
ஆங்கிலேயர் ஒருவர் வந்த மோட்டார் சைக்கிள் பழுதாகி, கோவை அருகே நடுவழியில் நின்றது. அதன் பழுதை நீக்கும் நிபுணர் யாரும் அந்த பகுதியில் இல்லை. அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், அதை பழுது நீக்கி, அவரது பயணம் தொடர உதவினான்.
அச்சிறுவன் தான் பிற்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகள் பல நிகழ்த்திய, ஜி.டி.நாயுடு!
கோவை மாவட்டம், கலங்கல் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், கோபாலசாமி துரைசாமி நாயுடு. பள்ளி கல்வியில் நாட்டமில்லை. அதனால், கோவையில் ஓர் உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதில் கிடைத்த பணத்தை சேமித்து, ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கினார். அதை, உடனே பகுதி பகுதியாக பிரித்து, இயங்கும் விதத்தை ஆராய்ந்தார். பின், மீண்டும் சேர்த்தார்.
இயந்திரவியல் பணி செய்யும் பொறியியல் கூடம் ஒன்றை அமைத்தார். அதுதான், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவரை சாதனை படைக்க வைத்தது.
அந்த காலத்திலேயே கேமரா ஒன்றை வடிவமைத்தார் ஜி.டி.நாயுடு. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை ஆண்ட ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், 1935ல் இறந்தார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை அந்த கேமராவில் படம் பிடித்தார் ஜி.டி.நாயுடு. இந்திய சுதந்திர போரில் ஈடுபட்ட பிரபல தலைவர்கள் நேதாஜி, காந்திஜி, நேரு, காமராஜர் என அவரது கேமராவில் அகப்படாத பிரபலங்கள் இல்லை.
முதன்முதலில் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் மோட்டாரை, 1937ல் அறிமுகம் செய்தார். மெல்லிய பிளேடு உடைய தானியங்கி முகசவரக் கத்தி ஒன்றையும் வடிவமைத்தார். அது, ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் பரிசுகளை வென்றது.
இரு நபர்கள் பயணம் செய்யும் வகையில், பெட்ரோல் காரை, 1952ல் வடிவமைத்தார். அப்போதைய அரசு, அதை தயாரித்து விற்க உரிமம் தர மறுத்து விட்டது.
முறையான கல்வியறிவு இன்றி, சொந்த முயற்சி, கடின உழைப்பால் முன்னேறினார் ஜி.டி.நாயுடு. அவரது அயராத முயற்சியால், இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லுாரியை கோவையில் அமைத்தார். துவக்கத்தில், ஆர்தர் ஹோப் கல்லுாரி என அது அழைப்பட்டது. பின், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியாக மாறியது.
கோவை நகரில் மருத்துவக் கல்லுாரியை அரசு துவக்கிய போது, தனக்கு சொந்தமான, 153 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக தந்தார். உழைப்பு, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு என, பலருக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டிய மேதை ஜி.டி.நாயுடு!
- அசோக்ராஜா