
தென்காசி, ஐ.சி.ஈஸ்வரன் பிள்ளை உயர்நிலைப் பள்ளியில், 1971ல், 8ம் வகுப்பு படித்தபோது வகுப்பு ஆசிரியராக இருந்தார் ராமசுப்பையர்.
ஒரு நாள் பாடவேளையில் நகம் கடித்துக் கொண்டிருந்த என்னை கண்டித்தார். சிறிது நேரத்திற்குப் பின், அறியாமல் அதை மீண்டும் செய்தேன்.
உடனே, 'பெஞ்ச்' மேல் ஏறி நிற்கும் தண்டனை தந்தார். என்னை பார்த்து ஏளனமாக சிரித்தனர் மாணவர்கள். அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். கோபம் கொப்பளித்தபடி இருந்த என்னிடம், 'அந்த ஆசிரியரின் குடையை பழைய பொருட்கள் போட்டிருக்கும் அறையில் மறைத்து வைக்கலாம்...' என ஆலோசனை கூறினான் நண்பன். அதன்படி செய்தேன்.
வகுப்புகள் முடிந்த போது நல்ல மழை பெய்தது. நாங்கள் வீட்டுக்கு சென்று விட்டோம். நீண்ட நரேம் தேடி அலைந்த ஆசிரியர், அந்த குடையை கண்டு எடுத்ததாக அறிந்தேன்.
மறுநாள் வகுப்புக்கு சென்றதும் பிரம்பால் அடித்து, தனியே அமர வைத்தார். மன உளைச்சலில் அழுதபடி இருந்தேன். மதிய உணவு இடைவேளையில் என்னை அழைத்து, 'நன்றாக படிக்கும் நீ இப்படியெல்லாம் செய்யலாமா... தீய பழக்கங்களை தொடர்ந்தால், வாழ்வின் திசை மாறிவிடும்...' என அறிவுரைத்தார்.
அத்துடன், 'தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்' என்ற குறளை சுட்டி, 'தீய செயல்களால் தீமையே விளையும். எனவே, அதை தீயை விடக் கொடுமையாக கருதி தவிர்க்க வேண்டும்...' என விளக்கினார். அது மனதில் பதிந்தது.
என் வயது, 63; அசோக் லேலாண்ட், எல் அன்ட் டி போன்ற நிறுவனங்களில் மனிதவள மேலாண்மை பிரிவில் தலைமை பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றேன். வாழ்வில் அந்த ஆசிரியர் கூறிய அறிவுரையை தவறாமல் பின்பற்றியதால் மேடை பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் உயர்ந்துள்ளேன்!
- முனைவர் டி.கணேசன், சென்னை.
தொடர்புக்கு: 94447 94010

