sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

சொர்க்கமும், நரகமும்!

/

சொர்க்கமும், நரகமும்!

சொர்க்கமும், நரகமும்!

சொர்க்கமும், நரகமும்!


PUBLISHED ON : ஏப் 22, 2023

Google News

PUBLISHED ON : ஏப் 22, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழபாளையம் கிராமத்தில் வசித்து வந்தான் கருப்பன்; மிகப்பெரிய பணக்காரன்; ஆனால், யாருக்கும் உதவமாட்டான்.

ஒரு நாள் -

சொர்க்கம், நரகம் இரண்டையும் பார்க்க ஆசைப்பட்டான்.

அன்றிரவு உறங்கிக் கொண்டிருந்த போது, பெரியவர் ஒருவர் தோன்றினார். அவன் கையை பற்றியபடி, 'சொர்க்கம், நரகத்தை பார்க்க, ஆசைப்பட்டாய் அல்லவா... வா போய் பார்ப்போம்...' என்று அழைத்தார்.

'ஆஹா... எவ்வளவு நாள் ஆசை...' என்று கூறி, முதலில் நரகத்தை பார்க்க சென்றான்.

அங்கு உணவு நேரம் துவங்கி இருந்தது; பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு, மற்றும் சுவைக்க பதார்த்தங்கள் வைத்திருந்தனர் நரகவாசிகள்.

தட்டில் உணவு பரிமாறப்பட்டது; நாவில் எச்சி ஊற, தட்டில் இருந்த உணவு வகைகளை எடுத்தனர் நரகவாசிகள்.

'ஆஹா... என்ன வாசனை... இப்போதே சுவைக்கலாம்...'

கையை மடக்க முயன்றனர்; எவ்வளவு முயற்சித்தும் உணவை வாய்க்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. வலது கை ஒத்துழைக்கவில்லை.

'ச்சே... கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே...'

ஆத்திரத்தில், கையில் வைத்திருந்த உணவை, கீழே போட்டனர் நரகவாசிகள்.

தாங்க முடியாத பசி, உணவை வாய்க்கு எடுத்துச் செல்ல இயலாத நிலை பற்றி விவாதித்தனர்.

நரகவாசிகள் நிலை பார்த்து வருந்தினான் கருப்பன்; புன்னகைத்த பெரியவர், 'வா சொர்க்கத்திற்கு செல்வோம்...' என அழைத்தார்.

அங்கும் அண்டாக்கள் நிறைய சுவைமிக்க உணவை பறிமாறினர். தேவலோக வாசிகளும், கையை நீட்டி உணவை எடுத்தனர்; ஆனால், கையை மடக்கி வாய் அருகே எடுத்துச் சென்று உண்ண முடியவில்லை.

அதில் ஒருவர் நீட்டிய கைகளால், இனிப்பு பதார்த்தம் ஒன்றை எடுத்து, எதிரே இருந்த தேவலோக வாசிக்கு ஊட்டினார்.

'கையை மடக்கத் தானே முடியாது; நீட்டி, எதிரே இருப்பவரின் வாயில் ஊட்ட முடியும் அல்லவா...' என மாறி மாறி ஊட்டிக்கொண்டனர்.

தேவலோக வாசிகளின் வயிறு நிரம்பியது. அதை பார்த்த கருப்பன், 'பெரியவரே, நரகத்தில் உணவை உண்ண முடியாமல் தவித்தவர்களை பார்த்த போது, மனதில் வருத்தம் மிஞ்சியது... சொர்க்கத்தில், தேவலோக வாசிகள் செய்த காரியம் இன்புற செய்தது; நாம் ஆற்றும் காரியம் நல்லதா... கெட்டதா என்பதை பொறுத்தே, வாழ்க்கை சிறப்பாகிறது என்பதை அறிந்தேன்...' என்றான்.

அதிகாலை கண்ட கனவுக்கு பின் விழித்தவன், 'இனி, ஒருவருக்கொருவர் உதவி செய்து, வாழ்வது தான் சொர்க்கம்' என நினைத்து செயல்பட்டான். இயன்ற உதவியை செய்து, நல்வாழ்வு வாழ்ந்தான் கருப்பன்.

குழந்தைகளே... பிறருக்கு கொடுத்து மகிழ்வது மிகச்சிறந்த பண்பு.

எஸ்.பிரேமாவதி






      Dinamalar
      Follow us