
சுட்டிகளின் குட்டி வீடு!
குழந்தை பராமரிப்பு என்பது பல நிலைகளை கொண்ட அணுகுமுறையாகும். இப்போது கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிர்பந்தம் உள்ளதால், குழந்தை வளர்ப்பில் மாற்று வழிமுறை தேவையாக உள்ளது.
தாத்தா, பாட்டி போன்ற முதிய உறவினர் குழந்தை பராமரிப்பில் நேரடியாக ஈடுபட்ட காலம் ஒன்று இருந்தது. இன்று, அதுபோன்ற வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. எனவே, மாற்று வழி அவசியமாகிறது. குழந்தைகளை கவனிக்க, பல தனியார் அமைப்புகள் சேவை வழங்குகின்றன. என்றாலும், முழுமையானதாக இல்லை.
இந்த நிலையில் மாற்று வழிமுறை முக்கிய தேவையாக உள்ளது.
குழந்தைகளின் அறிவுத்திறன் கூடுதலாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதை மேலும் வளர்க்க, விளையாட்டு முறையில் பல மாற்றங்கள் செய்யலாம். அந்த வகையில், 'கிட்ஸ் பிளே ஹவுஸ்' எனப்படும், விளையாட்டு வீடு அமைப்பு முறையும் ஒன்றாகும். இது, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாகி வருகிறது.
அது குறித்த தகவல்களை பார்ப்போம்...
குழந்தையின் அறிவுத்திறனை மேம்படுத்தவும், கற்பனையை வளர்க்கவும் புதிய கருவிகள் உதவும். இதற்காக விளையாட்டு வழியில் திறனை மேம்படுத்தும், 'பிளே ஹவுஸ்' அமைப்புகள் தயாராகி வருகின்றன. சிறிய வகையிலான விளையாட்டு உபகரணங்கள் சந்தையில் கிடைக்கின்றன.
கிட்ஸ் பிளே ஹவுஸ்: குழந்தைக்கான விளையாட்டு வீடுகள், மரம் மற்றும் பிளாஸ்டிக் மோல்டிங் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. அவை, வீட்டின் உட்புறம் மற்றும் வெளியே தோட்ட பகுதியில் அமைக்க ஏதுவாக உள்ளன.
வீட்டுக்குள், குட்டி படிப்பு மேஜை, அழகான சிறு படுக்கை, சின்ன சின்ன இருக்கைகள் மற்றும் மினியேச்சர் இசைக்கருவிகளை முறையாக அமைப்பது குழந்தைகளை கவரும். அவற்றில் விரும்பி விளையாடுவர். அதில் சிறிய வகை கணினி விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்தலாம்.
வீடுகளுக்கு வெளியே அல்லது தோட்டப்பகுதியில் அதே முறையில் சிறிய விளையாட்டு வீடுகளை அமைக்கலாம். அதில் அழகிய குட்டி ஊஞ்சல் பொருத்தலாம். சிறிய மேஜை மற்றும் நாற்காலிகள் அமைக்கலாம். அதன் வழியாக குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை அறிவுத்தேடலாக மாற்ற முயற்சிக்கலாம்.
கண்ணாடியின் கதை!
எரிமலை சிதறும்போதும், மின்னல் பாயும் போதும் அதிக வெப்பத்தால் பாறை உருகி பளபளப்புத் தன்மை ஏற்படும். கற்கால மனிதன், இதை கத்தி போல் கருவியாக பயன்படுத்தினான். பின்னர் கண்ணாடி என அழைக்கப்பட்டது.
ஆப்ரிக்கா, எகிப்து பகுதியில், கி.மு., 1500ல் கண்ணாடிப் பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டதாக, தொல்லியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். பின் மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளில் கண்ணாடி தயாரிப்பு தொழில் பரவியது.
கண்ணாடி தயாரிப்பு தொழில் மேற்கொள்ள கடும் உழைப்பும், பணமும் தேவைப்பட்டது. அதனால், மிகவும் விலை உயர்ந்த பொருளாக பாவிக்கப்பட்டது. மன்னர்களும், பெரும் செல்வந்தர்களும் மட்டுமே பழங்காலத்தில் பயன்படுத்தி வந்தனர்.
அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று தாராளமாக கிடைக்கிறது கண்ணாடி பாத்திரங்கள்.
பழமையான கண்ணாடி குடுவை ஒன்றில், எகிப்து மன்னர் மூன்றாம் பாரோ தாவ்ட்மோஸ் என்பவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஆசியா கண்ட பகுதியிலிருந்து பிடித்து வரப்பட்ட கைதிகள் துணையுடன், எகிப்தில் கண்ணாடி தயாரிப்பு நுட்பம் வளர்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஊதுகுழல் கருவி, கி.மு., 27ல் கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட இரும்புக்குழாயின் ஒரு முனையை கண்ணாடி திரவத்தில் வைத்து, மறுமுனையில் காற்றை ஊதி அச்சுக்குள் படிய வைக்கும் தொழில் நுட்பம் இது. இந்த கண்டுபிடிப்பால் கண்ணாடி பொருள் தயாரிப்பு எளிமையானது. சாதாரண மக்கள் வாங்கும் வகையில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

