PUBLISHED ON : ஜன 06, 2012

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
தேனியில் குறிஞ்சி பாப்பாக்கள்!
நீல குறிஞ்சி மலர்கள் எனப்படும் குறிஞ்சி பூக்கள், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். இந்த பூச்செடிகள் 30 சென்டிமீட்டர் முதல் 60 சென்டிமீட்டர் வரை வளரும்.
இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், குறிஞ்சி மலர்ச்செடிகள் பரவலாக காணப்படுகின்றன. நீலக்குறிஞ்சி பூக்கள், பூப்பதாலேயே நீலகிரி மலைப்பகுதிக்கு நீலகரி என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மலைப்பாங்கான இடங்களில் மட்டும் வளரும் இந்த குறிஞ்சி பூக்கள் புதர் வகை செடிகளாகும். இந்த பூக்கள் கோவில் மணி வடிவம் கொண்டது.
கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் உள்ள பகுதிகளில்தான் இந்த பூக்கள் பூக்கும். உயரமான மலைப்பகுதிகளில், இந்த பூச்செடிகள் பூத்துக்குலுங்குவதால் மலையும், மலையை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி நிலம் என பழங்காலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
குறிஞ்சிப்பூவின் தேன், மருத்துவ குணம் மிகுந்தது. பழங்காலத்தில் மலைவாழ் மக்கள், தங்கள் வயதை குறிஞ்சி பூக்கள் பூப்பதை வைத்து கணித்துள்ளனர். இந்த வகை பூக்கள் தேனி மாவட்ட மலைப்பகுதி களில் பூத்துக்குலுங்குவதாக இதுவரை கண்டறியப்படவில்லை. அதே நேரத்தில் அருகில் உள்ள மூணாறு பகுதியில், இந்த குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டத்தில், குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குவது தற்போது தெரிய வந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் இப்பூக்கள் தேனி மாவட்டம், ஹைவேவிஸ் மலை மகாராஜா மேட்டு பகுதியில் தற்போது பூத்து குலுங்குகின்றன.
கடல் மட்டத்தில் இருந்து 1,540 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்குவதை வனத்துறையினர் படம் பிடித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்குவது முதல் முறையாக கண்டறியப்பட்டு உள்ளது.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது 'முளைகட்டிய தானிய சப்பாத்தி' செய்முறை.
தேவையானவை: பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை-தலா ஒரு கப், மைதா-கால் கிலோ, எண்ணெய், உப்பு-தேவையான அளவு.
செய்முறை: தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்து கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும்.
முளைகட்டிய தானியங்கள் ஒன்றாக கலந்து அரைத்து, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். மைதா மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணி நேரம் ஊறவிடவும்.
மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி, அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்தி கல்லில் மெதுவாக உருட்டவும். தேய்ந்த பரோட்டாக்கள் தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.
குறிப்பு: முளைகட்டிய தானியங்களில், அனைத்து சத்துக்களும் ஒருங்கே கிடைக்கும். இதனை காலை மாலை, இரவு நேர டிபனாக அடிக்கடி சாப்பிட்டு வர, சத்து குறைபாடுகளை நீக்கி, உற்சாகமாக இருக்க வைக்கும். இது 'டயட் சமையலும்' கூட. அதாவது வளர்ந்தவர்கள், வளர்பவர்கள் என அனைவருக்கும் உகந்தது.
நாள் பூராவும் சுற்றலாம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தி லுள்ள பத்து பெரிய நகரங்களில் ஒன்று சான்பிரான்சிஸ்கோ. இது ஒரு தீவு நகரம். இந்த நகரின் வீதிகளில் வலம் வரும் கேபிள் கார்கள் இந்நகரின் போக்குவரத்தை எளிமை யாக்குகின்றன.
உலகின் வேறு எங்கும் பார்க்க முடியாத இந்த கேபிள் கார்கள் 1873-ம் ஆண்டு முதல் இந்நகரில் இயங்குகின்றன.
இந்த கார்கள் தனிப்பட்ட சக்தி மூலம் இயங்கவில்லை. மையப்படுத்தப்பட்ட ஒரு இடத்திலிருந்து இயக்கப் படுகின்றன. ஒவ்வொரு கேபிள் காரிலும் இரண்டு ஊழியர்கள் இருக்கிறார்கள். குறிப்பிட்ட தொகையை கட்டணமாய் செலுத்தி விட்டு கேபிள் கார்களில் நகரை சுற்றி சுற்றி வரலாம். ஒருமுறை செலுத்தும் கட்டணம் நாள் முழுவதற்கும் போதுமானது.
பயண தூரத்தை குறைக்க!
அமெரிக்காவின் கிழக்கு எல்லையிருந்து மேற்கு எல்லைக்கு, விமானத்தில் பயணப்பட்டால் ஐந்து மணி நேரமாகிறது. வடக்கிலிருந்து தெற்கே செல்ல நான்கு மணி நேரமாகிறது. அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களிலிருந்து மேற்கு பகுதி நகரங்களுக்கு விமானத்தில் சென்றால் கடிகாரத்தில் மூன்று மணி நேரத்தை கூட்டி வைத்து கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு நாடு கிழக்கு மேற்காக பரந்து விரிந்துள்ளது.
நம் நாட்டிலிருந்து அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சான்பிரான்சிஸ்கோவுக்கு செல்பவர்கள், சிங்கப்பூர் வழியாக சென்றால் பயண தூரம் குறைவு.
கல்வி என்பது முடிவற்றது!
எந்நேரமும் மாணவராகவே வாழ வேண்டும். கல்வி கற்பது என்பது 5,6,8,9,10,11, 12, காலேஜ் என்பது மட்டுமல்ல.
வாழ்க்கை கல்வி என்ற ஒன்று உண்டு. அது நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் படிப்பது. அக்கல்வியை சிறப்புற கற்கும்போது, வாழ்வில் துயரங்கள் தோல்விகள் எட்டிக்கூட பார்ப்பதில்லை. கற்கும் ஆர்வம் இருக்கும்வரை சலிப்பு ஏற்படா தன்மையும், வாழும் ஆர்வமும், நிறைவான வாழ்வு வாழ்கிறோம் என்கிற திருப்தியும் ஏற்படும்.
உரசினால் அலர்ஜி!
ஆணி, தகரம் போன்றவற்றை சுவரில் உரசினால் அதிலிருந்து வரும் சப்தம் ஒரு மாதிரி அலர்ஜி, கூச்சத்தை கொடுப்பது எதனால்? ஒவ்வொருவருக்கும் சில சப்தங்களும் சில வாசனைகளும் சிலிர்ப்பு தருவதற்கு காரணம், சின்ன வயதில் அந்த ஓசைகளால் ஏதாவது விரும்பத் தகாத சம்பவம் நிகழ்ந்திக்கலாம்.
சிலேட்டில் ஆணி கிழிப்பது ஒரு வன்முறையின் அடையாளம். தலையில் முட்டை உடைப்பதுபோல இது, நமக்கு நினைவுபடுத்தும் விஷயங்கள், விரும்பத் தகாதவையாக இருக்கலாம்.
என்றென்றும் அன்புடன் அங்குராசு.
***
