PUBLISHED ON : டிச 30, 2011

வந்தே மாதரம்! என் தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
வெற்றி மேல் வெற்றி!
வெற்றி பெற வேண்டும் என்பது மனிதர் ஒவ்வொருவரின் ஆசை. வெற்றி பெறுவதுதானே வாழ்க்கை. வெற்றி பெருவதற்காகத்தானே வாழ்கிறோம்.
முதலில் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தானே சித்திரம். பொய்யாய் ஏமாற்றி நோய் சொல்லி பள்ளிக்கு லீவு போடும் போது நோயின் தாக்கம் தெரியாது. நோய் கொடுமை நமக்கோ, நமக்கு வேண்டியர்களுக்கோ வரும்போதுதான் தெரியும். அந்த வேதனைகள் அதன்பின்தான் புரியும்.
வந்தபின் விழித்து கொள்வதைவிட, ஆரோக்கிய வழிமுறைகளை கடைப்பிடிப்பதை கட்டாயமாக கொள்ள வேண்டும்.
உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள். பின்விளைவுகளை யோசித்து மனதை கட்டுப்படுத்த பழகுங்கள்.
படிக்க வேண்டிய பாடங்கள் இருக்க, 'டிவி' பார்ப்பது என்று பொழுதை போக்கும்போது நமக்கு சந்தோஷமாக தான் இருக்கும். ஆனால், பரீட்சை ரிசல்ட், மார்க் என வரும்போது சந்தோஷம் அங்கே இருக்குமா? யோசியுங்கள்.
கஷ்டமாயிருந்தாலும் உங்கள் கடமையை முடியுங்கள். இஷ்டமாயிருந்தாலும் விளையாட்டை, 'டிவி'யை, கம்ப்யூட்டரை தள்ளி வையுங்கள்.
கடமையை முடித்தபின் அதற்கு பரிசாக, 'டிவி'யை பார்க்கலாம் என நீங்களே உங்களுக்கு விதிமுறை வைத்து கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு நீங்களே, 'அட முடிச்சுட்டியே. அதோடு விளையாடவும் செய்துட்டியே' என 'குட்' சொல்லலாம்.
பள்ளியில் டீச்சர் 'குட்' சொல்வார்கள். வீட்டில் பெற்றோர் 'குட்' சொல்வார்கள். 'எங்க கூடவே விளையாடிட்டு எப்படா முடிச்ச' என நண்பர்கள் வியக்கலாம்.
எவ்வளவு சந்தோஷங்கள் கிடைக்கிறது பார்த்தீர்களா!
பெற்றோரை மதியுங்கள்!
பெற்றோருக்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள். வேண்டாம் என்று தான் சொல்வார்கள். ஆனாலும் பெற்றோருக்கு உதவுங்கள். காலை குட் மார்னிங். பள்ளியில் சொல்வதுபோல் உங்கள் வீட்டிலும் பெற்றோருக்கு சொல்லுங்கள்.
சிறு சிறு காரியங்களை செய்யுங்கள். உங்கள் பொருட்கள் ஒழுங்காக அதன் இடத்தில் வைப்பது நேரத்திற்கு குளிப்பது உடை உடுத்துவது சாப்பிடுவது என உங்கள் வேலைகளை நீங்கள் செய்து கொண்டாலே அது பெற்றோருக்கு பெரிய உதவி.
உங்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் நீங்கள் உதவுங்கள். இதெல்லாம் எதற்கு செய்ய வேண்டும் என்று கேட்டால், எதிர்கால நலனிற்காக என்பேன்.
இந்த காலத்தில் பிள்ளைகள் பெரியவர்களான பின் பெற்றோரை மதிப்பதில்லை என்பதை பார்க்கிறோம்.
உறவு முறைகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் என்னென்ன பிரச்னைகள் வெடிக்கிறது என்பதை பார்க்கிறோம். இதற்கெல்லாம் காரணம் சிறு வயது முதல் ஒருவருக்கொருவர் அன்பும்-அக்கறையும் இல்லாமல் இருந்ததுதான். அதனால் மற்றவருக்காக நாம் செய்வோம். அதை, முதலில் நம் வீட்டில் தொடங்குவோம்.
'அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்' என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லி கொள்ளுங்கள்.
'அந்த பையன் பாருடா எவ்வளவு ஒழுக்கமா இருக்கான்!'
'அந்த பெண்ணை பாரு என்னமா விளையாடுறாள்!'
