
எளிய குளிரூட்டி!
சுட்டெரிக்கும் வெயில் காலத்தில், 'ஏசி' என்ற குளிர்சாதனம் பொருத்தாமலே, வீட்டை குளுகுளுப்பாக வைத்திருக்க வழிகள் உள்ளன. அதில் சிலவற்றைப் பார்போம்...
வீட்டுக்குள் வெப்பம் வர முதல் காரணம் மின்விசிறி. அது விசிறும் காற்று வெப்பமாக இருக்கும். பகல் முழுதும், மொட்டை மாடியில் வெயில் விழும். அதனால், தரை சூடாகி விடும். மின்விசிறியை இயக்கும் போது, மாடியில் தேங்கிய வெப்பம் வீட்டுக்குள் இறங்கும். இதனால் தான் இரவில் மொட்டை மாடி குளிராக இருந்தாலும், வீட்டில் அறைகள் வெப்பத்துடன் காணப்படும்.
முதலில் மொட்டை மாடியில், வெயில் நேரடியாக விழுவதை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு தற்போது குறைந்த செலவில் பிரத்யேக பெயின்ட் கிடைக்கிறது. வெள்ளை பெயின்ட் பூசினால், வெயிலை பிரதிபலிக்கும். வெப்பம் அறைக்குள் இறங்காமல் கட்டுப்படும்.
மாடியில், பசுமை குடில் அமைக்கலாம். தென்னை ஓலை, சாக்குப் பை வைத்து கூரை போடலாம். தென்னை ஓலை தீப்பிடிக்கக்கூடும் என்பதால் கவனம் வேண்டும்.
மேஜை மின்விசிறியைப் பயன்படுத்தலாம். இதனால், ஜன்னல் வழியாக இயற்கை காற்றை, அறைக்குள் திருப்ப முடியும்.
போர்வையை தண்ணீரில் நனைத்து, ஜன்னலில் தொங்க விடலாம். இதனால், அறையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். இரவில் படுக்கும் இடத்தில், சிறிது நீர் தெளிக்கலாம். இதனால், தரை குளிர்ச்சியாகும்.
மொட்டை மாடியில் தோட்டம் போடுவது நல்ல பலன் தரும். வெப்பத்தை செடிகள் தாங்குவதால் வீட்டுக்குள் குளிர்ச்சி பரவும். வீட்டில் உள் அலங்காரத்துக்கு வளர்க்கப்படும் செடி வகைகள் நல்ல குளிர்ச்சி தரும். அவை மனதுக்கும் இதமாகவும் இருக்கும்.
ஜன்னலில்...
* மென்நிற திரைகளை இடலாம்
* வெட்டிவேர் திரையை பயன்படுத்தலாம்.
கோடை காலத்தில், கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால், வீட்டை ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, கழிப்பறையைச் சுத்தமாக பேணுவது மிக அவசியம்.
அழகிய வீடு!
சரியான திட்டமிடலுடன் சிறிது கலைநயம் தெரிந்திருந்தால் போதும், எப்படிப்பட்ட வீட்டையும், அழகாக மாற்றி விடலாம். பழைய வீட்டை புதிய தோற்றத்திற்கு மாற்ற எளிய வழிமுறைகள் உள்ளன.
வீட்டுக்குள் பர்னிச்சர் வைக்கும் இடம் மற்றும் சுவரில் பூசும் வண்ணங்களை சரியாக தேர்வு செய்துவிட்டால், அழகுடன் அளவும் மாறி விடும்.
கலைநயம் மிக்க பொருட்கள், எளிய உள் வேலைபாடு, 'லிவ்விங்' பகுதியில் கவனம் ஈர்க்கும் பொருட்கள், செடிகளை உரிய பகுதியில் வைப்பது போன்றவை இல்லத்திற்கு பேரழகு சேர்க்கும். ஆடம்பரமான வசிப்பிடம் போல எடுத்துக்காட்டும்.
வீட்டின் உட்புறத்திற்கு அழகு சேர்ப்பது மேற்கூரை. வீடு கட்டும் போதே பொருத்தமான வடிவமைப்பை தேர்வு செய்தால், பாதி வேலை முடிந்து விடும்.
சுத்தமில்லாமல் பராமரிப்பது, கட்டடத்தில் பழுது ஏற்பட்டால் கவனிக்காமல் விடுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். வீட்டை பொறுப்பாக பார்த்துக் கொண்டால், அழகும், ஆரோக்கியமும் மிக்கதாக மாறும்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.