
சோழ நாட்டில் மன்னர் கரிகால் சோழன் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
அப்போது, அவரது அவையில் ஒரு விசித்திர வழக்கு விசாரணைக்கு வந்தது.
இரண்டு காளைகளுடன் நீதி கேட்டு அரண்மனைக்கு வந்தனர், மூன்று பேர்.
அதில், ஒருவன் கைவினை கலைஞன்.
மற்றொருவன் மந்திரவாதி.
இன்னொருவர் விவசாயி.
கைவினை கலைஞன் முதலில் துவங்கினான்.
'மன்னா... என் புத்தி கூர்மையால், இரண்டு காளை மாடுகளை உருவாக்கி உள்ளேன்; அவை எனக்கே சொந்தம் என உத்தரவிட வேண்டும்...' என்றான்.
'அதெல்லாம் கிடையாது... காளை மாடுகளுக்கு, என் மந்திர சக்தியால் உயிர் கொடுத்து உள்ளேன்; எனவே, எனக்கு உரியவை என தீர்ப்பளிக்க வேண்டும்...' என்றான் மந்திரவாதி.
அமைதியாக, 'மன்னா... பசியால் வாடிய காளைகளுக்கு புல், வைக்கோல் எல்லாம் போட்டு பசியாற்றினேன்; மூக்கணாங்கயிறு அணிவித்து, கால் குளம்புகளில் லாடம் கட்டினேன்; அவற்றை விவசாய பணிகளுக்கு பழக்கியுள்ளேன். அதனால், இந்த இரண்டு காளைகளும் எனக்கு உரியன. சாதகமாக தீர்ப்பளிக்க வேண்டும்...' என்றார் விவசாயி.
தொடர்ந்து, மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினார் மன்னர்.
கைவினை கலைஞனிடம், 'மாடுகளை உனக்கு தந்தால், அவற்றை என்ன செய்வாய்...' என கேட்டார் மன்னர்.
'மாட்டு சந்தைக்கு ஓட்டிச் சென்று, நல்ல விலைக்கு விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் மகிழ்ச்சியாக வாழ்வேன்...' என்றான்.
அடுத்து மந்திரவாதி, 'இறைச்சிக்காக, கசாப்பு கடையில், விற்பனை செய்வேன்; மாட்டு தோல் இசைக்கருவிகள் செய்ய பயன்படும்; அதனால், நல்ல பணம் கிடைக்கும்; அதில், ஊர் ஊராக சென்று மந்திர தொழில் செய்து, பணம் சம்பாதித்து வாழ்வேன்...' என்றான்.
கடைசியாக, விவசாயிடம், 'காளைகளை நீ என்ன செய்வாய்...' என கேட்டார் மன்னர்.
'என்னிடம் ஏராளமாக தரிசு நிலங்கள் உள்ளன. அவற்றை நன்றாக உழுது, பயிர் செய்ய காளைகளை பயன்படுத்துவேன். இதனால், விளைச்சலை அதிகப்படுத்துவேன். விளையும் பொருட்களை, சந்தையில் நியாயமான விலைக்கு விற்பனை செய்வேன். அதனால், பசி, பட்டினியின்றி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர்; கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்துடன், சந்தோஷமாக வாழ்வேன்...' என்றார்.
இந்த கருத்தை கேட்டதும், கம்பீரமாக எழுந்தார் மன்னர்.
'காளைகளை பயன்படுத்தி, விவசாயம் செய்து, தானிய உற்பத்தியை பெருக்குவதாக கூறும் விவசாயியிடம் கடுகளவும் சுயநலம் இல்லை; இரண்டு காளைகளும் அவருக்கே உரியவை...' என தீர்ப்பு வழங்கினார்.
வணங்கி, காளைகளுடன் ஊருக்கு புறப்பட்டார் விவசாயி.
குழந்தைகளே... சுயநலம் இல்லாத உழைப்பு நிச்சயம் வெற்றி பெறும்!
- எஸ். டேனியல் ஜூலியட்

