
கொல்லி மீன்!
உடலில் சிறிய வரிகளை உடையது கொல்லி மீன். அதிகம் மாசடைந்த நீர்நிலையிலும் வாழும். உயிரினங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கனிமங்கள் நிறைந்த இடங்களிலும் காணப்படுகிறது. உலகின், பல பகுதிகளில் நீரோடை, ஆறு, ஏரி மற்றும் கடல் பகுதியில் காணப்படுகின்றன. 
இது சாதாரண மீனை விட, 8,000 மடங்கு நச்சு தாங்கும் திறன் உடையதாக கணித்துள்ளனர் ஆய்வாளர்கள். இதில், ஆயிரத்து, 270 வகைகள் உண்டு. சிறியது, 5 செ.மீ., பெரிய மீன், 15 செ.மீ., நீளம் உடையது. இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆயுள் உடையது.
அமெரிக்காவில், நியூயார்க் விரிகுடா மற்றும் வெர்ஜீனியா, எலிசபெத் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகிறது. வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் பப்பிஸ், மம்மி ஹாக் என அழைக்கின்றனர்.
இந்த மீன் இனம் கடும் நஞ்சுக்களையும் தாங்கி வளர்வது பற்றி அமெரிக்கா, கலிபோர்னியா பல்கலைக்கழக சூழல் நச்சியல்துறை ஆய்வாளர் அன்ரூ வைட் ஹெட் ஆய்வு நடத்தி வருகிறார். நீரில் கலந்திருக்கும் நச்சுக்கு ஏற்ப, இதன் உடலில் மரபணுவியல் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கண்டறிந்துள்ளார்.
நச்சு நிறைந்த சூழலை தாக்குப்பிடித்து, இந்த மீன் இனம் வளர்வது சிறப்பானது தான். என்றாலும், இதை சார்ந்து வாழும் உயிரினங்கள் இந்த தகவமைப்புக்கு ஏற்ப உடனடியாக மாறுவது கடினம். 
இந்த வகை மீனை இரையாக்குகின்றன சில பறவைகள். அவற்றுக்கு அந்த அளவு நச்சு ஏற்கும் திறன் இருக்காது. இந்த மீனை உணவாக்கும் போது, அந்த பறவை இனம் முற்றாக அழியும் வாய்ப்புள்ளதாக, சூழலியல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
நறுமண சாம்பிராணி!
இறை வழிபாட்டு நிகழ்வுகளிலும், பாரம்பரிய மருத்துவத்திலும் பண்டைகாலம் முதல் பயன்பட்டுவருகிறது, சாம்பிராணி. நறுமணம் மிக்கது. கிறிஸ்துவ சமய புனித நுாலான பைபிள் பழைய ஏற்பாட்டில் இறைவனே சாம்பிராணி துாபம் காட்டுமாறு பணித்ததாக கூறப்பட்டுள்ளது. 
ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், யூதம், சீக்கியம் மற்றும் பல மதங்களில், முக்கிய வழிபாடுகளின் போது, சாம்பிராணியில் துாபமிடும் வழக்கம் உள்ளது. உலகின் பல பகுதிகளில் வசிப்போரும் குடும்ப நிகழ்வுகளில், சாம்பிராணியின் துாபமிடும் வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். 
பாரம்பரியமாக வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுள்ள சாம்பிராணி பற்றி பார்ப்போம்... 
சாம்பிராணி என்பது, பிரங்கின் சென்ஸ் என்ற மரத்தில் வடியும் பிசின். இந்த மரம் பாஸ்வெல்லியா செர்ராட்டா என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தியாவில், குஜராத், அசாம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் தமிழகத்தில் காணப்படுகிறது. இதை எளிதில் அறுத்து இழைக்க முடியும். தீப்பிடிக்கும் தன்மையுடையது என்பதால் தீக்குச்சி செய்ய பயன்படுகிறது.
சாம்பிராணியை, குமஞ்சம், குங்கிலியம் மரத்து வெள்ளை, பறங்கிச் சாம்பிராணி, வெள்ளைக்கீரை, என பல பெயர்களால் அழைப்பர். இதை நெருப்பிலிட்டால் விரும்பும் மணத்தை பரப்பும். நவம்பர் முதல் ஜூலை வரை இம்மரத்தில் பால் அதிகமாக வடியும்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

