
வியப்பூட்டும் கடல்!
உலகில் மிகப்பெரியது பசிபிக் பெருங்கடல். இதில், 'மரியானா' என்ற மிக ஆழமான அகழி இருக்கிறது. அதன் உள்ளே, 'சேலஞ்சர்' என்ற பகுதி, 35 ஆயிரத்து 760 அடி ஆழம் உடையது. இதன் அடிப்பகுதி வரை சென்று தரையைத் தொட்டு திரும்புவது எளிதானது இல்லை. நிலாவுக்கு போய் வருவது போல் சவலானது.
அமெரிக்க கடற்படை வீரர் டான் வால்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து கடலாய்வு அறிஞர் ஜேக்கஸ் பிகார்ட் ஆகியோர், 1960ல், 'டிரைஸ்டி' என்ற நீர்மூழ்கிக் கப்பலில் சேலஞ்சர் பகுதிக்கு சென்று, 30 நிமிட நேரம் தங்கி திரும்பினர்.
தொடர்ந்து, 52 ஆண்டுகளுக்கு பின், வட அமெரிக்க நாடான கனடாவை சேர்ந்த திரைப்பட இயக்குனரும், ஆழ்கடல் ஆய்வாளருமான ஜேம்ஸ் கேமரூன், தான் உருவாக்கிய நீர்மூழ்கியில் தன்னந்தனியாக, சேலஞ்சர் பகுதிக்கு சென்று சில மணிநேரம் தங்கியிருந்தார். ஆய்வுக்காக சில பொருட்களையும் எடுத்து வந்தார். சேலஞ்சர் ஆழ்கடலுக்கு சென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் மலையேற்ற வீராங்கனை வனாசா ஓபிரையன்.
சேலஞ்சர் ஆழ்கடல் பகுதி அமைதிப்பூங்காவாக இருக்கும் என எண்ண வேண்டாம். எரிமலை வெடிப்பது போன்ற ஓசை, கப்பலில் புரபெல்லர் கருவி இயங்குவது போன்ற சத்தங்கள் கேட்டபடியே இருக்கும். இது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.
கடலுக்கு அடியில் ஆழப்பகுதியில் போகப்போக அழுத்தம் அதிகரிக்கும். மிகவும் ஆழ் கடலான சேலஞ்சர் பகுதியில் நீரின் அழுத்தம், 16 ஆயிரம் பி.எஸ்.ஐ., வரை இருக்கும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். பி.எஸ்.ஐ., என்பது அழுத்தத்தை குறிப்பிட பயன்படும் அளவுமுறை. ஒரு பெரிய ஆண் யானையின் உடலுக்கு அடியில் நம் கட்டை விரல் சிக்கினால் எப்படி இருக்கும். அந்த அளவு அழுத்தம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடலுக்குள் ஆறு!
வட அமெரிக்க நாடான மெக்சிகோ, துலும் கடற்பகுதியில் ஸ்கூபா டைவிங் உடையணிந்து, நண்பருடன் முக்குளித்துக் கொண்டிருந்தார் அனடோலி. அப்போது கடலின் தரைப்பகுதியில், ஆறு ஒன்று ஓடுவதை கவனித்தார். நிலப்பரப்பில் ஆற்று வெள்ளம் பாய்ந்து ஓடுவது போலவே இருந்தது. ஆற்றின் கரையில் இலைகளுடன் மரங்கள் இருந்தன. இந்த கடலடி ஆற்றுக்கு, 'செனோரி ஏஞ்சலிட்டா' என்று பெயர் சூட்டியுள்ளனர்.
மேற்காசியா பகுதியில், கருங்கடல், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல் கடற்பகுதிகளிலும் ஆறுகள் பாய்வது கண்டறியப்பட்டுள்ளது. கருங்கடல் பகுதியில் பாயும் ஆறு பற்றி டாக்டர் டான் பார்சன் ஆய்வு செய்திருக்கிறார். ஆஸ்திரேலியா அருகே கடலில், 'ரோபோ' இயந்திரங்கள் துணையுடன் இது கண்டறியப்பட்டுள்ளது.
தங்க கடல்!
கடலில், 2,000 கோடி கிலோ அளவுக்குத் தங்கம் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இப்படி மதிப்பு மிக்க தங்கத்தை வல்லரசு நாடுகள் விட்டு வைத்திருக்குமா... என்ற கேள்வியும் எழும்.
இது முழுதும் புதையல் போல குவிந்திருக்கவில்லை. கடல் நீரில் கரைந்துள்ளது. பிரித்தெடுக்கும் செலவு, கிடைக்கும் தங்க மதிப்பை விட பல மடங்கு அதிகம். அதனால் தான் கடல்நீரில் தங்கம் எடுப்பதில் எந்த நாடும் ஈடுபடவில்லை.
குப்பை கடல்!
பெருங்கடல்கள் குப்பைக் கூடையாக மாறிவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், பல ஆயிரம் கோடி கிலோ குப்பை, கடலில் கொட்டப்படுகிறது. இதில் பாதி அளவு பிளாஸ்டிக் பொருட்கள்.
இவை மூழ்காமல் பெரிய தீவு போல் மிதக்கிறது. இதனால், சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதை அழிக்க விஞ்ஞானிகள் கடும் முயற்சி மேற்கோண்டுள்ளனர்.
பூமி உருண்டையின் உயிர்நாடியாகத் திகழ்கிறது கடல். அதில் மாசு ஏற்படாமல் காக்க வேண்டியது நம் கடமை.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

