
உலகில் அதிகம் பேரை சிரிக்க வைத்தவர், நடிகர் சார்லி சாப்ளின். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன், வால்வோர்த் பகுதியில், ஏப்ரல் 16, 1889ல் பிறந்தார். இவரது பெற்றோர் இசைக்கலைஞர்களாக இருந்தனர். இவர் பிறந்த சில நாட்களிலே கருத்து வேறுபாட்டால் பெற்றோர் பிரிந்தனர்.
தாய் பராமரிப்பில் வாளர்ந்தார் சாப்ளின். வறுமை வாட்டியது. வீட்டு வாடகை தர இயலாததால், அடிக்கடி தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏழ்மையை போக்க, ஏழு வயதிலே பணிகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. குழந்தை பருவம் இனிமையாக அமையவில்லை.
இந்த நிலையில், மன அழுத்தத்தால் அவரது தாய், பேச்சு திறனை இழந்தார். மனநலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை மையத்துக்கு அனுப்பப்பட்டார். இதனால், குடிபோதைக்கு அடிமையாக இருந்த தந்தையுடன் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. சில நாட்களிலே உடல்நல குறைவால் தந்தை இறந்தார்.
ஆதரவற்ற சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார் சாப்ளின். அங்கு, பெரும் துயரத்தை அனுபவித்தார். தனிமை, உடல் உபாதைகளை சகித்தபடி தங்கியிருந்தார். வாழ்வில் அதிகம் கண்ணீர் வடித்த நாட்கள் என, இதை குறிப்பிட்டுள்ளார். ஆனால், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் சாப்ளின் மனதில் எப்போதும் ஓடியபடியே இருந்தது.
நாடகங்களில் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க, 10 வயதில் வாய்ப்பு கிடைத்தது. அவரது திறமையை உணர்ந்து, திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கியது ஒரு நிறுவனம். அந்த படம் தோல்வியை தழுவிய போதும், சாப்ளின் நகைச்சுவை நடிப்பு பெரும் பாராட்டு பெற்றது.
ஒரு சர்க்கஸ் குழுவில், 17ம் வயதில் சேர்ந்தார். அங்கு, பெரும் கூட்டத்தின் முன், நீண்ட வசனத்தை தெளிவாக உச்சரித்து நடித்தார். கூட்டம் ரசிக்கவில்லை. கடும் அதிர்ச்சியில், 'எந்த உணர்வும் இல்லாமல் இருக்கின்றனரே...' என கவலையில் கொந்தளித்தார் சாப்ளின்.
சமாதானப்படுத்திய சர்க்கஸ் நிர்வாகி, 'நீ நினைப்பது தவறு; பார்வையாளர் பலருக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால், நீ பேசிய வசனம் புரிய வாய்ப்பில்லை...' என்றார். அதை மனதில் கொண்டு, நடிப்பில் மாற்றம் செய்ய ஆரம்பித்தார். வசனம் பேசுவதை விடுத்து, உடல் அசைவு மற்றும் முக பாவங்களில் நடிப்பை காட்டினார். கூட்டம் முகம் மலர்ந்து, கை தட்டி ஆரவாரம் செய்தது. சொற்கள் இல்லாத இந்த வகை நடிப்பு பாணி தான், சாப்ளினை உலகுக்கு மாபெரும் கலைஞனாக அறிமுகப்படுத்தியது.
துவக்கத்தில், அவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவின. அவரை ஒப்பந்தம் செய்ய யோசித்தனர் தயாரிப்பாளர்கள். ஆனால் அவரது திறமையை கணித்த தயாரிப்பாளர் மாக்செனட், தனக்கு சொந்தமான, 'கீஸ்டோன்' திரைப்பட நிறுவனத்தில் சேர்த்து கொண்டார். அங்கு, பலதர கதாபாத்திரங்களில் நடித்து பாணியை மேம்படுத்தினார் சாப்ளின்.
குண்டு மனிதர்களின் பேன்ட், சட்டை மற்றும் பொருந்தாத ஷூ, தொப்பியை அணிந்து கையில் பிரம்பு ஒன்றை பிடித்தார். சிறிய மீசையை வெட்டி ஒட்டினார். எதிரே வந்தவர் மீது மோதி விழவும், எழவும் முடியாமல் தவித்து, தொப்பியை கழட்டி, சைகையால் மன்னிப்பு கேட்பது போல் நடித்தார். அவரது உடல் அசைவு வரவேற்பை பெற்றது. கீஸ்டோன் நிறுவனம், 35 படங்களில் நடிக்க வைத்தது. அவை உலகப் புகழ் பெற்றன.
நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி, கதை ஆசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர் என, பன்முகத் திறமையுடன் திகழ்ந்தார் சாப்ளின். அவர் இசையமைத்த பாடல்கள் பெரும் புகழ் பெற்றன.
குழந்தைகளே... முயற்சியால் முன்னேறி உலக புகழ் பெற்றார் சார்லி சாப்ளின். அவரது வாழ்வில் இருந்து நம்பிக்கை, விடாமுயற்சியை கற்றுக்கொள்ளுங்கள்.
- அசோக் ராஜா