'அந்த பெண்ணை பாரு எப்பவும் முதலில் ரேங்க்!' இப்படி வேண்டும் என உறுதி கொள்ளுங்கள். அது எதில் வேண்டுமாயினும் இருக்கலாம். படிப்பு, விளையாட்டு, ஒழுக்கம் என எதுவானாலும் இருக்கலாம்.
யாரையும் காயப்படுத்தாதீர்கள்; வார்த்தைகளாலும் கூட! அடித்து காயப்படுத்தினால் கூட அது காலப்போக்கில் ஆறி விடும். ஆனால், வார்த்தையால் அடித்து காயப்படுத்தினால் அது காலப்போக்கில் கூட ஆறவே ஆறாது. காலம்போகப் போக காய வடு இன்னமும் கடுமையாகதான் வலிமை பெறும். உங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு. உங்கள் அறை, உங்கள் வீடு, உங்கள் காம்பவுண்ட், உங்கள் வீட்டின் வெளிப்புறம் என தூய்மையை நிலை நாட்ட வேண்டும். அங்கே ஒழுங்கு அமைய வேண்டும்.
எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள். இது மிகவும் முக்கியம். மற்றவர்களின் நம்பிக்கையை நாம் அதிகம் பெற பெற, வெற்றியை பறித்து, பற பற என்று வாழ்வில் பறக்கலாம்.
சொன்ன வாக்கை மீறாதீர்கள்!
இதுவும் முக்கியமானது. (இங்கே சொன்னது எல்லாமே முக்கியமானதுதான்) இதை செய்கிறேன் இந்த தகவலை சொல்கிறேன். இப்படி பல பல வாக்குறுதிகள் கொடுக்கிறோம். வாக்குறுதிகளை கொடுப்பதற்காக யாரும் யாரையும் பாராட்டுவதில்லை.
அதனை நிறைவேற்றும்போதுதான் பாராட்டுக்கள் பூக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், உங்கள் நம்பகத்தன்மை ஒன்றுமில்லாமல் போய்விடும்.
நோன்பு கஞ்சி!
சிறுவர்மலர் வாசக அன்பர் ஒருவர் சத்து மிகுந்த நோன்பு கஞ்சியின் செய்முறை பற்றி பலமுறை போனில் அன்பு அழைப்பு விடுத்தார். அவரது விருப்பத்திற்கிணங்க தருகிறோம்.
நோன்பு கஞ்சியில், சைவம், அசைவம் என இருவகை உள்ளது. இது அசைவ கஞ்சியாகும். இதுவும் சக்தி மிக்கதே. இந்த நோன்பு கஞ்சி செய்முறை எழுத உதவியது, ஷாகுல் அண்ணாவும் - அண்ணாவின் அம்மாவும்தான்.
தேவையான பொருட்கள்:
100கி-எண்ணெய், இஞ்சி-100 கிராம், பூண்டு-100 கிராம், ஆட்டு இறைச்சி கொத்துக் கறி-1/4 கிலோ, பச்சை மிளகாய்-4, தக்காளி-2, தேவையான அளவு உப்பு, கொத்துமல்லி மற்றும் கால்கிலோ நொய் அரிசி.
செய்முறை: முதலில் குக்கரை சூடு செய்யவும். பிறகு 100கி எண்ணெயை அதில் ஊற்றவும். அரைத்த இஞ்சி-பூண்டு விழுதை அதில் போட்டு வதக்கவும்.
பின்பு ஆட்டு இறைச்சி கொத்து கறியை கழுவி குக்கரில் போட்டு பொன் நிறமாய் கறி சுண்டும் வரை வதக்கவும். 3 டம்ளர் தண்ணீரை ஊற்றவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இரண்டு தக்காளியை போடவும். தேவையான அளவு உப்பு, கைப்பிடி நறுக்கிய கொத்துமல்லியை போட்டு குக்கரை மூடவும். 3 விசில் அடித்ததும் இறக்கவும்.
பின்பு, கால்கிலோ நொய் அரிசியை போட்டு குக்கரை மூடவும். 3 விசில் அடித்த பின்பு குக்கரை இறக்கவும். அருமையான நோன்பு கஞ்சி, 'வா-என்னைக் குடி, வா என்னைக்குடி' என்று கூப்பிடும்!
என்றென்றும் உங்கள் அன்பில் வாழும்,
அங்குராசு!
