
மாங்க் பழம்!
இயற்கை படைத்த மரம், செடி, கொடி போன்ற தாவர இலை, பூ, காய், கனிகளில் நலமாக வாழ தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் சிலவற்றை பயன்படுத்தும் முறையை அறிந்துள்ளோம். பலவற்றின் பயன்பாட்டை அறிய முயற்சி செய்து வருகின்றனர், உணவு ஆய்வாளர்கள்.
அறிய வேண்டிய தாவரங்களில் ஒன்று மாங்க். இதன் பழத்தை, ஆசிய நாடான சீனாவில், 'லுாயோ ஹான்கோ' என்பர். அதாவது, புத்தரின் கனி என்று அழைக்கின்றனர். ஆசிய நாடுகளான சீனா, தாய்லாந்தில் அதிகம் விளைகிறது. குறிப்பாக, புத்த துறவியர் சாகுபடி செய்து பயன்படுத்துகின்றனர்.
இந்த பழத்தை உலர்த்தி, ஒருவகை இனிப்பு தயாரிக்கின்றனர் சீனர்கள். அதில், கரும்பு சர்க்கரையை விட, 250 மடங்கு வரை இனிப்புச்சுவை அதிகம். கலோரி, கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சத்து அளவு மிகக் குறைவு. வழக்கமான சர்க்கரைக்குப் பதிலாக, மாங்க் பழத்தில் தயாரிக்கும் இனிப்பை, உணவுப் பொருளாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதாக கூறப்படுகிறது.
மாங்க் பழத்தை நேரடியாகவும் சாப்பிடலாம். இந்தியாவில் உலர்ந்த நிலையிலே இந்த பழம் கிடைக்கிறது. ஆரோக்கியத்தை விரும்புவோரின் உணவுப் பட்டியலில் இந்த பழம் முக்கிய இடம் பெற்று வருகிறது.
இதை இந்தியாவிலும் விளைவிக்க தீவிர முயற்சி நடக்கிறது. முதன் முறையாக, இமயமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தாவரத்தை வளர்ப்பது மிகவும் சிரமம். அதற்கு அதிக செலவு பிடிக்கும்.
நீரிழிவு, உடல் பருமன் போன்ற நோய்கள் பற்றி, சர்வதேச அளவில் விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில், மாங்க் பழம் அவற்றை தீர்க்கும் என, நம்பிக்கை தெரிவிக்கின்றனர் உணவு நிபுணர்கள்.
இது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன; இன்னும் முடியவில்லை. எனவே, உரிய மருத்துவ ஆலோசனை பெற்றே இதை பயன்படுத்த வேண்டும். சீனாவில், பாரம்பரிய மருத்துவ முறையில் இப்பழம் அதிகம் பயன்படுகிறது.
கழிப்பறை சுத்தம்!
குளியலறையும், கழிப்பறையும் இப்போது ஒரே இடத்தில் இருக்கின்றன. இரண்டையும் சுத்தம் செய்யும் முறையில் சிறு வேறுபாடு உண்டு. குளிக்கும் பகுதியில், தண்ணீர் அதிகம் விழும் என்பதால், தரையில் உப்பு சீக்கிரம் படியும்.
லேசாக உப்பு படிந்திருந்தால் தண்ணீருடன், பேக்கிங் சோடா கலந்து தெளித்து, 10 நிமிடங்கள் ஊறவிட்டு, பிரெஷால் தேய்த்துக் கழுவினால் போதும். அழுத்தமாக உப்பு படிந்திருந்தால், தண்ணீருடன் ஆசிட் கலந்து தெளித்து தேய்த்து கழுவலாம்.
இந்தியக் கழிப்பறை என்றால், டாய்லெட் லிக்விட் பயன்படுத்தலாம். அப்படியும் கிருமி இருக்கலாம் என சந்தேகமிருந்தால், தண்ணீரில் சிறிதளவு ஆசிட் கலந்து, பீங்கான் உட்பட, அனைத்துப் பகுதிகளிலும் ஊற்றி, 10 நிமிடங்களுக்கு பின் கழுவலாம்.
வெஸ்டர்ன் கம்மோடில், 'கழிவு செல்லும் பாதையிலும், உட்காரும் இடத்திலும் மட்டுமே அழுக்கு சேரும்' என்று எண்ணுகிறோம்.
அது தவறு. கம்மோடின் கீழ்ப்பகுதியிலும் அழுக்குச் சேரும். சோப்புத் துாள், காலாவதியான வினிகர், என எதையாவது ஒன்றை கம்மோடின் அடிப்பகுதியில் தடவி, 15 நிமிடங்கள் ஊறியபின், தேய்த்து கழுவினால் போதும்.
உட்காரும் இடத்தையும், கழிவு செல்லும் பாதையையும், அதற்கான லிக்விட் ஊற்றி, இரண்டு பக்க நாருள்ள பிரெஷ் பயன்படுத்தி, தினமும் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம், சுகாதாரத்தின் அடிப்படை என்பதை மனதில் கொள்வோம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

