
'எல்லாம் தெரியும்' என்பது போல் நடிப்பான் தாமோதரன். அப்படியே நடந்தும் கொள்வான். யார் எதை கூறினாலும், 'ஓ... அதுதான், எனக்கு தெரியுமே...' என்று அளப்பான்.
நல்லவர்களை சீண்டுவான். ஒதுங்கி போனாலும் வலிய வம்புக்கு இழுப்பான். அதனால், அவனிடம் எவரும் நட்பு கொள்ள மாட்டர். பெரியவர்கள் பலமுறை அறிவுரை கூறியும், மாறவே இல்லை தாமோதரன்.
ஞானி ஒருவர் அந்த கிராமத்துக்கு வந்தார்.
தாமோதரனுக்கு புத்தி புகட்ட அவரைக் கேட்டுக் கொண்டனர் பெரியவர்கள்.
அன்று, ஞானியை பார்க்க வந்தான் தாமோதரன்.
'உனக்கு, எல்லாம் தெரியுமாமே... கேள்விப்பட்டேன்...' என்றார் ஞானி.
'ஆமாம்... எல்லாம் அறிவேன்...'
இறுமாப்புடன் கூறினான். கூடியிருந்தவர்கள் துணுக்குற்றனர்.
'அப்படியானால் உன்னிடம் நிறைய தெரிந்து கொள்ள விரும்புகிறேன்... நீ மட்டும், தனியாக காலை, 9:00 மணியளவில், ஆற்றங்கரையில் உள்ள பிள்ளையார் கோவில் வருகிறாயா...' என்றார் ஞானி.
வருவதாக உறுதி அளித்தான் தாமோதரன்.
'மீண்டும் சொல்கிறேன்... நீ மட்டும் தான், வர வேண்டும்; அப்படி தனியாக உன்னால் வரவே முடியாது...' என்றார் ஞானி.
சிரித்தவாறு, 'அதையும், பார்த்து விடலாமே...' என துள்ளல் நடையில் வெளியேறினான்.
மறுநாள் -
ஆற்றங்கரை பிள்ளையார் கோவில் அருகில் கூடி நின்றனர் கிராம மக்கள். ஞானியின் அடுத்த கட்ட நடவடிக்கையை அறியும் ஆவல் கொண்டிருந்தனர்.
கிண்டலாக, 'தனியாக வர இயலாது என்று கூறினீரே; இதோ, தனியாக வந்திருக்கிறேன் பாருங்கள்...' என்றான் தாமோதரன்.
'மிக்க மகிழ்ச்சி... நீ, தனியாகவா வந்தாய்... அப்படி தெரியவில்லையே; உனக்கு பின், ஒருவன் இருக்கிறானே...' என்றார் ஞானி.
பெரிதாக சிரித்து, 'நான் மட்டுமே வந்துள்ளேன்; கூட யாரும் வரவில்லையே...' என, திரும்பி பார்த்தான்.
'இப்போது சொல்; உண்மையில் உன் கூட, யாருமே வரவில்லையா...'
'ஆமாம்... யாருமே வரவில்லை...'
'திரும்பி பார்; நிழல் தெரிகிறது இல்லையா; அது, உன் கூட தானே வந்தது; அப்படியிருக்க, எப்படி நீ தனியாக வந்ததாய் சொல்கிறாய்...' என்றார்.
அவரது தத்துவ பேச்சை கேட்டதும், தலை குனிந்தான் தாமோதரன்.
'மன்னித்து விடுங்கள் ஞானி... என் கர்வம் ஒழிந்தது...'
பாதங்களில் விழுந்து வணங்கினான் தாமோதரன்.
மகிழ்ச்சி தெரிவித்தனர் கிராம மக்கள்.
இளந்தளிர்களே... கற்றது கை மண்ணளவு என்பதை மறந்து, கர்வம் கொள்ளக்கூடாது.
என்.கிருஷ்ண மூர்த்தி

