
ராஜா கேல்கர் மியூசியம்!
மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் அமைந்துள்ளது, ராஜா தினகர் கேல்கர் அருங்காட்சியகம். சுற்றுலா பயணியரை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது. இது உருவான கதை மிகவும் சுவாரசியமானது. அது பற்றி பார்ப்போம்...
செல்வந்தரும் எழுத்தாளருமான கேல்கர், குடும்பத்துடன் புனே நகரில் வசித்து வந்தார். திடீரென உடல் நலம் குன்றி அவரது மகன் இறந்தான். பெரும் சோகத்தில் மூழ்கிய கேல்கர், மீள வழி தெரியாமல் தவித்தார். இந்த நிலையில் கலைப் பொருட்களை சேகரிக்க ஆரம்பித்தார். அது சோகத்தை கரைத்தது.
வரலாற்று பழமையான பொருட்களை மட்டும் இன்றி, புழக்கத்தில் இருந்த பொருட்களையும் தேடி சேகரிக்க துவங்கினார். எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க தயங்கவில்லை. சேகரிப்பு துவங்கிய, 1920 முதல், 40 ஆண்டுகளில், 20 ஆயிரம் கலைப் பொருட்கள் சேர்ந்தன. இந்த முயற்சிக்கு அவரது மனைவியும் பெரும் ஒத்துழைப்பு கொடுத்து வந்தார்.
முதுமையடைந்த கேல்கர், சேகரித்த கலைப் பொருட்களை மகாராஷ்டிரா மாநில அரசிடம் ஒப்படைத்தார். புனே நகரில் அழகிய மூன்று மாடி கட்டடத்தில் அருங்காட்சியகம் அமைத்து, அந்த கலைப் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளது அரசு.
மொகலாயர் கட்டட கலைப் பாணியில் அரண்மனை போல் விளங்குகிறது இந்த அருங்காட்சியகம். இதற்கு, ராஜா தினகர் கேல்கர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன் முதல் தளத்தில், 17 மற்றும் 18ம் நுாற்றாண்டை சேர்ந்த, கலை பொருட்கள், ஒன்பது கேலரிகளில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இதில், ஆடை, ஆபரணம், இசைக் கருவி, எண்ணெய் விளக்கு, நடன, நாட்டியச் சிற்பம் என பல வகை பொருட்கள் உள்ளன.
இந்தியாவின் பல பகுதிகளில் நடக்கும் திருமணங்கள் மற்றும் விழாக்களில் பயன்படுத்தும் சமையல் சாதனங்கள், அரிவாள்மனை, காய்கறி நறுக்கும் கத்திகள், மாவாட்டும் உரல்கள் காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் தளத்தில், பேனா மற்றும் எழுதுப் பொருட்கள், விலங்கு, பறவைகளின் பதப்படுத்திய உடல்கள், கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளன. மரத்திலேறியபடி கோபியரோடு கண்ணனின் விளையாட்டு காட்சிகள், நேபாள வண்ண விளக்குகள், குஜராத் ஆடைகள் எழிலாக வைக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் தளத்தில், வித விதமான பொம்மைகள், வித்தியாசமான ராஜஸ்தான் மண் பாண்டங்கள், கண்ணாடி பொருட்கள், மாட்டு வண்டி, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் கிடைத்த புராதன ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கலைநயமிக்க நடராஜர் சிலை, விதவிதமான பாக்கு வெட்டிகள், பழங்கால மைபுட்டி, அலங்கார தட்டுகள், ஹீக்கா, எண்ணெய் விளக்குகள், அலங்கார பெட்டிகள், போர் ஆயுதங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்கின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இவற்றை காண வருகின்றனர். அரசு விடுமுறை நாட்கள் தவிர, தினமும் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை அருங்காட்சியகம் திறந்திருக்கும்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு

