PUBLISHED ON : மார் 26, 2022

அன்று ராமானுஜர் நினைவு தினம்!
பள்ளியில், 7ம் வகுப்பு பரபரப்புடன் இருந்தது. அந்த வகுப்புக்கு மாணவர் தலைவனை தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்துகொண்டிருந்தது.
மொத்தமுள்ள, 32 பேர் ஒருவனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கிருஷ்ணா, கிருபா என இருவர் போட்டியிட்டனர்.
தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே பிரசாரம் செய்து ஆதரவு கேட்டனர்.
வகுப்பு ஆசிரியர் வடிவேலனுக்கு, கிருஷ்ணா மேல் தான் நம்பிக்கை இருந்தது. அவன்தான் பெரும் பரபரப்புடன் செயல்பட்டு வந்தான்.
கிருபாவோ, பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. வழக்கம் போல் மட்டைப் பந்து விளையாடி கொண்டிருந்தான்.
வகுப்பு தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன மாற்றங்கள் செய்வேன் என்று, வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தான், கிருஷ்ணா.
அதை அமைதியாக பார்த்தபடி நகர்ந்து விடுவான் கிருபா.
ஒரு வழியாக தேர்தல் நாள் வந்தது.
பார்வையாளராக வந்திருந்தார் உதவி தலைமையாசிரியர்.
பதிவான ஓட்டுகளை, எண்ணும் பொறுப்பை ஏற்றிருந்தார், கணித ஆசிரியர்.
மாணவர்கள் முன்னிலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
மொத்தமுள்ள, 32 பேரில் ஒருவன் வரவில்லை.
ஒரு ஓட்டுச் சீட்டில், இரண்டு பேருக்கும் முத்திரை விழுந்திருந்ததால் அது செல்லாத ஓட்டானது; தேர்தலில் போட்டியிட்ட இரண்டு பேருக்கும் ஓட்டு இல்லை. எனவே, மொத்த ஓட்டுகளே 28 தான்.
முடிவு அறிவிக்கப்பட்டது.
கிருஷ்ணாவுக்கு, எட்டு ஓட்டுகள்.
கிருபாவுக்கு, 20 ஓட்டுகள்.
வகுப்பு ஆசிரியரால், இதை நம்ப முடியவில்லை. புரியாமல் தவித்தவர், மறு ஓட்டு எண்ணிக்கை கோர எண்ணினார். ஆனால், 12 ஓட்டுகள் கூடுதலாக உள்ள நிலையில், அப்படி கேட்பது அபத்தம் என புரிந்தது.
முடிவை கரகோஷம் எழுப்பி வரவேற்றனர் மாணவர்கள்.
தோல்வியடைந்த கிருஷ்ணாவின் முகம் சுருங்கிப்போய்விட்டது.
வகுப்புத் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிருபா, ''நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த, நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி...'' என்றான்.
பின் வகுப்பு ஆசிரியரை சந்தித்து, ''சில நிர்வாக காரணங்களுக்காக எனக்கு சில செயலர்களை நியமித்து கொள்ள அனுமதியுங்கள் ஐயா...'' என கேட்டான்.
''தாராளமாக...''
''முதலில், வகுப்பு துணை தலைவராக டேவிட்டை நியமிக்கிறேன்; நான், விடுமுறை எடுக்கும் நாளில் இவரே தலைவராக செயல்படுவார்...''
கை தட்டல் ஒலிக்க, டேவிட் எழுந்து கூச்சமாக நின்றான்.
கிருபா தொடர்ந்தான்.
''எப்போதும் பளிச்சென்று இருக்கும் பரந்தாமனை, சுகாதார துறை செயலராக நியமிக்கிறேன்; இனி வகுப்பறையை துாய்மையாக வைப்பது அவன் பொறுப்பு...''
மாணவர்கள் கைதட்டினர்.
புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தார் வகுப்பு ஆசிரியர்.
''பேச்சில் சாமார்த்தியசாலியான, சொக்கலிங்கத்தை வெளியுறவுத்துறை செயலராக நியமிக்கிறேன்...''
சிரிப்பை அடக்கியபடி, ''ஓஹோ... இவருக்கென்ன வேலையோ...'' என்றார் உதவி தலைமையாசிரியர்.
''இவர் தான், நம் வகுப்பிற்கும், அக்கம்பக்கத்து வகுப்புகளுக்கும் இடையே, எந்த பகையும் வராமல் நட்புறவை பேணுவார்...''
''அட தேவை தான். அப்புறம்...''
''எப்போதும் முதல் மதிப்பெண் வாங்கும் பிரபாகரனை, கல்வி செயலராக நியமிக்கிறேன்; படிப்பில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து, சிறப்பு கவனம் செலுத்தி, நல்ல மதிப்பெண் வாங்க வைப்பது அவன் கடமை...''
''அது சரி... அடுத்தது யார்...'' என்றார் வகுப்பு ஆசிரியர்.
''விளையாட்டில், கண்ணும் கருத்துமாக, எப்போதும் மைதானத்திலேயே சுற்றி கொண்டிருக்கும் ரபீக்கிற்கு, விளையாட்டு செயலராக பதவி...''
''போதும் போதும்... எல்லாருக்கும், வேலைகளை பிரித்து தந்து விட்டால், உன் பணி என்ன...'' என்றார் உதவி தலைமையாசிரியர்.
''கடைசியாக ஒன்று மட்டும் ஐயா... இவர்கள் அனைவரும் தலா இரு மாணவர்களை உதவியாளராக வைத்துக் கொள்ளலாம்...''
பொறுப்பு பெற்று எழுந்து நின்ற மாணவர்கள் தலைகளை எண்ணினார், வகுப்பு ஆசிரியர்.
''திறமைசாலி தான்; ஓட்டுப்போட்ட அனைவருக்கும் பதவி தந்துவிட்டான்...''
சிரித்தார் கணித ஆசிரியர்.
''அவன் கணக்கே வேறு விதம்...'' உதவி தலைமையாசிரியர் குறுக்கிட்டார்.
''கெட்டிக்காரன் இவன்... ஓட்டுப் போட்டால், பதவி தருவேன் என்று, வாக்குறுதி கொடுத்து ஜெயித்திருக்கிறான். எண்ணி பாருங்கள் அவன் ஓட்டுக் கணக்கு சரியாக வரும்... யாரப்பா நீ... உன் அப்பா, என்ன செய்கிறார்...'' என்றார் வகுப்பு ஆசிரியர்.
சிரித்தபடி, ''அவர் பெயர், ராஜாமணி; எங்கள் பகுதி கவுன்சிலராக இருக்கிறார்; பிரபல அரசியல் கட்சியின் வட்ட செயலர்...'' என்றான் கிருபா.
''அடேங்கப்பா... பெரியவனாகி விட்டால், உன் அப்பாவையே, துாக்கி சாப்பிட்டு விடுவாய்...''
ஆசிரியர் கூறியதும் எல்லாரும் சிரித்தனர்.
குழந்தைகளே... நிர்வாகத்தில் நல்ல பயிற்சி பெற்றால் வாழ்க்கை வளமாக உயரும்.
நித்யா நாகராஜ்
