
சிப்கோ இயக்கம்!
மரங்களை காக்கும் போராட்டத்துக்கு வித்திட்டவர், சுந்தர்லால் பகுகுணா. உத்தரகாண்ட் மாநிலம், மரடோ கிராமத்தில், ஜனவரி 9, 1927ல் பிறந்தார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். திருமணத்திற்கு பின் அரசியலில் இருந்து விலகினார்.
பூமி தான இயக்க தலைவர் வினோபா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 1960 முதல் மீண்டும் அரசியலில் ஈடுபட்டார். மகிளா மண்டல் என்ற பெண்கள் அமைப்பை நிறுவி, மதுவிலக்கு கோரி போராடினார். தீண்டாமை, ஜாதி வேறுபாட்டுக்கு எதிராக பிரசாரங்களில் ஈடுபட்டார்.
பாரம்பரிய விதைகளை பாதுகாக்க, 'பீஜ் பச்சோ அந்தோலன்' என்ற அமைப்பை நிறுவினார். பசுமைப்புரட்சியின் போது அளவுக்கதிகமாக ரசாயன உரம் பயன்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக போராடினார். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தார். இதை பரப்ப இமயமலை பகுதியில், 20 ஆயிரம் கி.மீ., நடை பயணம் மேற்கொண்டார்.
உத்தரகாண்ட் மாநிலம் இயற்கை எழில் நிறைந்தது. அங்கு மரங்கள் வணிக நோக்கில் வெட்டி அழிக்கப்பட்டதால் வெள்ள பாதிப்பும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மரம் வெட்டும் உரிமையை வழங்கியிருந்தது மாநில அரசு. அதை எதிர்த்து உருவானதுதான், சிப்கோ இயக்கம்.
ஹிந்தியில், 'சிப்கோ' என்ற சொல்லுக்கு, 'கட்டி அணைத்தல்' என பொருள்.
உத்தரகாண்ட் மாநிலம், ரேனி கிராமத்தை, மார்ச் 24, 1974ல் மரம் வெட்டும் உரிமை பெற்றிருந்த நிறுவன ஊழியர்கள் சூழ்ந்தனர். மரங்களை கட்டியணைத்தபடி, வெட்ட விடாமல் தடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர் பெண்கள்; மரங்களுக்காக, உயிரையும் தர முன்வந்தனர்.
இது பெரும் போராட்டமானது. மரம் வெட்ட உரிமை பெற்ற நிறுவனம் செய்வதறியாது திகைத்தது.
மலை கிராமங்களில் மரங்களைப் பாதுகாக்க பெண்கள் படை அமைக்கப்பட்டது. அதில் இணைந்து போராடியவர்களை, 'லேடி டார்ஜான்' என பத்திரிகைகள் வர்ணித்தன. வீரத்துடன் போராடிய பெண்கள், ஒரு மரத்தைக்கூட வெட்ட அனுமதிக்கவில்லை. இதை வழி நடத்தியது சிப்கோ இயக்கம்.
காட்டு வளத்தைப் பயன்படுத்த கிராமப்புறப் பெண்களுக்கு இந்த இயக்கம் பயிற்சி அளித்தது. வாழ்க்கைத் தரம் உயர வழி காட்டியது.
இந்த இயக்கம் தான், சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை இந்தியாவில் பரப்பியது. இதை வழிநடத்தினார் சுந்தர்லால் பகுகுணா. மக்கள் ஆதரவை திரட்ட காஷ்மீர் முதல் நாகாலாந்து மாநிலம் கோஹிமா வரை, 4,870 கி.மீ., நடைபயணம் மேற்கொண்டார். இதனால் ஆதரவு பெருகியது.
இறுதியில் மரங்களை வெட்டுவதில்லை என உறுதியளித்தது அரசு. பகுகுணாவை அழைத்து, இது குறித்து பேசினார் அப்போதைய பிரதமர் இந்திரா.
தற்சார்பு பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார் பகுகுணா. அன்றாட எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய, சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தியை அதிகரிக்க ஆலோசனைகள் கூறினார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் மே 21, 2021ல், தன் 94ம் வயதில் இறந்தார். வனங்கள் உள்ளவரை அவரது புகழ் நிலைத்திருக்கும்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

