
அன்பு பிளாரன்ஸ்...
என் வயது, 18; ஸ்போர்ட்ஸ் பள்ளியில் படிக்கிறேன். தந்தை மெடிக்கல் ஷாப் நடத்துகிறார். சுடிதார் விற்பனையகம் நடத்துகிறார் அம்மா. நினைவு தெரிந்த நாளிலிருந்து விளையாட்டுகள் தான், என் ரத்தத்தில் ஓடுகிறது.
பத்துக்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளேன். நான்கு ஆண்டுகளாக உழைத்து, 'ரூபிக் க்யூப்' கட்டை போல, ஒரு விளையாட்டை வடிவமைத்துள்ளேன். அதற்கு காப்புரிமை பெற உரிய வழிமுறையை சொல்லுங்கள் அம்மா.
இப்படிக்கு,
ம.யாகேஷ்.
அன்பு மகனுக்கு...
உலகில், 800க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன. அவற்றில், பில்லியர்ட்ஸ், கேரம், சதுரங்கம், ஸ்குவாஷ், கூடைப்பந்து போன்றவை உள்ளரங்கில் நடக்கின்றன.
புதிதாய் வடிவமைத்து, காப்புரிமை பெற்றுள்ள சில விளையாட்டுகளைப் பார்ப்போம்...
● கைப்பந்தையும், கால்பந்தையும், உடற்பயிற்சியையும், கழைக்கூத்தையும் கலந்து உருவாக்கப்பட்ட, போசாபால்
● கால்பந்தையும், குழி பந்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட, புட்கோல்ப்
● கால்பந்தாட்டமும், வளைதடி பந்தாட்டமும் இணைத்த, ஷாக்கி
● குறுவிரைவு ஓட்டத்தையும், ஓட்டத்தையும், நீச்சலையும் இணைத்துள்ள, எர்த்திங்
● ஊதி விளையாடும் மேடை வரி பந்து, ப்ளோபால்
● வட்ட வடிவ மைதானத்தில், எல்லா பக்கமும் அடித்து விளையாடும், 360 பால்
● நான்கு மேஜைகளும், ஒரு பந்தும் கொண்டு விளையாடப்படும், ஹான்டிஸ்
● முழங்காலால் அடித்து விளையாடும், நக்கிள் ராக்கட்
● சுத்தியலால் அடித்து விளையாடும், ஹாமர் பீல்டு.
இது போல் நீ கண்டறிந்துள்ள விளையாட்டை பதிவு செய்து, காப்புரிமை பெற கீழ்க்கண்ட விஷயங்களை செய்தாக வேண்டும்.
முழுமையாக பதிப்புரிமை, சில விஷயங்களுக்கு காப்புரிமை, சில விஷயங்களுக்கு முத்திரை பதிவு தேவை. புதிதாக வடிவமைத்துள்ள விளையாட்டுக்கு புது பெயர் சூட்ட வேண்டும். விளையாடுவதற்கான விதிமுறை, தேவைப்படும் கால அவகாசம், எத்தனை பேர் பங்கேற்பது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
அமெரிக்க காப்புரிமை, முத்திரை பதிவு இணையதளத்தில் முறையாக விண்ணப்பித்து, காப்புரிமை பெறலாம். முழுமையான காப்புரிமை பெற, மூன்று ஆண்டுகள் ஆகும். ஏராளமான பணம் செலவாகும். தற்காலிக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, காப்புரிமை நிலுவையில் உள்ளது என சான்று பெறலாம்.
ஒரு காப்புரிமை பதிவு, 14 ஆண்டுகள் செல்லுபடியாகும். தனி மனிதனாய் காப்புரிமை பெறுவது குதிரை மூட்டை. உன் வடிவமைப்பை திருடாத நாணயமான ஒரு ஸ்பான்சரை கண்டுபிடி.
அந்த விளையாட்டை, நண்பர், உறவினர்களுடன் விளையாடி பார். விளையாட்டில், புதுமை, தெளிவு, உற்சாகமான செயல்பாடு இருந்தால், நிச்சயம் மிகப்பெரிய புகழ் பெறுவாய். உன்னுடன் புதிய விளையாட்டை ஆட, ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வாழ்த்துகள்!
- அள்ளக்குறையா அன்புடன்,பிளாரன்ஸ்.

