PUBLISHED ON : ஜூன் 18, 2022

உடலுக்கு இரும்புச் சத்து கிடைக்க, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு, பேரீச்சம் பழம். இது, உள் உறுப்புகளை மட்டுமல்ல, சருமத்தையும் பாதுகாக்கும்.
அற்புத பலன் தரும் பேரீச்சம் பழத்தின் சிறப்புகளை பார்ப்போம்...
இரண்டு பேரீச்சம் பழத்தை தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும். அந்த விழுதுடன், ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து, முகத்தில் தடவுங்கள். சூரியன் உதிப்பது போல் முகம் பிரகாசமாகும். வாரம், இரண்டு முறை இதை செய்யலாம்.
நோய் பாதித்தவருக்கு முகம் பொலிவிழந்து காணப்படும். அந்த வாட்டம் போக்க...
பேரீச்சம் பழம் - மூன்று, வெள்ளரி காய் ஜூஸ், கேரட் ஜூஸ் - அரை கப், புதினா சாறு, எலுமிச்சை சாறு - தலா இரண்டு தேக்கரண்டி எடுக்கவும். இவற்றை கலந்து, விழுதாக அரைக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி, நன்கு மசாஜ் செய்து கழுவவும். தினமும், இப்படி செய்து வர முகம் புதுப்பொலிவு பெறும்.
சிலருக்கு, 40 வயதுக்கு மேல் முகம் வெளிறி, கண்களை சுற்றி கருவளையம் விழுந்து, முகமெல்லாம் திட்டுகளாக காணப்படும்.
இந்த திட்டுகள் மறைய...
பேரீச்சம் பழங்களை முதல் நாள் இரவே, தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள், அந்த தண்ணீரில், முல்தானி மெட்டி பவுடர் ஒரு தேக்கரண்டி கலந்து, முகத்தில் பூசவும். கண்ணை சுற்றியுள்ள கருவளையம், திட்டுகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.
வாய் துர்நாற்றம் போக்க...
இரண்டு பேரீச்சம் பழத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைக்கவும்; இந்த தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும். பற்கள் மின்னுவதுடன், சுவாசப் புத்துணர்வும் கிடைக்கும்.
இமை அடர்த்தியாக...
பேரீச்சம் பழம் ஊற வைத்த தண்ணீருடன், ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் கலந்து, புருவம், இமைகளில் தடவவும். அடிக்கடி செய்து வர இமைகள் அடர்த்தியாகி, கண்கள் பொலிவு பெறும்.

