PUBLISHED ON : நவ 25, 2011

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
அழகான தண்ணீர் தமிழ்!
தண்ணீரில் குளம், ஊற்று, அலை, வெள்ளம், காட்டாறு, குட்டை, கடல், அருவி, கிணறு, நதி என எத்தனை விதங்கள். நீங்கள் அதிகம் கேள்விப்படாத தண்ணீர் சம்பந்தமான பெயர்களும் அதன் அர்த்தமும் இதோ...
சுனை- ஊற்று; கூவம்- கிணறு
தீர்த்திகை - நதி; ஊருணி - குளம்
கலுழி - காட்டாறு; விசிகரம் - அலை
கிண்ணகம் - வெள்ளம்
கோட்டயம்!
கேரளாவின் பத்திரிகை நகரம், ரப்பர் நகரம் என பல்வேறு சிறப்புகள் பெற்றது கோட்டயம். கோட்டயம் என்றால் கோட்டைக்கு உள்ளே என்று பொருள். இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் மலையாள மனோராமா நாளிதழின் தலைமையகமும் கோட்டயம்தான். கேரளாவின் ரப்பர் தொழிலுக்கும் இதுதான் தலைமையகம். ரப்பர் எப்படியோ அப்படியே பப்ளிகேஷன்களும். தடுக்கி விழுந்தால் ஒரு பப்ளிகேஷன் முன்புதான் போய் விழ வேண்டும். மலையாளத்தில் கோட்டயத்தை 'அட்சர நகரம்' என்கின்றனர்.
அன்பு கலாம்!
இந்தியாவில் அதிகம் பேசப்படாத தலைவர் 'திப்புசுல்தான்' என்பது கலாமின் கருத்து. காரணம் 1799-ல் ஆங்கிலேயர்கள் திப்புசுல்தானை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்த போது திப்புசுல்தானிடம் ராக்கெட் டெக்னாலஜி இருந்தது.
இதை குறிப்பிட்டு சில இடங்களில் பேசியிருக்கும் கலாம், 'உண்மையில் உலகம் ராக்கெட் ஆராய்ச்சிகளை செய்ய தொடங்கும் முன்பே அதை முழுமையாக கண்டறிந்த நபர் நம்மிடம் இருந்திருக்கிறார்' என்பர்!
கோபுரமும் - பல மொழிகளும்!
'பாபேல் கோபுர நிகழ்ச்சி' என்று பைபிளில் ஒரு செய்தி உண்டு.
அதன் சம்பந்தமான நிகழ்ச்சி...
மக்களின் அக்கிரமம் பெருகிய போது கடவுள் பெரு மழையின் மூலம் உலகத்தையே அழித்தார். அப்போது நீதிமானாய் வாழ்ந்த ஒரு மனிதர் நோவாவையும் அவன் குடும்பத்தையும் மட்டும் காப்பாற்றினார்.
பெருவெள்ளம் ஓய்ந்த பிறகு கடவுள் கருணையால் கப்பலில் 'நோவா'வின் சந்ததியினர் மீண்டும் பல்கிப் பெருக, உலகை மீண்டும் மக்கள் ஆக்கிரமித்தனர்.
கர்வம் தலைக்கு ஏறிய மக்கள், உலகிலேயே உயரமான கோபுரம் ஒன்றை கட்ட துவங்கினர். படிக்கட்டுகளில் ஏறியே சொர்க்கத்தை தொட வேண்டும் என்பது அவர்களின் லட்சியம். இதை பார்த்த இறைவன், மனிதர்களின் திட்டத்தை முறித்து போட திட்டம் போட்டார். அதன்படி ஏராளமான மொழிகளை உருவாக்கினார். அதுவரை ஒரே ஒரு மொழி பேசிய மக்களுக்கு, இப்போது ஆளுக்கு ஒரு மொழி பேசினர். யார் பேசுவதும் யாருக்கும் புரியாமல் கலவரம் வெடித்தது. யார் பேசுவதும் யாருக்கும் புரியாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போதும் கூட்டமும், கூச்சலும் குழப்பமாக ஆளுக்கொன்று பேசிக்கொண்டு இருந்ததால், அதை 'டவர் ஆப் பாபேல்' என்கிறோம்.
பைக் சைடு ஸ்டேண்ட்!
