
அன்புள்ள ஆன்டி...
என் வயது, 12; அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவி. நாங்கள் பணக்காரரும் இல்லை; ஏழையும் இல்லை. எங்கள் வீட்டு சமையல், கேஸ் அடுப்பில் தான் செய்யப்படுகிறது.
சமீபத்தில், என் பள்ளி தோழி வீட்டுக்கு சென்றிருந்தேன்; அங்கு, 'மைக்ரோவேவ் ஓவன்' பார்த்தேன்.
ஓவன் நல்லதா, கெட்டதா... நாங்களும், ஓவன் வாங்கலாமா என யோசிக்கிறோம். அது பற்றி, கூடுதல் தகவல்கள் சொல்லுங்க ஆன்டி...
இப்படிக்கு,
எஸ்.மரகதவல்லி.
அன்பு செல்லம்...
ஆதி மனிதன், சிக்கி முக்கி கற்களை வைத்து, நெருப்பை உருவாக்கி, மாமிசத்தை சுட்டு தின்றான்.
பின்னாளில், சமையலை சுவைப்படுத்த, எண்ணெய், மசாலா பொருட்கள், வாசனை பொருட்கள் சேர்த்தான்.
விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு, கேஸ் அடுப்பு, மின் அடுப்பு மற்றும் நுண்ணலை அடுப்பு என, சமையல் நெருப்பு, பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.
சமையலில், சுடுதல், வேதல், வாட்டல், வேக வைத்தல் மற்றும் கொதித்தல் என, பல வகைகள் உள்ளன.
மின் அடுப்பை, வட அமெரிக்க நாடான, கனடாவை சேர்ந்த தாமஸ் அகியம் கண்டுபிடித்தார்.
நுண்ணலை அடுப்பை, 1946ல் டாக்டர் பெர்சி ஸ்பென்சர் கண்டுபிடித்தார். நுண்ணலை அடுப்பு, அணு ஆயுதத்தை விட ஆபத்தானது. அதை கிழக்காசிய நாடான ஜப்பானில், தடை செய்து விட்டதாக ஒரு வதந்தி, 'வாட்ஸ் ஆப்'பில் பரவியது.
அது அப்பட்டமான பொய்; நுண்ணலை அடுப்பு மூடியிருந்தாலும், நுண்ணலைகள் உற்பத்தி ஆகியவாறே இருக்கும். பராமரிக்கவில்லை என்றால் கசியும்; அணைத்து வைப்பது நல்லது.
நுண்ணலை அடுப்பின் அதிகபட்ச வெப்பம், 212 டிகிரி பாரன்ஹீட். அதன் அருகே குனிந்து, நெருக்கமாக பார்ப்பதை தவிர்த்து, கண்களை பாதுகாக்க வேண்டும்.
நுண்ணலை அடுப்பு சமையலில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது நல்லது. முட்டையை ஓட்டுடன் வேக வைக்க கூடாது. வெடிக்கும்; கிரில்லிங் பேக்கிங் செய்யும் போது, கட்டாயம் கையுறை அணிய வேண்டும்.
கப்பில் தண்ணீர் எடுத்து, வினிகர், எலுமிச்சை பிழிந்து, நுண்ணலை அடுப்புக்குள், அரை மணி நேரம் வைக்கவும். பின், அடுப்பை அணைத்து, தண்ணீர் தொட்டு, 'ஸ்கிரப்பர்' வைத்து அடுப்பை சுத்தம் செய்யவும்.
அதிக வெப்ப நிலையில், அடுப்பு இருக்கும் போது, அணைக்க கூடாது; காற்றை வெளியேற்றும் விசிறியின் மூலம், வெப்பத்தை வெளியேற்றிய பின், அடுப்பை அணைக்க வேண்டும்.
நுண்ணலை அடுப்புகளில், 'மேக்னெட்ரான்' நுண்ணலைகளை உற்பத்தி செய்கிறது. அது நீர்மூலக்கூறுகளை அதிர வைக்கிறது. அந்த அதிர்வலைகள் காரணமாக, உணவிலுள்ள மூலக்கூறுகள், ஒன்றொடொன்று உரசி, வெப்பம் பெருகுகிறது. அந்த வெப்பத்தில் சமையல் நடக்கிறது.
உண்ணும் உணவில், கலோரியை குறைக்க வேண்டும் என விரும்புவோர், நுண்ணலை அடுப்பின் மூலம், எண்ணெய் இல்லாத மாமிசத்தை சமைத்து உண்ணலாம்.
- அள்ளக்குறையா அன்புடன்,
பிளாரன்ஸ்.

