
எங்கு போட்டி நடந்தாலும் முதல் நபராய் இந்திராவும், இனியனும், பள்ளி சார்பில் பெயர் கொடுத்து விடுவர். கட்டுரை, பேச்சு, ஓவியம் என தவறாது வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமையும் சேர்த்து வருவர். அந்த அளவு ஊக்குவித்து போட்டிக்கு தயாராக அனுப்பி வைப்பர் தமிழய்யா மாசிலாமணி.
வடக்கூர் கிராம அரசு பள்ளிக்கு இருவரும் அடையாளமாகி இருந்தனர். மதுரையில் நடக்க இருந்த மாநில அளவிலான கட்டுரை போட்டியில் இருவரையும் கலந்துகொள்ள வேண்டாம் என கூறிவிட்டார் தமிழய்யா. காரணம் தெரியாமல் வருத்தமடைந்தனர் இருவரும். இது மாணவ, மாணவியரிடம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
'வென்று சாதிக்கும் இருவரும் வேண்டாமென்றால், வேறு யார் வெற்றி பெற முடியும்...'
சந்தேக கேள்வி எழுப்பிய சக ஆசிரியர்கள், பிரச்னையை தலைமையாசிரியர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
தமிழய்யாவை அழைத்து, 'மதுரையில் நடக்கும், போட்டி மிக கடுமையாக இருக்கும். இதில் வெற்றி பெற இந்திரா, இனியனை விட்டால் வேறு யாரும் கிடையாது; அவர்களை தேர்வு செய்யாமல் தவிர்த்தது ஏன்... நம் பள்ளிக்கு பரிசு கிடைக்காமல் போய்விடுமே...' என கவலை தெரிவித்தார் தலைமை ஆசிரியர்.
மிக நிதானமாக, 'இருவரும் சிறப்பானவர்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை ஐயா... பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்; அதில் இருவரை மட்டுமே நம்பி இருக்க கூடாது; அவர்களின் பள்ளிப்படிப்பு அடுத்த ஆண்டு முடிந்து, மேற்படிப்புக்காக சென்று விடுவர். புதிய மாணவர்களை தயாராக்கினால் தான் தொடர்ந்து பரிசு பெற முடியும்...' என உரிய காரணம் கூறினார் தமிழய்யா.
வெகுவாக பாராட்டி, 'உங்கள் முயற்சிக்கு எப்போதும் ஆதரவு உண்டு...' என கூறியவர், இந்திரா, இனியனுக்கும் புரிய வைத்தார். வருத்தம் நீங்கி புத்துணர்வு பெற்றனர்.
குழந்தைகளே... ஆசிரியர் வழிகாட்டுதல்படி செயல்பட்டால் வெற்றிகளை குவிக்கலாம்!
பா.சுபானு