இரண்டு சக்கர வாகனங்களை நீண்ட நேரம் சைடு ஸ்டேண்ட் போட்டு நிறுத்தலாமா? அதனால் ஏதேனும் பாதிப்பு உண்டா? இது பலருக்கும் எழும் டவுட். இரண்டு சக்கர வாகனங்களை பக்கவாட்டு ஸ்டாண்டுகளை பயன்படுத்தி நிக்க வைப்பது தவறில்லை. மணிக்கணக்கில் நிறுத்துவதாக இருந்தால் பெட்ரோல் டேப் மூடியிருப்பதை கண்டிப்பாக உறுதி செய்து கொள்ள வேண்டும். பக்கவாட்டு ஸ்டேண்டில் வண்டி நிற்கும் பொழுது பெட்ரோல் ஓபனில் இருக்க கூடாது. ஓபனில் இருப்பது என்றைக்கும் நல்லதல்ல... நாள் கணக்கில் சைடு ஸ்டேண்டில் வண்டி நிற்கும் பொழுது சக்கரங்களில் காற்றின் அழுத்தம் சரியாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். பொதுவாகவே இரு சக்கர வாகனங்களை வெயிலில் நிறுத்தாதீர்கள்.
அடிக்கடி காற்றை டயரில் செக் செய்யவும். அதே போல பிரேக் செக்-அப்பும், சரியான இடைவெளிகளில் எண்ணெய் ஊற்றலும், தேவை.
அடடே! அப்படியா!
*வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகளில் 10 சதவிகிதத்தினர் அதற்கு அடிமையாக உள்ளனர்.
*கிரேக்க தேசிய கீதத்தில் 158 பாடல் அடிகள் உண்டு.
*வட அமெரிக்காவில் மட்டுமே 600-க்கும் அதிகமான ரோலர் கோஸ்டர்கள் உள்ளன.
*போயிங் 747-400 விமானத்தில் 60 லட்சம் பாகங்கள் உள்ளன.
*ஒருவரின் வாழ்நாள் காலத்தை தீர்மானிக்கும் சக்திகளில் 25 சதவிகிதம் மரபணுக்களே.
*சராசரியாக ஆண்டுக்கு 62 லட்சத்து 5 ஆயிரம் முறை நாம் கண் இமைக்கிறோம்.
*தர்பூசணியில் 200-க்கும் அதிகமான வகைகள் இருக்கின்றன.
*எதிர்மறை சிந்தனைகள் கொண்டவர்களை விட நேர்மறை (பாசிட்டிவ்) சிந்தனைகள் கொண்டவர்கள் 10 ஆண்டுகள் வரை கூடுதலாக வாழ்கிறார்கள்.
*7 மணி நேரத்துக்கு குறைவாவோ, அதிகமாகவோ உறங்குகிறவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மேற்கு வர்ஜினியா பல்கலைக்கழக ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.
மலர் மருத்துவம்!
பூக்களுக்கு மருத்துவ குணம் உண்டா?
மலர்களுக்கு மருத்துவ குணம் உண்டு என்பது உலகமே ஒப்பு கொண்ட உண்மை. நமது இந்திய மருத்துவ முறைகளில் மட்டுமல்லாமல், ஆங்கில மருத்துவத்தில் கூட இதை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. டாக்டர் பேட்ச் என்பவர் மலர்களின் மருத்துவ குணங்களை ஆராய்ச்சி செய்து பல அற்புதமான தகவல்களையும் முடிவுகளையும் கண்டு பிடித்துள்ளார். அதை, 'பேட்ச் பிளவர் ரெமிடீஸ்!' என்று சொல்வர். ஆங்கில மருத்துவத்தில் இது பாப்புலரான விஷயம். நம் இந்திய மருத்துவ முறைகளில் வண்ணமயான நோய்கள் என்று சொல்லப்படும் இரத்தம், இதயம் தொடர்பான நோய்களுக்கு மலர்கள் நல்ல மருந்து என்று சொல்லப்படுகிறது.
ஆவாரம் பூவில் இருந்து தயாரிக்கப்படும் மதுமேக லேகியம் சர்க்கரை நோய், சிறுநீரக நோய்களுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. தாமரை பூவில் இருந்து உருவாக்கப் படும் 'அரவிந்தா ஆசவம்' இரத்த அழுத்த நோய்களுக்கு சிறந்த மருந்து.
ரோஜாவில் இருந்து எடுக்கப்படும், 'அர்த் ஏ அப்ரேசம்' என்ற மருந்தும் இதயத்திற்கு இதமானது. இதுபோல் எல்லா மலர்களிலும் ஏதாவது ஒரு மருத்துவ குணம் இருக்கும். அதில் பல கண்டறியப்பட்டு, நீண்ட நெடுங்காலமாக நமது மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டே வருகிறது. அன்புமிக்க ஆண்டவனிடமும், பெண்களிடமும் மலர்கள் சேருகிறது. மலர்களை பார்க்கும்போதே ஆனந்தம் எழுகிறதே!
என்றென்றும் உங்கள்,
அன்பில் வாழும், அங்குராசு!
