PUBLISHED ON : நவ 11, 2011

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
மறதியா!
வயதுக்கு ஏற்ப மறதியின் அளவும் வேறுபடும். மூளையின் நினைவு திறன் ஷார்ட் டெர்ம் மெமரி, லாங் டெர்ம் மெமரி என இருவகைப்படும். படிப்பதை மறக்காமல் இருக்க முழுமையாக புரிந்து கொண்டு படிக்க வேண்டும். எழுதி பார்ப்பது, படம் போட்டு பார்ப்பது என பாடங்களின் பின்னணியோடு படிக்க வேண்டும். இவ்வாறு படிக்கும்போது எழுதி படிப்பது மூளையின் இடது புறத்திலும், படம் போட்டு படிப்பது வலது புறத்திலும் பதிவாகும்.
தேர்வு நேரத்தில் ஒன்று உதவவில்லை என்றால் மற்றொன்று உதவும். படிக்கும்போது உங்களுக்கு எது எளிதாக தோன்றுகிறதோ, அதனை முதலில் முடித்துவிடுங்கள். அதோடு தொடர்புடைய பகுதியின் லிங்க் பிடித்து கடினமான பகுதிகளை மனதில் பதிய வையுங்கள். தேர்வுகளின்போது ஏதேனும் பதில் மறந்து போனால் பதறாதீர்கள்.
உங்களுக்கு தெரிந்த விடைகளை முதலில் எழுதி முடித்துவிடுங்கள். கொஞ்சம் ரிலாக்ஸான பிறகு யோசித்தால் மறந்துபோன விடைகளும் பளிச் என நினைவுக்கு வரும்.
கி.மு.127 பாலம்!
பல்லாயிரணக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் நீரின் மீது பெரிய கற்களை நிறுத்தி அதன் மேல் மரங்களை படுக்க வைத்து பாலம் தயாரித்தார்கள். இதை ஆரம்பித்து வைத்தது, மேற்கு ஆசிய மக்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாலங்களில் பெரிய ஆச்சரியம், ரோமானியர்கள் கண்டுபிடித்த வளைவு (ஆர்ச்) பாலம்.
கி.மு.127-ல் தெற்கு இத்தாலியில் கட்டப்பட்ட ஒரு வளைவு பாலம் இன்றும் போக்குவரத்துக்குப் பயன்படுகிறது.
தனி மனிதனால் முடியுமா?
ஒரு பிரச்னைøயை பார்க்கும்போதும் இது தனி மனிதனால் சாத்தியமா என திகைப்பு வரும். சாதனையாளர்கள் எப்படி சாதித்தார்கள் என்ற வியப்பு வரும். உலகில் நிகழ்ந்த அத்தனை புரட்சிகளும் தனி மனிதர்களால் துவக்கி வைக்கப்பட்டவை தான். அதாவது, தனி மனிதன் சக மனிதர்களை புரட்சிக்கு தயார்ப்படுத்த அது காட்டு தீ போல சமுதாயத்தில் பரவ, சமுதாயம் புரட்சியை வெற்றிகரமாக நிகழ்த்துகிறது.
அந்த புரட்சிக்கு மூல காரணம், அந்த தனி மனிதன் என்கிற தீப்பொறி!
நான்கு 'ஆம்' சொல்லுங்கள்!
அன்றாட பொழுது கட்டுப்பாடில்லாமல் தறிகெட்டு ஓடுகிறது என்பதைப் பற்றி உண்மையாக அக்கறைப் படுகிறவரா நீங்கள்?
தினசரி பொழுதை திட்டமிட்டு ஒரு தாளில், டைரியில் எழுதி கொள்பவரா நீங்கள்?
திட்டமிட்ட செயல்களில் காலையில் இருக்கிற வேகம் நாள் முழுவதும் இருக்கும்படி பார்த்து கொள்கிறீர்களா?
என் பணியில் நான் சரியாக இருப்பது சுயநலம் இல்லை... அது என் வாழ்க்கை முறை என்று நம்புகிறவரா நீங்கள்?
நான்கு கேள்விகளுக்கும், 'ஆம்' என்பது உங்கள் பதிவாகட்டும்.
