தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : நவ 25, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பனம் பழத்தில் சுவை உணவுகள்!

அளவில் பெரியது பனை; சிறியது தினை என்கிறது பழந்தமிழ் இலக்கியமான, திருக்குறள். தினை என்ற தானிய அளவே ஒருவர் நன்மை செய்திருந்தாலும், அதை பனை போல் பெரிதாக கருதி, உதவியின் அருமை தெரிந்தவர் போற்றுவர் என்கிறது.

புல் இனத்தைச் சேர்ந்த தாவரம் பனை. ஆப்ரிக்காவைத் தாயகமாக உடையது. ஆசிய நாடுகளில் தான் அதிகம் உள்ளது. தமிழகத்தில், மரம் என்றே அறியப்படுகிறது. மாநில மரமாகவும் அரசின் கவுரவம் பெற்றுள்ளது.

இயற்கையாக விதை விழுந்து முளைத்து பெருகும். முதிர்ச்சியடைய, 30 ஆண்டுகள் வரை எடுக்கும். வளைவு இன்றி, 30 மீட்டர் உயரம் வரை வளரும். தண்டு பகுதி விட்டம் 1 மீட்டர் வரை இருக்கும். உச்சியில் விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

பனையை, கற்பகத்தரு என புராணக்கதைகள் கூறுகின்றன. தமிழகத்தில் எழுதுவதற்கு, பனை ஓலையே பழங்காலத்தில் பயன்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வேதபுரீஸ்வரர் உட்பட கோவில்களில் புனித தலமரமாக பனை விளங்குகிறது. பனை ஓலை சுவடி புத்தகங்களின் அருங்காட்சியகம், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ளது.

பனையில், ஆண் மரத்தை, 'அழகுபனை' என்பர். இதில், நுங்கு, பனம்பழம் கிடைக்காது. பெண்ணை, 'பருவபனை' என்பர்.

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு பனைமரங்கள் தனியாக பரமாரிக்கப்படுகின்றன. இதில், 'ைஹப்பேன் திபைக்கா' என்ற பனை வகையும் உள்ளது. இது கிளைகள் உடையது.

நம் நாட்டில், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் எடுத்த கணக்கெடுப்பில், 10 கோடி பனை மரங்கள் இருப்பது தெரியவந்து உள்ளது. தமிழகத்தில் மட்டும், 5 கோடிக்கு அதிமாக உள்ளன. பழங்காலத்தில், பனம் பழத்தை, சோப்பாகவும், பற்பசையாகவும் பயன்படுத்தினர்.

பனையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் முதன்மையானது பதநீர் என்ற பானம். இதை காய்ச்சி, கருப்பட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனங்கூழ் என்ற உணவுப் பொருட்களை தயாரிக்கலாம். பழந்தமிழ் இலக்கியமான புறநானுாற்று பாடலில் சோழ நாட்டு படை, நுங்கு, பனம்பழம், சுட்டக்கிழங்கு சாப்பிட்டதாக குறிப்பு உள்ளது.

ஒரு பனை மரம்...

* ஓராண்டில், 150 லிட்டர் பதநீர் தரும். இதை காய்ச்சினால், 16 கிலோ வரை பனை வெல்லம் கிடைக்கும். கற்கண்டும் தயாரிக்கலாம்

* கோடையில், குளிமை தரும் நுங்கு, பனம்பழம், சத்துமிக்க கிழங்கு தரும்

* பனை ஓலை, மட்டையில் கூடை, துாரிகை, பாய், பெட்டி, விசிறி தயாரிக்கலாம். இவை, அன்றாடம் வீடு, அலுவலக உபயோகத்துக்கு உதவும்.

பதநீர், நறுமணம் மிக்க பானம். பருகினால் உடலுக்கு நலம் தரும். இதில், புரதம், கனிமங்கள், உயிர்சத்துகள், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் அதிகம் உள்ளன. எளிதில் செரிக்கக் கூடியது.

அண்டை நாடான இலங்கை, ஆசிய நாடுகளான கம்போடியா, வியட்நாம் போன்றவற்றில் பனையில் பலவகை உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இந்த முயற்சி தமிழகத்திலும் சமீப காலமாக நடந்து வருகிறது. சென்னையில் நடந்த கண்காட்சியில் நவீன முறையில் தயாரித்த பனை உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவை, பனம் பழம், பனை வெல்லம், கற்கண்டு பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருந்தன.

அவற்றில் பனை மைசூர்பாகு, பதநீர் முந்திரி அல்வா, பனம்பழ பால்கோவா, பனம்பழ ஜிலேபி, பனம்பழ ஜாமுன் போன்ற உணவுகள் சிறுவர், சிறுமியரை பெரிதும் கவர்ந்தன. இது போல் தயாரிக்கப்படும் பொருட்களால் நம் நாட்டின் உணவு வளம் பெருகும்.

சூழல் காக்கும்!

பனைமரம் சூழல் பாதுகாப்பில் பெரும் பங்காற்றுகிறது.

கடற்கரையில் அடர்ந்து வளர்வதால் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும். இதனால் மணல் திட்டுகள் உருவாகி கடல் உட்புகுவது தடுக்கப்படும். சுனாமி போன்ற பேரிடர்களின் போது கரையை பாதுகாக்கும்.

ஜல்லி வேர்களை உடையது பனை. அவை நிலத்தில் ஆழமாக போகாது. மரத்தைச் சுற்றி மூன்று அடி வரை படர்ந்து இருக்கும். பனை இலை, ஓலை எனப்படுகிறது. அது, விசிறி போல் இருக்கும். அது மரத்தில் விழும் மழை நீரை சிதறாமல் தடுத்து தண்டு வழியாக வேர் பகுதியில் சேமிக்க வகை செய்யும். இதனால் வறட்சியை தாங்கி வளரும்.

பனை ஓலை மற்றும் மட்டையில் ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் தயாராகின்றன. இவை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுகிறது. பனங்காடை, துாக்கணாங்குருவி, கரிச்சான், கூழைகடா போன்ற பறவைகள் பனை மரத்தில் கூடு அமைத்து வாழும். பல உயிரினங்கள் வாழும் சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது பனை.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us