PUBLISHED ON : ஜூன் 24, 2023

ரயில் சிக்னல்!
ரயில் புறப்படும் போதும், பயணத்திலும் ஹாரன் ஒலிப்பதை கேட்கலாம்; இது, ரயில் பாதையில் நடமாடும் மனிதர், விலங்கு மற்றும் ஊழியர்களை எச்சரிப்பதற்காக என எண்ணுகிறோம்.
உண்மையில், ஹாரன் ஒலி இதற்காக மட்டும் எழுப்பப்படுவதில்லை. ரயில் ஓட்டுநர்கள், தகவல் பரிமாற்றத்துக்கும் ஒலியை பயன்படுத்துகின்றனர். இதற்காக, 11 விதமாக ஒலி எழுப்பும் முறையைக் கற்றுள்ளனர். அவை ஒவ்வொரு வகையில் தகவல் பரிமாறுகிறது.
ரயிலில் பயன்படுத்தப் படும் ஹாரன் ஒலி பற்றி பார்ப்போம்...
* ஒருமுறை சிறிய ஹாரன் எழுப்பினால், ரயிலை பணிமனைக்கு எடுத்து செல்வதாகவோ, பழுது நீக்கிய பின் திரும்ப வருவதாகவோ அர்த்தம்!
* இரு முறை சிறிய ஹாரன் ஒலித்தால், ரயிலின் பின்புறம் உள்ள கார்டு ஊழியருக்கு, ரயில் புறப்படுவதை தெரிவிப்பதாக இருக்கும். ரயில் ஒரு நிலையத்தில் இருந்து புறப்படும் போது, இது போன்ற ஒலியை கேட்கலாம்!
* மூன்று முறை சிறிய ஹாரன் ஒலிப்பது, மிக அரிதாகவே பயன்படுத்தப்படும். ஓட்டுநரின் கட்டுப்பாட்டில், ரயில் இல்லை என, பின்புறம் இருக்கும் கார்டுக்கு சிக்னல் கொடுப்பதாக அமையும் இந்த ஒலி. இந்த சிக்னல் கிடைத்ததும், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரேக்கை பயன்படுத்தி, ரயிலை நிறுத்துவார் கார்டு. இந்த ஹாரன் ஆபத்து என்ற எச்சரிக்கையை தரும்!
* நான்கு முறை சிறிய ஹாரன் ஒலித்தால், ரயிலில் தொழில்நுட்ப கோளாறு அல்லது ஓடும் பாதையில் சிக்கல் என்று பொருள். பயணத்தை தொடர முடியாத நிலையில், பின்புறத்தில் இருக்கும் கார்டிற்கு இந்த வகையில் தகவல் தெரிவிப்பார் ஓட்டுநர்!
* ரயில் ஒரு நிலையத்தில் நிற்காமல் வேகமாக கடக்கும் போது, தொடர் ஹாரன் ஒலிக்கப்படும்!
* நீண்ட ஹாரனை அடுத்து ஒரு சிறிய ஹாரன் என அடுத்தடுத்து ஒலிக்கப்படும். இது பெரும்பாலும், ரயில் புறப்படும் இடத்தில் ஒலிக்கும். ரயில் ஒரு இடத்தில் நிறுத்தப்படும் போது, இன்ஜின் டிரைவர் மற்றும் கார்டு இருவருமே பிரேக் போட்டிருப்பர். ரயில் இன்ஜினை, 'ஸ்டார்ட்' செய்யும் முன், கார்டை அலார்ட் செய்து, அந்த பிரேக்கை ரிலீஸ் செய்ய, இந்த ஒலி உதவுகிறது!
* இரண்டு நீண்ட ஹாரன், தொடர்ந்து இரண்டு சிறிய ஹாரன், அடுத்தடுத்து ஒலித்தால், அது ரயில் அபாய கட்டத்தில் இருப்பதாக அர்த்தம். ரயில் இன்ஜினில், பிரச்னை காரணமாக கட்டுப்படுத்த முடியாவிட்டால் இந்த வகை ஹாரன் ஒலிக்கப்படும். உடனடியாக, ரயிலில் பின் பெட்டியில் உள்ள கார்டு, இன்ஜின் கண்ட்ரோலை எடுத்து, ரயிலை நிறுத்த வேண்டும்!
* இடைவெளியில் இரண்டு ஹாரன் ஒலித்தால், ரயில் கிராசிங்கை கடக்கப்போகிறது என அர்த்தம். இது ரயில்வே கிராசிங்கில், காத்திருக்கும் மக்களை எச்சரிப்பதாகும்!
* இரண்டு நீண்ட ஹாரனை தொடர்ந்து, ஒரு சிறிய ஹாரன் அடுத்தடுத்து ஒலித்தால், ரயில் ஓட்டுநர், 'டிராக்' மாற்றுகிறார் என அர்த்தம். பெரும்பாலும் நிலையங்களில், ரயில் நுழையும் போது இந்த வகை ஹாரன் ஒலிக்கும்!
இரண்டு சிறிய ஹாரனுடன் நீண்ட ஹாரன் ஒலித்தால், அதற்கு இரண்டு அர்த்தம் இருக்கலாம். ஒன்று, ரயில் பயணி, அபாய சங்கிலியை இழுத்திருப்பார் அல்லது ரயிலில் பின்புறம் இருக்கும் கார்டு, பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தியிருப்பார். இந்த நிலைகளில் இது போல் ஒலி எழுப்பப்படும்!
* ஆறு முறை சிறிய ஹாரன் அடிப்பதை, மிக அரிதாகத் தான் கேட்க முடியும். ரயில் ஏதாவது ஆபத்தில் சிக்கிவிட்டால், இது போல் ஒலித்து எச்சரிக்கை விடுவர். ரயிலை, பயங்கரவாதிகள் கடத்தினாலோ, வழிப்பறி கொள்ளையரிடம் சிக்கினாலோ, வனவிலங்குகள் தாக்கினாலோ இது போல் ஒலிக்கப்படும்.
இது போன்ற சிக்னல் முறை, ரயில் ஓட துவங்கிய காலத்தில் விதியாக வகுக்கப்பட்டன. அந்த காலத்தில், ரயிலில் இன்ஜின் பகுதியில் இருக்கும் ஓட்டுநருக்கு, பின்புறம் கடைசியில் உள்ள கார்டுடன் தொடர்பு இருக்காது. அதனால், ஒலி எழுப்பி, தகவல் பரிமாறினர்.
ஆனால், இன்று அப்படி அல்ல; வயர்லெஸ், அலைபேசி தொடர்பு முறைகள் வந்துவிட்டன. தகவல்களை நொடிப்பொழுதுக்குள் பரிமாற முடிகிறது.
இந்நிலையில், ஹாரன் மூலம் தரும் சிக்னல்கள் தற்போது கடமைக்காக பின்பற்றப்படுகின்றன.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