நீங்கள் நிச்சயம் ஒரு சாதனையாளர்தான்!
சோம்பேறித் தனத்தின் உச்சம்!
இரண்டு பேர் ஒரு வீட்டுக்கு திருட போனார்கள். வெற்றிகரமாக எல்லா பொருட்களையும் திருடி முடித்து வெளியே வந்ததும் களைப்புடன் ஓரிடத்தில் அமர்ந்தனர்.
'பணம் எவ்வளவு, தங்க நகை எவ்வளவு வெள்ளி நகை எவ்வளவு என்று எண்ணி பார்க்கலாமா?' என்றான் ஒரு திருடன்.
அதற்கு மற்றவன் சொன்னான், 'விடுறா... நாளைக்கு பேப்பர்ல போடுவானுங்க,' தெரிஞ்சுக்கலாம்!
அன்பு கலாம்!
லைட் ப்ரம் மெனி லேம்ப்ஸ், ப்யர் ஆப் தி மைண்ட், திருக்குறள் இந்த மூன்று புத்தகங்களும் எப்போதும் கலாம் அவர்களிடம் இருக்கும். அடிக்கடி இந்த புத்தகங்களை படிப்பார்.
ஆட்டோகிராப் போடும்போது, 'நாலெட்ஜ்' மேக்ஸ் யு கிரேட்' என்று எழுதி கையெழுத்திடுவதும் கலாம் அவர்களின் ஸ்டைல்!
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது 'பாலக் பக்கோடா'
தேவையானவை: பாலக்கீரை- 1 கட்டு, கடலை மாவு-1/2 கப், அரிசி மாவு-1/4 கப். இஞ்சி, பூண்டு, சோம்பு அரைத்த விழுது -1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய்- பொரிக்கும் அளவு.
செய்முறை: கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கவும். அதனுடன் கடலை மாவு அரிசி மாவு, உப்பு இஞ்சி, பூண்டு சோம்பு விழுது சேர்த்து பிசையவும். பிறகு கொஞ்சம் தண்ணீர் விட்டு பக்கோடவிற்கு தேவையான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பக்கோடாக்களாக போட்டு பொரிந்து எடுத்து சாப்பிட்டால் அப்படியொரு சுவையாக இருக்கும்.
டாட்டா - டேட்டா!
உயிர் பிரியும் தருணத்தில் உயில் எழுதுவார்களா கவிதை எழுதுவார்களா?
ஜப்பானிய மரண கவிதைகள்-ஜென் புத்த பிட்சுகளும், ஹைக்கூ கவிஞர்களும் மரண தருவாயில் எழுதிய கவிதைகள். 1986-ல் வெளியான இந்த நூல், யாரும் எடுத்து சென்று படித்ததற்கான அறிகுறிகள் ஏதும் இன்றி, கண்ணாடி அலமாரியில் வைத்த வண்ண பொம்மையான உறைந்த புதுமையுடன் இருக்கிறது.
ஜப்பானில் மரணம் படுக்கையருகே அமர்ந்து நம் முகத்தையே உற்று பார்த்து கொண்டு இருக்கும்போது உயிலுடன் 'விடைபெறும் கவிதை' ஒன்றும் எழுதுவது உண்டாம். எழுதும் தூரிகையுடன் உயிர்விட்டவர்களும் உண்டு. தோராயமாக ஓர் ஆயிரம் ஆண்டுகளாவது இந்த பாரம்பரியத்தின் வேர்களை ஜப்பானிய வரலாற்றில் அடையாளம் காண முடிகிறது.
'இறப்பவர்கள் புத்தராக மாறிவிடுகிறார்கள்' என்ற நம்பிக்கையில் இருந்து, மரணத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதற்கு 'தயாராவது' வரை, ஓர் இனிய பயணத்துக்கான ஆயத்தம் போலவே ஜப்பானில் மரணம் எதிர்கொள்ளப்படுகிறது.
சாகும்போது எழுதப்பட்டவை என்பது ஒரு துவக்கம்தான்.
என்றென்றும் உங்கள், அன்பில் வாழும், அன்பு அங்குராசு.
