PUBLISHED ON : ஜூலை 01, 2023

புயல் சின்னம்!
நீரின் இயல்பு பள்ளம் நோக்கிப் பாய்வது... காற்றின் இயல்பு மேல்நோக்கி எழுவது... ஈரக்காற்று என்றால் மெதுவாக மேல் நோக்கிச் செல்லும். வெகு உயரமாக செல்லாது. அதை தாழ்வுநிலை என்பர்.
அழுத்தம் அதிகரித்தால், காற்று அழுத்தத் தாழ்வுநிலை என அழைப்பர். அந்த நிலையில், காற்றின் வேகம் மணிக்கு, 31 கி.மீ., என்ற அளவில் இருக்கும். அதே காற்று மணிக்கு, 62 முதல், 88 கி.மீ., வேகத்தில் வீசினால் புயல் என அழைக்கப்படும். அது, 89 முதல், 118 கி.மீ., வேகத்தில் இருந்தால் கடும்புயல் எனப்படும். காற்று, 119 முதல், 221 கி.மீ., வேகத்தில் வீசினால் மிகக் கடும் புயல் எனப்படும். அது, 222 கி.மீ., வேகத்தில் வீசினால் சூப்பர் புயல் என அழைக்கப்படும்.
புயல் வீசினால் பெரிதும் பாதிக்கப்படுவது, கடலோரப் பகுதிகள் தான். குறிப்பாக துறைமுகங்கள் செயலிழக்கும். எனவே, துறைமுகத்தை நோக்கி வரும் படகு, கப்பல்களை எச்சரிக்கும் விதமாக, 'சிக்னல்' கூண்டு அமைக்கப்படுகிறது. இதை சாதாரணக் கம்பத்தில் கொடி போல் ஏற்றினால், அதிவேகமாக வீசும் காற்றில் கிழிய வாய்ப்பு உண்டு. அதனால், கூண்டு போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இது, கடலுக்குள் இருக்கும் கப்பல், படகுகளுக்கு தெரிய ஏதுவாக, துறைமுகத்தின் உயர்ந்த பகுதியில் ஏற்றப்படும். இரவு நேரத்தில் சிகப்பு- - வெள்ளை வண்ணத்தில் பிரகாசமான விளக்கு ஏற்றி எச்சரிக்கப்படும்.
புயல் எச்சரிக்கை கூண்டில், 11 நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையும், காற்றின் தீவிரத்தையும், அளவையும் அறிவிக்கும். புயல் கடுமையாகும் போது கூண்டை, மேலும் மேலும் உயர்த்துவர். இதை, இந்திய வானிலைக் கழகம் தீர்மானித்து அறிவிக்கும்.
துறைமுகத்தில் புயல் குறியீடு அறிவிப்பு விபரங்களை பார்ப்போம்...
கூண்டு எண், 1 ஏற்றப்பட்டால் புயல் உருவாகும் சூழல் உள்ளதாக முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்று பொருள். அப்போது, பலத்த காற்று வீசலாம்; ஆனால், பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்பதை இது குறிக்கும்.
அடுத்து எண், 2 ஏற்றப்பட்டால், புயல் உருவாகியுள்ளது என்று பொருள். துறைமுகத்தில் நிற்கும் கப்பல்கள் பாதுகாப்பாக உடனே வெளியேற வேண்டும் என்பதற்கான அறிவிப்பு அது.
கூண்டு எண்கள், 3, 4 ஏற்றப்பட்டால், பலத்த காற்றுடன் மழை பொழிய வாய்ப்பு உள்ளது. துறைமுகத்தில் கப்பல்களுக்கு ஆபத்து உள்ளது. மோசமான வானிலை நிலவுவதால், கவனமாக இருக்கவும் என எச்சரிக்கும்.
கூண்டு எண்கள், 5, 6 ஏற்றப்பட்டால், கடலில் உருவான புயல் துறைமுகத்தின் இடது அல்லது வலது புறம் கரையைக் கடக்கும் என்று பொருள்.
அடுத்து எண், 7 ஏற்றப்பட்டால் புயல் துறைமுகம் வழியாகவோ அல்லது அதற்கு வெகு அருகிலோ கரையைக் கடக்கும் என எச்சரித்து ஆபத்து அதிகரித்துள்ளதை குறிப்பிடும்.
கூண்டு எண், 8 மற்றும் 9 ஏற்றப்பட்டால் அதிதீவிர புயல் துறைமுகத்தின் இடது புறமோ, வலது புறமோ கரையைக் கடக்க உள்ளதாக கருத்தில் கொள்ள வேண்டும்.
கூண்டு எண், 10 ஏற்றப்பட்டிருந்தால், அதி தீவிரப் புயலால் துறைமுகத்துக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. புயல் நேரடியாகவோ, மிக அருகிலோ தாக்கும்.
வானிலை ஆய்வு மையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதை, கூண்டு எண், 11 அறிவிக்கும். துறைமுகத்தில் நிலைமை கட்டுக்குள் இல்லை. மோசமான வானிலை நிலவுகிறது என புரிந்து கொள்ள வேண்டும்.
வானிலை குறியீட்டு நிலைகளை அறிந்து அதற்கேற்ப செயல்படுவோம்!
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
