
அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டி...
என் வயது, 16; பிளஸ் 1 படிக்கும் மாணவி. உலக அறிவை வளர்த்துக் கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். அத்துடன், நாடு, கண்டங்கள் தாண்டி, உலக மக்கள் அனைவருடன், கை குலுக்கி வாழ ஆசைப்படுகிறேன். ஒரு உலக குடிமகளாக மாற விரும்புகிறேன்.
என் நோக்கத்தின் ஒரு பகுதியாக, முகநுாலில் கணக்கு துவங்க வேண்டும். அது குறித்து, நல்ல அறிவுரைகளை தாருங்கள் ஆன்டி...
- இப்படிக்கு,
ச.யாஷிதா.
அன்பு மகளுக்கு...
உலக பிரஜையாகும் உன் உயரிய எண்ணத்தை முதலில் பாராட்டுகிறேன். உலகமே கிராமமாக சுருங்கி வரும் நிலையில் உள்ளது. தகவல் புரட்சியின் உச்சத்தில், நாடுகளின் எல்லை கோடுகள் சுக்கு நுாறாவது சாத்தியமாகியுள்ளது!
உன் தந்தை, அலைபேசி கருவி வாங்கி கொடுத்திருப்பார் என, யூகிக்கிறேன். அதில் உள்ள செயலியை பயன்படுத்தி முகநுாலில், 13 வயதுக்கு மேற்பட்டோர் கணக்கு துவங்கலாம்.
முகநுாலின் தாய் நிறுவனத்திற்கு, 'மெட்டா' என, புதுப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலகம் முழுதும், 285 கோடி பேர் முகநுாலில் கணக்கு வைத்துள்ளதாக புள்ளி விபரம் கூறுகிறது.
நீயும் கணக்கு துவங்க முதலில், கூகுள் பிளே ஸ்டோரில், முகநுால் செயலியை தேடி, அலைபேசியில் பதிவிறக்கம் செய்.
அதில், முகநுால் சின்னத்தை காண்பாய்; அதை தேர்ந்தெடுத்து, கேட்கும் விபரங்களை நிரப்பவும். முதல் பெயர், கடைசி பெயர், அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி, கடவு சொல், பிறந்த தேதி, பாலினம் அடங்கிய சுயவிபரங்களை நிரப்ப வேண்டும்.
முகநுால் கணக்கில், உன் புகைப்படம் போடாதே... அதற்கு பதில், ஏதாவது பூவின் படத்தைப் போடு. கடவுச் சொல்லை மிக ரகசியமாக வைத்துக் கொள். முகநுாலில் உன் பதிவுகளை ஆங்கிலத்திலோ, தமிழிலோ போடலாம். அந்த பதிவுகளை பிடித்தோர், விருப்ப குறியீடு இடுவர். நல்லதாகவோ, கெட்டதாகவோ விமர்சனங்கள் செய்வர்.
உன் பதிவு மிகவும் பிடித்து போனால் பகிர்வர்; உன் முகநுால் நட்பு வட்டத்தில் அதிக பட்சம், 5,000 பேர் மட்டுமே இருக்க முடியும். உன் நண்பர்கள், பதிவுகளுடன் உன்னை கொக்கி போடுவர். உன்னுடைய பதிவுகளையும், உன் முகநுால் நண்பர்களுடன், 'டேக்' எனப்படும் கொக்கி போடலாம்.
விமர்சனங்களுக்கு பதில், 'இமோஜி' எனப்படும் விருப்ப குறியீடுகளை பதியலாம். மொத்தம், 3,633 விருப்ப குறியீடுகள் உள்ளன. முகநுால் பதிவுகள் நாகரிகமாய் இருக்க வேண்டும். மத துவேஷத்தை துாண்டக்கூடாது. குழந்தைகளை இழிவுபடுத்தல் கூடவே கூடாது.
கண்ணியக்குறைவாய் பதிவிட்டால், சட்டப்படி சிறை தண்டனை கிடைக்கும். கணக்கை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ முடக்கி விடுவர். முகநுால் சிறை தண்டனை என்பது, 24 மணி நேரத்திலிருந்து, 30 நாள் வரை முடக்குவதாகும். எனவே, மிகவும் கவனமாக செயல்படு.
முகநுால் என்பது, ஒரு ஆபத்தான விளையாட்டு. மிக சரியாக பயன்படுத்தினால், ஆயிரம் நன்மைகள் விளையும். தவறாக பயன்படுத்தினால், வெடிகுண்டு போல் வெடித்து சிதறடிக்கும்.
என் பால்ய கால சினேகிதியை முகநுாலில் தான் கண்டுபிடித்திருக்கிறேன்.
என் தாழ்மையான வேண்டுகோள் என்ன தெரியுமா...
மகளே... இப்போது முகநுாலில் சேராதே. 25 வயது முடியட்டும். படித்து வேலை தேடி, திருமணம் செய்த பின் சேரலாம். தற்சமயம், முழு கவனத்தையும் படிப்பின் பக்கம் திருப்பு! முகநுால் வழி நடக்கும் பல தவறான செயல்களுக்கு இரையாகாதே.
எதிர்காலம் கவனச்சிதறல் இல்லாமல் சிறக்க வாழ்த்துகள்!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

