PUBLISHED ON : நவ 11, 2011

(1)
உண்மை நிகழ்ச்சிகளையும், சாதனையாளர்களிடம் இருந்து பெறப்படும் பேட்டிகளையும் சுவைபட எழுதியே பெரும்புகழ் பெற்ற மேதை இர்விங் வாலஸ். இங்கிலாந்து நாட்டில் பிறந்த இர்விங் வாலஸ் எழுத்தாளரானதே ஒரு சுவையான கதை.
இங்கிலாந்து நாட்டில் கடன் வாங்கியவர்கள் விஷயத்தில் அப்போது ஒரு சலுகை தரப்பட்டிருந்தது. கடன் கொடுத்தவர்கள் தாங்கள் கொடுத்த கடனைக் கடன் வாங்கியவர்களிடம் வாரத்தின் மற்ற நாட்களில் மட்டும்தான் கேட்கலாம். ஞாயிற்றுக் கிழமை மட்டும் கேட்கக் கூடாது.
இர்விங் வாலஸ் தாம் நடத்திய தொழிலில் பெரும் நஷ்டமடைய 17 ஆயிரம் பவுன்களுக்குப் பலரிடம் கடன்காரராகி விட்டார். கடன் கொடுத்த வர்கள் தரும் தொல்லை தாங்க முடியாமல், திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை பிறர் அறியாதவாறு மறைந்து வாழ்வார். ஞாயிற்றுக்கிழமை மட்டுமே தாராளமாக வெளியுலகில் நடமாடுவார்.
ஆறு நாட்கள் தலைமறைவாக வாழும் போது வாலஸ்க்குப் பொழுது போவது சிரமமாக இருந்தது. அதனால் மனத்தில் பட்டதையெல்லாம் எழுதத் தொடங்கினார்.
ஒரு சிலவற்றைச் சில பத்திரிகைகளுக்கு அனுப்பினார். சில கட்டுரைகள் பிரசுரமாயின; அவற்றிற்கு வருமானமும் வந்தது. எழுதியும் சம்பாதிக்கலாம் என்று கண்டுகொண்ட வாலஸ், உற்சாகத்துடன் தொடர்ந்து எழுதினார். எழுத்தில் தமக்கென ஒரு பாணி அமைத்துக் கொண்டார்.
அதாவது கற்பனைக் கதைகளை எழுதுவதில்லை. பரபரப்பூட்டும் உண்மை நிகழ்ச்சிகளைத் தேடிக் கண்டுபிடித்து எழுதினார். புகழ்பெற்ற பெரிய மனிதர்கள் மேதைகள் தொழில் நிபுணர்களைப் பேட்டி கண்டு அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான தகவல்களைத் தேடிப் பிடித்து அவற்றைப் பற்றியெல்லாம் எழுதினார்.
வாலஸ் எழுதும் விஷயங்களை, 'சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்', 'ரீடார்ஸ் டைஜஸ்ட்', 'எஸ்கொயர் காஸ்மாபாலிட்டன்' போன்ற பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிட்டு நல்ல ஊதியமும் தந்தன.
1946ஆம் ஆண்டு 'காலியர்ஸ்' பத்திரிகை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வாலஸ் லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்று அரசி எலிசபெத்தையும், அரச குடும்பத்தினரையும் பேட்டி கண்டு மிகவும் சுவையான பேட்டிக் கட்டுரை ஒன்று எழுதினார்.
உலகம் முழுவதிலிருந்து அந்தக் கட்டுரைக்குப் பாராட்டுக் குவிந்தது. இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மாறுவேடத்தில் நாஜிகள் முகாமுக்குள் புகுந்து பல அரிய ரகசியங்களைத் திரட்டி வந்தார். அந்த ரகசியங்கள் அடங்கிய கட்டுரை, உலகமெங்கும் பெரும் பரபரபப்பை ஊட்டியது.
1950 ஆம் ஆண்டு இர்விங் வாலஸ் மரண மடைந்தார்.
(2)
அமெரிக்க நாட்டில் நீக்ரோ இன மக்களின் தலைவராகத் திகழ்ந்து, நீக்ரோ இன மக்களுக்காகவும், அவர்கள் உரிமைகளைக் காப்பதற்காக அருஞ்சேவை செய்தவர் மார்ட்டின் லூதர்கிங்.
