PUBLISHED ON : ஏப் 22, 2023

நாள் முழுதும், 'டிவி' முன் அமர்ந்து கார்ட்டூன் பார்த்தபடியே இருப்பாள், 10ம் வகுப்பு படிக்கும் ரேஷ்மா. எப்போதும் சோம்பேறியாக காணப்படுவாள்.  
''படம் பார்த்தப்படியே சாப்பிடாதே...'' 
அவளை கண்டித்தாள் அம்மா.
'இவங்க புலம்பிக்கிட்டு இருப்பாங்க; இந்த காதுல வாங்கி, அந்த காதுல விட்டுட வேண்டியது தான்' என நினைத்தபடி, 'டிவி' நிகழ்ச்சியில் கண் வைத்தாள் ரேஷ்மா.
அன்று இரவு அம்மா சாப்பிட அழைத்தாள்.
''இன்னும் கொஞ்ச நேரம் படம் பாத்துட்டு வரேம்மா...''
கொஞ்சும் குரலில் கூறினாள்.
''பைத்தியம் எப்ப தான் திருந்துமோ...''
தலையில் அடித்துக் கொண்டாள் அம்மா.
அம்மாவின் கோபம் உச்சத்திற்கு சென்றுவிட்டதை அறிந்து சமையலறைக்கு வந்தாள். இரண்டு சப்பாத்தியை தட்டில் போட்டபடி மீண்டும், 'டிவி' முன் அமர்ந்தாள் ரேஷ்மா. 
பெருமூச்சு விட்டாள் அம்மா.
நிகழ்ச்சி பார்த்தபடியே சாப்பிட துவங்கினாள் ரேஷ்மா.
வீட்டில் முன் வாசலில் போட்டிருந்த டியூப் லைட்டை நிறைய பூச்சிகள் சுற்றி வந்தன; அதில், இரண்டு சாப்பாடு தட்டில் உருளைக்கிழங்கு குருமாவில் விழுந்தன.
கவனத்தை, 'டிவி'யில் வைத்தபடி சப்பாத்தியை, குருமாவில் தேய்த்து, வாய் அருகே எடுத்துச் சென்றாள் ரேஷ்மா.
''அச்சச்சோ... அக்கா... பூச்சி... பூச்சி...''
கத்தினான் தம்பி ரங்கேஷ்.
''என்னம்மா இது...'' என கையை உதறியபடி, ''சாப்பாடு வேண்டாம்; குமட்டிக்கிட்டு வருது...'' என, முகம் சுளித்தாள் ரேஷ்மா. 
''பார்த்தியா... எத்தனை முறை சொல்லி இருக்கேன்... உணவு மீது கண் வைத்து, கவனித்து ரசித்து ருசித்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்; அப்போது தான் வேண்டிய சக்தி கிடைக்கும்... இப்படி, 'டிவி' பார்த்தபடி சாப்பிட்டால் கேடு தான் வரும்...'' 
கண்டிப்புடன் கூறினாள் அம்மா. 
அது மனதில் உறைத்தது.
''இனிமேல் சாப்பிடும் போது, 'டிவி' பார்க்க மாட்டேன்...'' என்றாள் ரேஷ்மா. அதை சபதமாக்கியபடி உறுதி ஏற்றாள்.
குழந்தைகளே... எதிலும் அலட்சியம் காட்டக் கூடாது. மனம் ஊன்றி கவனித்து செய்தால் தக்க பலன் கிடைக்கும்.
பாவனா ரவீந்திரன்

