PUBLISHED ON : டிச 10, 2022

அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில், மனிதர்களின் பழக்க வழக்கங்கள் மாறி வருகின்றன. இதனால், நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க சத்தான உணவுகளை, உரிய நேரத்தில் உண்ண வேண்டும்.
ஆரோக்கியமாக வாழும் வழிமுறை பற்றி பார்ப்போம்...
அன்றாடம் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் குடிக்கும் தண்ணீர் அளவை அதிகரிக்க வேண்டும். தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்த வேண்டும். மழை காலத்தில் காய்ச்சி குடிக்க வேண்டும்.
காலை மற்றும் இரவு உணவுக்கு முன், மலம் கழிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். மலச் சிக்கல், நோய்களின் திறவு கோலாக அமையும். அதை தவிர்க்க உரிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
தினமும் இருமுறை குளிப்பது நலனுக்கு உகந்தது. மழைக்காலத்தில் ஒருமுறை குளித்தால் போதுமானது. உள்ளாடைகளை மிக சுத்தமாக அணிய வேண்டும். ஆடைகளை அன்றாடம் துவைத்து உலர்த்தி பயன்படுத்த வேண்டும்.
ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்கினால், நீரிழிவு, ரத்த கொதிப்பு போன்ற உபாதைகள் அண்டாது. வந்தாலும் கட்டுக்குள் இருக்கும்.
காலை உணவுக்கு, அரை மணி நேரம் முன், தோல் நீக்கிய இஞ்சித்துண்டு சாப்பிடலாம். அது கொழுப்பை குறைத்து, தொப்பையை கரைக்கும்.
உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ண வேண்டும். எண்ணெயில் தயாரிக்கும் பண்டங்களை தவிர்க்கவும். பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் உபயோகித்தால், உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்; அது புற்றுநோயாக மாற வாய்ப்பு உண்டு.
மைதாவில் செய்த பரோட்டா, பிராய்லர் கோழிக்கறி, பாக்கெட்டில் அடைத்த உணவுகள், குளிர்பானம் போன்றவற்றை தவிர்க்கவும்.
பழம், காய்கறிகள், கீரையை அதிகம் சேர்க்கவும்.
மதிய உணவுக்கு, ஒரு மணி நேரம் முன், சுக்கு காபி குடிப்பது நல்லது. அதனால், உணவு முழுமையாக செரிக்கும். உண்ட உணவு செரிக்கும் முன் அடுத்து உண்ணக் கூடாது.
பாதாம், முந்திரி, உலர் பழம், கடலை மிட்டாய், எள் உருண்டை, பனை வெல்லம் தினமும் சாப்பிடலாம்.
வைட்டமின் சத்து குறைவால், தலைமுடி உதிர்தல், நகம் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதை தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் போன்றவறை அதிகம் உண்ண வேண்டும்.
தினமும், 1 மணி நேரம் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யவும். இரவு, 10:00 மணி முதல், அதிகாலை, 5:00 மணி வரை கட்டாயம் துாங்கவும். இவற்றை கடை பிடித்தால், வாழ்வு நலமாக அமைவது நிச்சயம்!
- பொ.பாலாஜி கணேஷ்.

