
எட்டி பார்த்த குட்டி தீவு!
கிழக்காசிய நாடான ஜப்பான், 6,852 குட்டித் தீவுகளை உள்ளடக்கியது. இவற்றில் சில, மக்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. உலகிலேயே நீண்ட ஆயுளுடன் வாழும் மனிதர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில், மூன்றாம் இடத்தில் உள்ளது. சராசரியாக ஆண்கள், 81 வயது, பெண்கள், 88 வயது வரை வாழ்கின்றனர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோ. உலகிலே மிகப்பெரிய நகரம். இங்கு, 3.74 கோடி பேர் வசிக்கின்றனர். ஜப்பானுக்கு அடுத்தபடியாக, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அதிக அளவில் ஜப்பானியர் வசிக்கின்றனர்.
பெரும்பான்மையாக, ஷின்டோ என்ற மதத்தை பின்பற்றுகின்றனர். டால்பின் மற்றும் குதிரை மாமிசத்தில் தயாரித்த சிறப்பு உணவுகளை சாப்பிடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், 1,500க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. சில மட்டுமே அச்சுறுத்தும்.
இந்த நாட்டில் செல்லப்பிராணி வளர்ப்போர் அதிகம்.
பள்ளியையும் அதன் வளாகத்தையும் மாணவர்களே துாய்மை செய்வது கல்வித் திட்டத்தில் ஒரு பகுதியாக உள்ளது. பள்ளி கழிப்பறை, வகுப்பறையை மாணவர்களே துப்புரவு செய்கின்றனர். கல்வி புகட்டும் இடத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டியது மாணவர்களின் பொறுப்பு.
இந்தியாவில் ஒருவரை சந்திக்கும் போது, இரு கைகளை சேர்த்து, கும்பிட்டு வணக்கம் தெரிவிப்பது வழக்கம். மேற்கத்திய கலாசாரத்தில் கரங்களை கோர்த்து குலுக்குவது வழக்கம். ஜப்பானியர் சந்திக்கும் போது, ஒரே நேரத்தில் தலையை தாழ்த்தி வணக்கம் செலுத்துவர்.
நம் ஊரில் கருப்பு நிற பூனையை பார்த்தால் அபசகுனமாக கருதுவர்; ஆனால், ஜப்பானில், அது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக உள்ளது. அதிர்ஷ்டமற்றதாக, '4' என்ற எண்ணை கருதுகின்றனர்.
உலக அளவில், 'டிவி' நிகழ்ச்சிகளில் குழந்தைகளை கவரும் அனிமேஷன் கார்டூன் படத் தொடரில், 60 சதவீதம் ஜப்பானில் தயாரிக்கப்பட்டவை. இங்கு பொது இடங்கள், சாலைகளில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானியர் இயற்கையை போற்றும் கலைநயம் மிக்க விழாவை கொண்டாடுகின்றனர். இதற்கு, 'ஹனமி' என்று பெயர். பூக்கோலம் காணல் என்று பொருள். இது, மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் கொண்டாடப்படும்.
அப்போது கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும் செர்ரி மரங்களுக்கு அடியில் அமர்ந்து இசை, நடனத்துடன் நண்பர், உறவினர்களுடன் விருந்து உண்பர். இயற்கையை போற்றி பாடல்கள் பாடுவர்.
இந்த திறந்தவெளி விருந்து நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது. விழாவுக்கு முந்தை நாள், பூத்துக்குலுங்கும் மரங்கள் அருகே இடம் பிடிக்க, ஜப்பானிய இளைஞர்கள் போட்டி போடுவது சுவாரசியம் தரும்.
இங்கு நீர் புகாத அலைபேசி கருவியே அதிகம் பயன்பாட்டில் உள்ளது. பெரும்பாலானோர் குளிக்கும்போதும், அலைபேசியை பயன்படுத்துவதே இதற்கு காரணம். வீட்டுக்கு தேவையான பொருட்களை, 'வெண்டிங்' மெஷின்களை பயன்படுத்தியே வாங்குகின்றனர். நம்ம ஊரில் பெட்டிக்கடை போல, அங்கு, கடைகளில் வெண்டிங் மெஷின் நிரம்பியுள்ளன. ஜப்பானில் குற்றச்செயல் விகிதம் மிக குறைவாக உள்ளது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.