
01. கவனம்!
ஆற்றில் வலை வீசிக்கொண்டிருந்தார் மீனவர். தேவையான அளவு மீன்கள் கிடைத்தவுடன் சந்தைக்கு புறப்பட்டார்.
ஆற்றங்கரையில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில் அமர்ந்திருந்த குரங்கு வலை வீசி மீன் பிடித்ததை கவனித்திருந்தது. அதுபோல் மீன்பிடிக்க ஆசைப்பட்டு, மரத்தில் இருந்து இறங்கியது.
மீனவர் விட்டு சென்றிருந்த வலையை எடுத்து வீசியது. இப்படியும், அப்படியும் ஆட்டியது. மிகப்பெரிய மீன் ஒன்று வலையில் சிக்கியது. முயற்சி வெற்றி பெற்றதால் மிகவும் மகிழ்ந்தது குரங்கு. உற்சாகத்துடன் வலையை இழுத்தது.
வலையிலிருந்து விடுபட முயன்று, தன் பக்கம் இழுத்தது மீன். பிடியை விடாத குரங்கு ஆற்றில் விழுந்தது. நீச்சல் தெரியாமல் தத்தளித்து, பயத்தில் அலற ஆரம்பித்தது.
மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து வலையிலிருந்து தப்பியது மீன்.
ஆற்று வெள்ளம் குரங்கை அடித்து சென்றது. ஆனால் நல்ல வேளையாக ஆற்றோரம் தாழ்ந்திருந்த மரக்கிளையை பற்றி தப்பியது.
குழந்தைகளே... போதிய பயிற்சியில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். எந்த பணியிலும் தக்க பாதுகாப்பு இருக்கிறதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்!
●●●
02. ருசி!
''அம்மா... பள்ளிக்கு நேரம் ஆகிறது. டிபன் ரெடியா...''
முகத்திற்கு பவுடர் அடித்தவாறே கேட்டான் தாமு.
''இதோ... ஒரு நிமிஷம்...''
அவசரம் அவசரமாக சட்னி அரைக்க முயன்றாள் அம்மா.
''பள்ளிக்கு செல்ல நேரம் ஆகிவிட்டது அல்லவா... சிறிது மிளகாய்பொடி போட்டு கொடுத்துவிடேன்...'' என்றார் அப்பா.
''தாமுக்கு கொத்தமல்லி சட்னி மிகவும் பிடிக்கும்...''
சாப்பாட்டு மேஜையில் ஆவி பறக்க இட்லி, சட்னி வைக்கப்பட்டிருந்தது.
அருகில் மதிய உணவும், குடிநீரும் கூடையிலிருந்தன.
சீருடை அணிந்து மேஜைமுன் அமர்ந்த தாமு, ''ச்சே... கொத்தமல்லி சட்னி ஒரே உப்பும்மா...'' என்று கத்தினான்.
''அடடா... இரண்டு முறை உப்பு போட்டுட்டேனா...''
வருத்தத்தை வெளிப்படுத்தினாள் அம்மா.
இடைமறித்து, ''இல்லையே... எனக்கு உப்பு சரியா தானே இருக்கு...'' என்றார் அப்பா.
அதை கேட்டதும் இட்லி தட்டை துாக்கி எறிந்து, ''அப்பா... நான் பொய்யா சொல்றேன். எனக்கு டிபன் வேண்டாம்...'' என்றபடி வெளியேறினான் தாமு.
அன்புடன் அழைத்தபடி அவன் பின்னால் ஓடினாள் அம்மா.
கோபத்துடன் மிதிவண்டியில் எறி பறந்தான் தாமு.
செய்வதறியாது திகைத்தனர் பெற்றோர்.
பள்ளிக்கு சென்றதும் வீட்டில் நடந்த சம்பவம் பற்றியே சிந்தித்து கொண்டிருந்தான் தாமு.
படிப்பிலோ, விளையாட்டிலோ மனம் ஈடுப்படவில்லை.
'அம்மா செய்த தவறை அப்பா கண்டிக்கவில்லை; வாய் கூசாமல் பொய் சொல்கிறார்; இரவு இது பற்றி கேட்டே தீர வேண்டும்'
தீர்க்கமாக முடிவு செய்தபடி வீடு திரும்பினான் தாமு.
இரவு சாப்பாட்டின் போது, மவுனம் நிலவியது.
அதை கலைக்கும் விதமாக, ''அப்பா... காலையில் நீங்க சொன்னது பொய் தானே... கொத்தமல்லி சட்னியில் உப்பு அதிகம் இருந்ததா... இல்லையா...'' என்று கேட்டான் தாமு.
மிகவும் பொறுமையாக, ''நீ சட்னியோட ருசியை மட்டும் தான் பார்த்தாய்; நான், அதில் அம்மாவின் உழைப்பையும், விரும்பிய சட்னியை செய்து கொடுக்கும் ஆர்வத்தையும் சேர்த்தே பார்த்தேன்...
''அதிகாலை எழுந்து, வீட்டு வேலைகளை முடித்து, நமக்கு காலை மற்றும் மதிய உணவு தயாரிக்கிறாள்; அதில் எவ்வளவு சிரமம் இருக்கும். அந்த சட்னியில் அம்மாவின் அன்பையும், அலுத்து கொள்ளாத உழைப்பையும் பார்; அப்போது சுவை கூடுவது தென்படும்...'' என்றார்.
தவறை உணர்ந்து, ''என்னை மன்னித்துவிடுங்கள்...'' என்றான் தாமு. இனி இது போல் செய்வதில்லை என சபதம் ஏற்றான்.
குழந்தைகளே... சிறு குறைகளை பெரிதுபடுத்தினால் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்பதை மனதில் கொள்ளுங்கள்!
- ஸ்ரீ மல்லிகா குரு