அவருக்கு இருந்த உயர்ந்த பெருமை, அவர் காந்தியடிகளைத் தமது அரசியல் குருவாக ஏற்று, அகிம்சை வழியில் தம்முடைய அரசியல் போராட்டத்தை நடத்தியதுதான்.
'காந்தியடிகளின் பேச்சும் எழுத்தும்தான் என்னை அரசியலில் சரியாக நடக்க வழிகாட்டி உதவின!' என்று மார்ட்டின் லூதர்கிங் அடிக்கடி கூறுவது வழக்கம்.
மதகுருவாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த லூதர்கிங், அமெரிக்க வெள்ளையர்கள், நீக்ரோ இன மக்களுக்குச் செய்யும் கொடுமைகளைக் கண்டு மனம் கொதித்தார். நாய்களை விடக் கேவலமாக அவர்களை வெள்ளையர்கள் நடத்துவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர், மதகுரு பணியை விட்டுவிட்டுத் தமது இனமக்களின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதற்காக முழுநேரம் பணிபுரியத் தொடங்கினர்.
பலவிதமான கிளர்ச்சிகளை நடத்திய மார்ட்டின் லூதர்கிங், பன்னிரண்டு முறை சிறையில் வைக்கப்பட்டார்.
அவரைக் கொலை செய்ய வெள்ளையர்கள் பல்வேறு முயற்சிகளைச் செய்தனர். இறைவன் அருளால் ஒவ்வொரு முறையும் தப்பிப் பிழைத்த அவர் கடைசியாக, வெள்ளை வெறியன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்தார். மனித உரிமைக்காகப் பாடுபட்டவர் என்பதற்காக மார்ட்டின் லூதர் கிங்கிற்கு 1964ம் ஆண்டு நோபல் சமாதானப் பரிசு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
தன்னலமற்ற தூய்மையான பொதுநல சேவையின் சின்னமாகத் தமது வாழ்நாளில் அவர் திகழ்ந்தார்!
(3)
பர்மா நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டு வெற்றி பெற்ற தேசபக்தி மாவீரர் ஊநூ. அவர் வெறும் அரசியல்வாதியாக மட்டும் இல்லை; நல்ல கல்விமான், நூலாசிரியர்; ஆழ்ந்த மதபக்தியுள்ளவர்.
கல்லூரியில் படித்த நாட்களிலேயே தீவிரமான தேசிய ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஒரு தடவை பிரிட்டனின் தேசியக் கொடியான, 'யூனியன் ஜாக்'கிற்குத் தீயிட்டுக் கொளுத்தி ஒரு பரபரப்பைத் தோற்றுவித்து விட்டார். கொஞ்சகாலம் ஊநூ பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். சுற்றிலும் நிகழும் விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகள் அவரை அமைதியாக இருக்கவிடவில்லை. பள்ளி ஆசிரியர் பதவியை உதறி எறிந்து விட்டுத் தேசியப் போராட்டத்தில் நேரடியாக இறங்கினார்.
இரண்டாவது உலகப்போர் நிகழ்ந்த போது பர்மிய இளைஞர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஏதிராக ஜப்பானுக்கு ஆதரவு தெரிவிக்க முற்பட்டனர். ஜப்பான் உதவியுடன் பர்மாவை மீட்கவேண்டும் என்று திட்டமிட்டுப் பணியாற்றி, இளைஞர் அணிக்கு ஊநூ தலைமை தாங்கினார். பிரிட்டிஷ் ஆட்சி ஊநூவையும் அவரது சகாக்களையும் தேசத் துரோகக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது. 1942 ஆம் ஆண்டு ஜப்பானியர் பர்மாவைக் கைப்பற்றிய போது ஊநூவும் அவர் தோழர்களும் விடுவிக்கப்பட்டனர்.
இரண்டாவது உலகப்போர் முடிவுற்ற பிறகு, 1946 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு பர்மாவுக்குச் சுதந்திரம் அளித்தது. சுதந்திர பர்மாவுக்கு ஊநூ தலைவரானார்.
ஆனால், அவர் தொடர்ந்து பதவி வகிக்கவில்லை. ஆட்சிப் பொறுப்பை விட்டு விலகி, புத்த துறவியாகி விட்டார். தம்முடைய வாழ்க்கையை ஒரு புத்த துறவியாக இருந்தே ஊநூ முடித்துக் கொண்டார்.
***
