
திருப்பூர், நஞ்சப்பா ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1971ல், 9ம் வகுப்பு படித்தேன். தலைமை ஆசிரியராக இருந்தார், ஆர்.ஜி.சுப்பரமணியம். படிக்காமல், சண்டித்தனம் செய்வோருக்கு வினோத தண்டனை தருவார்.
சேட்டை செய்வோரை அறைக்கு அழைத்து சட்டையை கழற்றி வைக்க சொல்வார். பின், பள்ளி வளாகத்தில் கிடக்கும் குப்பையை சேகரித்து அகற்ற உத்தரவிடுவார். கழிப்பறையில், கரியால் ஆபாச படங்கள் வரைந்து, எழுதியிருந்தால் அழித்து சுத்தம் செய்ய கட்டளையிடுவார்.
இவற்றை சரியாக நிறைவேற்றினால் சட்டை அணிய அனுமதிப்பார். பின், தனியாக அழைத்து, 'தண்டனையை கெட்ட கனவாக மறந்து விடு. சண்டித்தனம் செய்வதற்கு பதில் படிப்பில் கவனம் செலுத்து. எது தெரியாவிட்டாலும் என்னிடம் வா... கற்றுத்தருகிறேன்...' என தலையைக் கோதி ஆசிர்வதிப்பார்.
இது போன்ற நடைமுறையால் ரவுடித்தனம் செய்துவந்த கில்லாடிகள் திருந்தி, படிப்பில் கவனம் செலுத்தி பரிசு வாங்குவதை கண்டிருக்கிறேன்.
எனக்கு, 68 வயதாகிறது. வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் ஆலோசகராக உள்ளேன். அந்த தலைமை ஆசிரியரிடம் கற்றதை பெருமிதமாக கருதுகிறேன்.
- ஆர்.ராஜேந்திரன், கோவை.
தொடர்புக்கு: 95970 75989

