்த நிர்வாகம், 'துாங்காமல் இருந்து எந்த சாதனையையும் நிகழ்த்த வேண்டாம்' என கேட்டுக்கொண்டது.

உயிர் காக்கும் நாய்!

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, செனன் கடற்கரை பகுதியில், உயிர் காக்கும் பணியில் ஈடுபட்ட நாய், உலக புகழ் பெற்றுள்ளது. அதன் பெயர் பில்போ. வட அமெரிக்க நாடான கனடாவை பூர்வீகமாக கொண்டது.

நியூபவுண்ட் லேண்ட் என்ற இனத்தை சேர்ந்தது. கடலில் குளிப்போருக்கு ஆபத்து ஏற்பட்டால், தாவி சென்று உயிர் காக்கும் பணியை தயக்கமின்றி செய்து வந்தது.

மக்கள் அதிகம் நடமாடும் கடற்கரையை கண்காணிக்க, உயிர் பாதுகாவலர் என்ற, 'லைப் கார்டு' பணியிடம் உருவாக்கப்பட்டு உலகம் முழுதும் நடைமுறையில் உள்ளது. கடலில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு யாராவது சென்றால், விசிலடித்து எச்சரிப்பார் அந்த பணியில் இருப்பவர்; ஆபத்தில் சிக்கியிருந்தால் கவனித்து தாமதமின்றி மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்.

இங்கிலாந்து, செனன் கடற்கரையில், லைப் கார்டாக பணியாற்றியவர், ஸ்டீவ் ஜேம்ஸ். அவரது செல்ல நாய் தான், பில்போ. அதுவும், அவருடன் கடற்கரைக்கு வந்து செல்லும் பணியிலும் உதவியது; இதற்காக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.

ஒருமுறை கடலில் நீந்த முயன்று மூழ்கிய மூன்று பேர் உயிரை காப்பாற்றியது; இச்செய்தி, உலகம் முழுதும் பரவியதால், அந்த நாயைப் பார்ப்பதற்காகவே, செனன் கடற்கரைக்கு வர துவங்கினர் சுற்றுலா பயணியர்.

பில்போவின் குறும்பு நடை, ஓட்டம், நீச்சல் ஆகியவற்றை ரசித்தனர். கடற்கரைக்கு நாயுடன் வரக் கூடாது என, 2008ல் தடை விதித்திருந்தது அங்குள்ள உள்ளாட்சி அமைப்பு. பயணியரின் எதிர்ப்பு காரணமாக, பில்போவுக்கு மட்டும், வாரத்தில் இரண்டு நாட்கள் கடற்கரைக்கு வர, நிபந்தனையுடன் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு, கடற்கரையில் சுற்றுலா பயணியருக்கு பாதுகாப்பு தந்த பில்போ, 2015ல் உலகில் இருந்து விடைபெற்றது.

மீன் பிடிப்போர் இந்த வகை நாய்களை, பண்டை காலத்தில் பயன்படுத்தினர். இது நல்ல புத்தி கூர்மையுடன் செயல்படும். தண்ணீரில் விழுந்து தத்தளிப்போரை காப்பாற்றும் திறன் பெற்றது. குட்டியாக இருக்கும் போதே, உரிய பயிற்சி கொடுத்தால், எளிதில் கற்று அதன்படி செயல்படும்.

வணங்கா முடி!

ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் நாடான ஜியார்ஜியாவை சேர்ந்தவன், லோக்லான் சாம்பிள். பிறந்தபோது கருமை நிற தலைமுடியுடன் காணப்பட்டான்.

சில நாட்களிலே முடியின் நிறம் வெள்ளையானது. படியும் தன்மையும் மாறி சிலுப்பியபடி நிமிர்ந்து நின்றது. சீப்பால் சாய்த்து, ஒழுங்கு படுத்த முடியவில்லை. எவ்வளவு முயன்ற போதும் கம்பிபோல் நிமிர்ந்து நின்றது.

லோக்லானை, 'அன்காம்பபிள் கேர் சிண்ட்ரோம்' என்ற அபூர்வ நோய் தாக்கியிருப்பதாக கண்டறியப்பட்டது. வேறுவகையில் பிரச்னை தராத நோய் இது. சில ஆண்டுகள் தான் முடி இவ்வாறு நிமிர்ந்து நிற்கும்; பின், வணங்கி அனுசரணையாகும்.

உலகில், இதுவரை, 100க்கும் குறைவானவருக்கே இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி நோய் இருப்பதை, 1912ல் தான் கண்டறிந்தனர். ஆனால், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், 1845ல் வெளியான புத்தகத்தில், 'கம்பு போல் நிற்கும் முடி கொண்ட ஸ்டுரூவல் பீட்டர்' என இந்த நோயின் வர்ணனை குறிப்பு உள்ளது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us