
முன்கதை: கல்வி சுற்றுலாவுக்கு தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தனர், பள்ளி மாணவ, மாணவியர். சுரங்கத்தில் மர்ம குரலைக் கேட்டு இறங்கினாள், மாணவி கீதா. அவளை பின் தொடர்ந்த மாணவன் குகன் அதிர்ந்தான். மாணவி கீதா வடிவில் மற்றொருத்தி, மாணவர் குழுவில் இணைந்தாள். இனி -
'உண்மையை அறியாமல் விடக்கூடாது'
உறுதியாக இருந்தான் குகன். கீதா வடிவில் மாணவ, மாணவியருடன் இருந்தவளைப் பார்த்து புன்னகைத்தான்.
கோவில் கல்வெட்டுகள், மன்னன் ராஜராஜனின் அரசியல் சாணக்கியத்தனம் பற்றி எல்லாம் விவரித்தபடியே வந்தார், ஆசிரியர் நம்பெருமாள். மாணவ, மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, மீண்டும் சுகந்த நறுமணம் வீசியது. இதை குகன் மட்டும் உணர்ந்தான்.
'ஓ... மர்மம் நிறைந்த நறுமணம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதே சமயம், இது ஏன் வருகிறது என்றும் கண்டு பிடிக்க வேண்டும்' என தீர்மானித்தான். அந்த நறுமணத்தை அனுபவிக்க ஆரம்பித்தான்.
'ஏன் இப்படி இருக்கிறாய்... கீதா சென்றதில் எந்த வருத்தமும் இல்லையா...'
காற்றில், ஒரு குரல் ஒலித்தது.
''யார் நீ...''
குழம்பியபடி கேட்டான் குகன்.
'ம்... நான் யார் என்பது இருக்கட்டும்... உன் வகுப்பு தோழி கீதா எங்கே... அவள் நிலைமை இப்போது என்ன... அதை பற்றி அறியும் பொறுப்பில்லாமல் இருக்கிறாய். இது தான் நீ சக மாணவிக்கு காட்டும் பரிவா... இதுவா நட்பின் அடையாளம்...'
அந்த குரல் ஒலித்தபடியே இருந்தது.
சுகந்த நறுமணமும் குறையவில்லை.
'அதே நறுமணம்... அப்படியென்றால், கீதாவை சுரங்கத்தினுள் அழைத்து சென்ற அதே சக்தி தான், என்னையும் குறி வைத்து இழுக்கிறது. இதை சரியாக பயன்படுத்தி, உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்'
தீர்மானத்துடன், ஒலி வந்த திசையைப் பார்த்தான்.
'வா... வா...'
அந்த குரல் ஓயாமல் அழைத்தது.
திடீரென்று மனசாட்சி உலுக்கியதாக உணர்ந்து, 'சட்'டென நின்றான்.
''யார் நீ... என்னை எங்கு அழைத்து செல்கிறாய்; வகுப்பு தோழி கீதா எங்கே...''
கோபத்துடன் கேட்டான் குகன்.
'பலே... பலே... அப்படியென்றால், இங்கிருக்கும் கீதா, உண்மையானவள் அல்ல என்பதை உணர்ந்து விட்டாய் அல்லவா...'
அவன் அதை ஆமோதிக்கும் முன், 'ஆம்... உண்மையை தான் கூறுகிறேன்; கீதாவின் ரகசியம் அறிந்தவன் நீ ஒருவன் மட்டுமே. இப்போது, அவள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாள்...' என்றது குரல்.
அதிர்ந்தபடி, ''என்ன சொல்கிறாய்... கீதாவுக்கு ஆபத்தா... அப்படியென்றால், அவள் எங்கே இருக்கிறாள்... நான் என்ன செய்ய வேண்டும். உடனே கூறு...'' பெரும் குரலில் சத்தமிட்டான்.
'உதவத்தான் வந்தேன்; என் பேச்சை கவனமாக கேள். அவள் எங்கள் கிரகத்தின் கெடு சக்தியிடம் சிக்கி இருக்கிறாள்...'
''உங்கள் கிரகமா... அப்படியென்றால், நீ யார் என்பதை முதலில் கூறு...''
அதிர்ச்சி மற்றும் ஆவேசம் கலந்த குரலில் கேட்டான் குகன்.
'நான் செவ்வாய் கிரக சிறுமி; என் பெயர் சின்ன சிட்டு... எங்கள் தலைவர் தான், செவ்வாய் நாதர். எங்கள் நாட்டில், ஒரு வினோத விளையாட்டு உண்டு. அதாவது, செவ்வாய் நாதர் ஒவ்வொரு ஆண்டும், இருப்பிடத்திலிருந்து, அடுத்த மாளிகைக்கு குடி பெயர்வார்...
'அந்த நாளை மிகவும் உற்சாகமுடன் கொண்டாடி கேளிக்கை விளையாட்டுகள் நடத்தி, தலைவரை மகிழ்வித்து, அடுத்த மாளிகைக்கு அனுப்பி வைப்போம்...
'இது, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மாபெரும் நிகழ்ச்சி. செவ்வாய் நாதர், அடுத்த மாளிகை செல்லும் போது, ஒருவரை வாரிசாக நியமிப்பார். அது முதல், அவர் தான் செவ்வாய் நாதரின் அதிகாரம் பெற்றவர்...
'மீண்டும் தலைவர் செவ்வாய் நாதர், மாளிகைக்கு வரும் வரை அவரே ஆட்சி செய்வார். அப்படி தேர்ந்தெடுக்கப் படும் நபர், மிகுந்த செல்வாக்கும், செவ்வாய் நாதரின் பெரும் அருளும் பெறுவர். அதனால், பலர் அந்த பதவிக்கு போட்டி போடுவர். அந்த போட்டி, உங்கள் நாட்டில் நடப்பது போல், தேர்தல் மற்றும் ஓட்டு பெட்டி வாயிலாக நடப்பது அல்ல...
'விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வாயிலாக நடப்பது. ஆம்... எங்கள் தலைவருக்கு விளையாட்டு என்றால் பிரியம். எதையும் சீரியசாக வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. வாழ்வு என்பதே இறைவனின் விளையாட்டு; இதில் துக்கப்படவோ, வேதனைப்படவோ எதுவும் இல்லை என்பதே தலைவரின் வேதவாக்கு...
'அதனால், ஆண்டுக்கு ஒருமுறை பெரும் பந்தயம் நடக்கும். அதில், கிரகத்தில் எங்காவது நடக்கும் அதிசயத்தைக் கண்டு, முதலில் வருவோருக்கே அந்த பதவி கிடைக்கும். வெற்றி பெற்றவர் நினைத்தால், விரும்பும் வேறு ஒருவரை தலைவராக நியமிக்கலாம் என்பதும் இங்கு விதியாக உள்ளது...
'அப்படித்தான் இந்த முறை செவ்வாய் நாதர் அடுத்த மாளிகை செல்ல ஆயத்தமான போது, போட்டி நடந்தது. அதில் நானும் பங்கேற்றேன். இன்னும் ஒருத்தியும் கலந்து கொண்டாள்...
- தொடரும்...
- ஜி.சுப்பிரமணியன்

