PUBLISHED ON : டிச 30, 2011

விறகு வெட்டி வீரப்பன், காட்டிற்கு விறகு வெட்டச் செல்லும் போது எல்லாம் அங்குள்ள வன தேவதையின் சிலையை வழிபடத் தவறுவது இல்லை.
கோரிக்கை இல்லாமல் வன தேவதையை வணங்கி வந்த வீரப்பன், ஒருநாள் கோரிக்கை ஒன்றை வைத்தான்.
''வன தேவதையே! விறகு வெட்டி வயிற்றைக் கழுவும் இந்த ஏழ்மை வாழ்க்கையை நீ மாற்றக் கூடாதா?'' என்று கேட்டான்.
அவனுடைய கோரிக்கையை நிறைவேற்றத் தீர்மானித்த வனதேவதை அவன் முன் தோன்றி, ''வீரப்பா! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்,'' என்றாள்.
''தாயே! நான் மன்னனாக வேண்டும். எனக்கு நாடு வேண்டும். அரண்மனை வேண்டும். செல்வம் ஏராளமாக வேண்டும்,'' என்றான் வீரப்பன்.
''தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நீ மறுபடியும் மரக் கிளையையோ, விறகையோ வெட்டக் கூடாது. அப்படிச் செய்தால், நீ மீண்டும் விறகு வெட்டியாகி விடுவாய்,'' என்று கூறி மறைந்தது வன தேவதை.
உடனே அந்தக் காடே நாடாக மாறியது. அரண்மனை, படை, பட்டாளம், செல்வம் எல்லாம் ஏற்பட்டன. வீரப்பன் மகாராஜா ஆனான். அவன் மனைவி மகாராணி ஆனாள். அந்தப்புரமும், அவை மண்டபமும், எடுபிடி ஆட்களும் ஏற்பட்டனர்.
வீரப்ப மகாராஜா மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடினான்.
காலம் உருண்டு ஓடியது.
வீரப்ப மகாராஜாவுக்குக் கரும்பாக இனித்த சுகபோகம், நாள் செல்லச் செல்ல அலுக்க ஆரம்பித்து விட்டது.
வியர்வையைப் பெருக்கி வேலை செய்த அவனுக்கு, உடல் அலங்காமல் வாழ்வது கஷ்டமாக இருந்தது. உழைக்காமல் உண்டாதல் உடல் பெருந்தது. விருந்தாளியாக வந்து அவனை மருந்தாளியாக்கி விட்டது. படுத்தவுடன் குறட்டை விட்டுத் தூங்கிப் பழக்கப்பட்ட அவனுக்கு, இப்போது பஞ்சணையில் படுக்கும்போது தூக்கம் வரவில்லை.
வீரப்பா மகாராஜாவுக்கு, ராஜ வாழ்க்கை சிறை வாழ்க்கையைப் போல இருந்தது.
வேலை செய்து பழக்கப்பட்ட அவன் கைகள், இப்போது வேலை செய்யாததால் நடுங்கின. ஒருமுறை வீரப்ப மகாராஜா நந்தவனத்தில் உலவிக் கொண்டு இருந்தபோது, ஒரு மரத்தில் பட்டுப் போய் நின்ற கிளையை பார்த்தான்.
பழக்க தோஷத்தால் அதை வெட்ட வேண்டும் போல அவன் கை பரப்பரத்தது. இடுப்பிலிருந்த வாளை உருவி, பட்ட கிளையை ஆசை தீர வெட்டினான்.
அடுத்த கணம் அவன் பழைய விறகு வெட்டி வீரப்பனாக மாறினான். உடனே அவன் முன்னால் தோன்றிய வன தேவதை, ''வீரப்பா! நீ ஏன் நிபந்தனையை மீறியதால், பழைய வீரப்பனாக மாறிவிட்டாய்!'' என்றது.
''தாயே! ராஜ வாழ்க்கை பிடிக்காமல் நான் வேண்டும் என்ற உன் நிபந்தனையை மீறினேன். எனக்கு விறகு வெட்டி வீரப்பனாக வாழும் வாழ்க்கையே ஆனந்தமான வாழ்க்கை,'' என்றான் வீரப்பன்.
''அப்படியே ஆகட்டும்!'' என்றது தேவதை.
***
