PUBLISHED ON : ஜூன் 17, 2023

திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமம், தம்பித்தோட்டம் மேல்நிலைப் பள்ளியில், 1991ல், 7ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியராக இருந்த முருகேசன், விடுதி காப்பாளராகவும் பொறுப்பு வகித்தார். தன்னம்பிக்கை மற்றும் பொது அறிவு சார்ந்த கருத்துக்களை தெளிவாக கூறி மாணவர்களை கட்டுப்பாட்டிலே வைத்திருப்பார்.
அப்போது, அறிவொளி இயக்கத்தை அரசு கொண்டு வந்திருந்தது. அதில், பயிற்றுனராக பயிற்சி பெற நான் சேர்ந்திருந்ததை அறிந்த ஆசிரியர், 'எந்த நோக்கத்தில் சேர்ந்துள்ளாய்...' என்று கேட்டார். நிதாமானமாக, 'என் வீட்டிற்கு அருகே எழுத படிக்க தெரியாத பலர் உள்ளனர். படிப்பு தவிர, ஓய்வு நேரத்தில் கற்பிக்க போகிறேன்...' என்று கூறினேன்.
என்னை பாராட்டி, 'எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதை மனதில் கொள். முதியோருக்கு கற்றுக் கொடுக்கும் போது பொறுமையை கடைப்பிடி... எழுத படிக்க தெரியாதவர்களுக்கு, எதுவுமே தெரியாது என எண்ணிவிடாதே...' என்று அறிவுரைத்தார். அதை மனதில் நிறுத்தி செயல்பட்டேன்.
என் வயது, 43; இல்லத்தரசியாக இருக்கிறேன். என் குழந்தைகளுக்கும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கும் மாலை நேரத்தில் பாடம் கற்பித்து வருகிறேன். ஒவ்வொரு முறை கற்றுக் கொடுக்கும் போதும், அந்த ஆசிரியர் கூறிய அறிவுரை மனதில் நிழலாடுகிறது.
- ம.வசந்தி, திண்டிவனம்.

