PUBLISHED ON : நவ 25, 2011

ஜமதக்னி முனிவர் வில் வித்தை பயிலும் போது அம்புகளைப் பொறுக்கி வந்து கொடுப்பாள் அவரது மனைவி ரேணுகை.
ஒருநாள் நேரம் போவது தெரியாமல், முனிவர் உற்சாகத்துடன் வில்வித்தை பயின்று கொண்டிருந்தார். சித்திரை மாத நடுப்பகல் வேலை ரேணுகையின் பாதங்கள் சூடுதாளாமல் கொப்பளித்தன; உச்சந்தலை கொதித்தது. லேசாக தலை சுற்றவே, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறிய பிறகு முனிவர் இருக்குமிடம் சென்றாள்.
''ஏன் இத்தனை நேரம்?'' என்று கேட்டார் ஜமதக்னி.
பாதங்களைக் காண்பித்தவள், ''வெய்யிலின் உஷ்ணம் தாங்க முடியவில்லை,'' என்றாள்.
சினம் கொண்ட முனிவர் வில்லிலே பாணத்தைப் பூட்டி சூரியனைக் குறி வைத்தார். இதை உணர்ந்த சூரியன், அந்தணர் வடிவில் அவர் அருகே தோன்றினார்.
''மகரிஷி! ஆகாயத்தில் யாருக்குக் குறி வைத்துள்ளீர்கள்?'' என்று கேட்டான்.
''சூரியனுக்கு... உக்கிரகம் தாங்காமல் தானே அவன் மனைவி அவனை விட்டுப் போனாள்! அவனுக்கு இன்னும் புத்தி வரவில்லை! விசுவகர்மா சாணைக்கல்லில் தேய்த்தும் அவன் உஷ்ணம் அடங்க வில்லையே... அவனுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்,'' என்றார் ரிஷி பார்வையைத் திருப்பாமலே!
''முனி சிரேஷ்டரே! மன்னிக்க வேண்டும். சூரிய உஷ்ணத்தால் தானே பயிர்கள் செழித்து வளர்கின்றன; மேகங்கள் நீர் நிலைகளிலுள்ள நீரை <<உறிஞ்சுகின்றன! அதுவும் தவிர சூரியன் நகர்ந்து கொண்டே இருக்கின்றான். நின்றால் தானே அடிக்க முடியும்?'' என்றான் ஆதவன்.
ஜமதக்னி கடகட வென்று சிரித்தார்.
''பகலில் ஒரு நிமிஷமும், இரவில் ஒரு நிமிடமும் சூரியன் அசையாது நிற்பான். அதற்கு, 'அபரான்னகால' என்று பெயர். அதற்காகவே காத்திருக்கிறேன்,'' என்று பெருமையாகச் சொன்னார் ஜமதக்னி.
''ஐயா! யாரிடத்திலும் சினம் கொள்ளாது மன்னிப்பதே சிறப்பு. தீமைகளெல்லாம் கோபத்தாலேயே வருகின்றன என்று நேற்று சீடர்களுக்குப் பாடம் நடத்தினீர்களே... அது ஊருக்குதான் உபதேசமா? உங்களுக்கு இல்லையா?'' என்றார்.
இப்படி கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினார் ஜமதக்னி.
''நீ யார்?'' என்று கேட்டார்.
''உங்கள் தண்டனைக்குக் காத்திருக்கும் திவாகரன்,'' என்று பணிவோடு கூறினார் ஆதவன்.
ஜமதக்னியும், ரேணுகையும் சூரியனது சுயவடிவம் கண்டு மகிழ்ந்தனர்.
''பாஸ்கரா! உன் உஷ்ணத்திலிருந்து காத்துக் கொள்ளும் வழியை எங்களுக்குச் சொல்லிக் கொடு,'' என்று கேட்டார்.
ஒரு குடையும், பாதுகைகளும் வரவழைத்துக் கொடுத்தான் சூரியன்.
''பாதரட்சைகள், பாதங்கள் புண்ணாகாமல் தடுக்கும்; குடை, உச்சந்தலையை என் கிரகணங்கள் தாக்காது காப்பாற்றும். கோடையில் இவ்விரண்டையும் தானம் செய்கிறவர் சொர்க்கம் செல்வர். முரசொலி காததூரம் கேட்கும்; இடி முழக்கம் ஒரு யோசனை தூரம் ஒலிக்கும். யாசகர்களுக்கு இல்லையென்னாது கொடுப்பவனின் கீர்த்தி மூன்று உலகங்களிலும் பரவி இருக்கிறது. ஒரு மனிதனின் ஆதியையும், அந்தத்தையும் பாதுகாக்கும் இந்த தான புண்ணியம் தேவர்களாலும் போற்றக் கூடியதாகும்,'' என்று கூறி மறைந்தான் பரிதி.
இந்தச் சூரியனுக்குத்தான் எத்தனை பெயர் பார்த்தீர்களா? ஆதவன், திவாகரன், பாஸ்கரா, பரிதி, சூரியன்... அப்பப்பா, 'பந்தா' தாங்கல சூரியா சூரியா குட்டி! ம்... இச்...
***
