தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பேரில் என்ன இருக்கு!

பேரில் என்ன இருக்கு!

பேரில் என்ன இருக்கு!


PUBLISHED ON : நவ 24, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 24, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார் கணேசன். கோபமாக வந்த அவரது மகள், ''அப்பா... என்னோட பேர் கொஞ்சமும் பிடிக்கல. பிரபா எல்லாம் ஒரு பேரா... எத்தனை பழசு; ஸ்டைலா, புதுசா, மாடர்னா வேறொரு பேர் வைங்க...'' என மூச்சு விடாமல் புகாரை சொன்னாள்.

பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கும் அவள் மனக்குறையை கனிவுடன் கேட்டு புன்னகைத்தார் கணேசன். நாளிதழை நிதானமாக மடித்து வைத்து, அவளை அணைத்து மடி மீது அமர்த்தினார்.

மீண்டும் ஆரம்பித்தாள் பிரபா.

''வகுப்புல ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு சூப்பரான பேர் இருக்கு தெரியுமா... நீங்க என்னடான்னா, பழைய பேரை வெச்சுருக்கீங்க; எல்லாரும் கிண்டல் பண்றாங்க...''

''இது உன்னோட பாட்டி பேருடா தங்கம். அதாவது என் அம்மா பேர்...''

''சரி, அதுக்காக... அந்த பேரை ஏன் வைக்கணும். எனக்கு குழந்தை பிறந்தால், நான் அம்மா பேரை வைக்கணுமா...'' என கூறி முறைத்தாள்.

''அடேங்கப்பா...''

மகளின் பேச்சை கேட்டு வியப்பில் ஆழ்ந்தார்.

'இந்த காலத்தில் குழந்தைகள் எவ்வளவு அறிவுடன் திகழ்கின்றனர். ஒன்று சொல்வதற்குள், ஒன்பது விஷயங்களை யோசிக்கின்றனர்' என எண்ணியவரிடம், ''பதில் சொல்லுங்கப்பா. எனக்கு வேற புதிய பேரா வைங்க. இல்லை, நானே தேர்ந்தெடுத்து வெச்சுக்கவா...'' என உலுக்கினாள்.

''பேருல என்னடா இருக்கு... மல்லிகை, ரோஜா, முல்லைன்னு பேரு எப்படி இருந்தாலும், பூவோட நறுமணமும், வண்ணமும் தானே, அதோட தனித்துவத்தை தீர்மானிக்குது... நாம யாரு என்பதை செய்கிற செயல் தான் தீர்மானிக்கணுமே தவிர, பெயர் தீர்மானிக்க கூடாது...

''காந்திஜி, அப்துல்கலாம் எல்லாம் அவங்க பெயரை வெச்சா பிரபலம் ஆனாங்க... இல்லையே... உலகம் அவங்க செயலை அறிந்து மதிக்கிறது... என்ன காரணம். சிந்தித்து பார்; நீயும் ஏதாவது புதுமையான விஷயம் செய்தால், உன் பேரும் பிரபலமாகும்; மற்றவர்கள் உன் பேரை வெச்சுக்க விரும்புவர்...''

சிந்திக்க ஆரம்பித்த பிரபா, ''புரியுதுப்பா... இந்த பெயரே எனக்கு போதும். மிகவும் பிடிச்சிருக்கு...'' என்றாள்.

மகளை பெருமையுடன் தட்டிக் கொடுத்தார் கணேசன்.

குழந்தைகளே... நம் பெயரை பிரபலமாக்குவது, நற்குணமும், செயல்களும் தான் என்பதை உணருங்கள்!

- சகா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us