
சிரிப்பு உலகின் சிகரம் மிஸ்டர் பீன்!
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், விவசாயக் குடும்பம் ஒன்றில் ஜன., 6, 1955ல் பிறந்தார் ரோவான்; முழுப்பெயர், ரோவான் செபாஸ்டின் அட்கின்சன். பிரபல சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளின் ரசிகனாக இருந்தார்.
இங்கிலாந்து, நியூசாஸின் அப்பான்டைன் நகர பள்ளியில் ஓடி, ஆடி விளையாடி கொண்டிருந்தனர் மாணவர்கள்; அதில், ரோவான் மட்டும் தனித்து அமர்ந்திருந்தார். சிரிப்பு மூட்டுவதில் ஆர்வமுள்ள அவருக்கு திக்குவாய் பாதிப்பு இருந்தது. தெளிவற்ற பேச்சை, சக மாணவர்கள் கிண்டலடிப்பர்; இதனால், யாருடனும் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்தார்.
படிப்பில், கெட்டிக் காரனில்லை என்றாலும், பள்ளி நிகழ்ச்சிகளில் பிரமாதமாக நடித்து காட்டுவார். பள்ளிப்படிப்பு முடித்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக கல்லுாரியில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்ட படிப்பை முடித்தார்.
கல்லுாரியில் படித்த போதே, 'டிவி' நிகழ்ச்சியில், நடிக்க வாய்ப்பு தேடினார்; வசனம் பேசுவதில் திக்கி திணறியதால் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
கேலி, கிண்டல் பரிசாக கிடைத்தது; நடிப்பு திறனை வெளிப்படுத்த உரிய நேரம் வரும் என, மனந்தளராமல் காத்திருந்தார் ரோவான். குறை, நிறைகளை பட்டியலிட்டு தெளிந்தார். சரியாக பேசத்தான் வராது; உடலை கோணி, நடித்து ஈர்க்க முடியும் என நம்பினார்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்ணாடி முன் நின்று நடிக்க பயிற்சி செய்தார். வசனம் இன்றி முக பாவம், உடல் அசைவால், பார்வையாளரை சிரிக்க வைக்க முடியும் என்ற மன உறுதி ஏற்பட்டது. அதன் பலனாக, பி.பி.சி., ரேடியோவில், நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு கிட்டியது. அது, பெரும் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவை வெற்றி பெற்றன; எல்லாரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்; பெயரும் பிரபலமானது.
அவர் ஏற்று நடித்த ஒரு கதாப்பாத்திரம் பற்றி, சிலரிடம் கருத்து கேட்டார்; அதை, 'டிவி' நிகழ்ச்சியாகவே நடத்தினார். அதற்கு, 'மிஸ்டர் ஒயிட்' என பெயர் சூட்ட தீர்மானித்தவர், பின், 'மிஸ்டர் காலிபிளவர்' என மாற்றினார். அந்த பெயரும் பிடிக்காமல் போகவே, 'மிஸ்டர் பீன்' என்ற பெயரில் தயாரித்தார்.
இங்கிலாந்து, லண்டன், தேம்ஸ் டெலிவிஷன், 1990ல் இதை ஒளிப்பரப்பியது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வசனம் இல்லாமல், முக பாவனை மற்றும் உடல் அசைவால், வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியும் என நிரூபித்தார். அவர் ஏற்ற, மிஸ்டர் பீன் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
குழந்தை முதல், பெரியவர் வரை அந்த நடிப்பை கொண்டாடினர். நிகழ்ச்சி மற்ற நாட்டு தொலைகாட்சிகளிலும் ஒளிப்பரப்பானது; வசனம் இல்லாததால், மொழிக்கு வேலையில்லை. உலகம் முழுதும், மிஸ்டர் பீன் தமாசு நிகழ்ச்சி பிரபலமானது.
அதே பெயரில், திரைப்படம், அனிமேஷன் படங்கள், கார்ட்டூன்கள், வீடியோ விளையாட்டு என, வெளியாகி சக்கைப்போடு போட்டன. ரோவானுக்கு, உலகமெங்கும் ரசிகர் எண்ணிக்கை பெருகியது.
அமெரிக்க திரைப்பட தயாரிப்பு நிறுவனமான, வால்ட் டிஸ்னி தயாரித்த, 'லயன் கிங்' கார்ட்டூன் படத்தில் குரல் கொடுத்தார், ரோவான். இதுவும் அவரது புகழை உச்சிக்கு கொண்டு சென்றது.
ரோவான் மனைவி பெயர் சுனேத்ரா சாஸ்த்ரி; இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர்களுக்கு, பெஞ்சமின், லில்லி என்ற குழந்தைகள் உள்ளனர். பின், நடிகை லுாயிஸ் போர்ட் என்பவரை, இரண்டாம் திருமணம் செய்தார்.
உலக அளவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்கள் பற்றிய தரவரிசைக்கான கருத்து கணிப்பு, 2005ல் நடந்தது. இந்த கணிப்பில், எல்லா காலத்திலும் சிறந்த, 50 நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக அதிக ஓட்டுப்பெற்றிருந்தார், ரோவான்.
கார் ஓட்டும் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடும், ஆர்வமும் கொண்டவர் ரோவான். உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.தன்னம்பிக்கை, தளராத முயற்சியால் இந்த தகுதியை அடைந்துள்ளார். திக்குவாய் என்ற குறைபாட்டையே, முன்னேற்றத்துக்கு அடித்தளமாக மாற்றி கொண்டார் நடிகர் ரோவான்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.