PUBLISHED ON : ஜன 06, 2012

பெருமாள்புரம் கிராமத் தலைவர் தங்கசாமிக்கு நிலங்கள் ஏராளம். அவ்வளவு நிலங்களையும், 'ரங்கன்' என்ற ஒரு அப்பாவி இளைஞன் கவனித்து வந்தான். அவன், இரவு, பகல் என்று பாராமல் மாடு போல் உழைப்பான்.
ஐந்து வருடங்கள் வரை வாயை மூடிக்கொண்டு வேலை செய்த ரங்கன், ஒருநாள் வாயைத் திறந்தான்.
''எஜமான்! ஏழெட்டுப் பேர் உள்ள என் குடும்பத்தை நான்தான் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. கூடுதலாகப் போட்டுக் கொடுங்கள்,'' என்றான்.
''எல்லாம் எனக்குத் தெரியும். போடா!'' என்று அதட்டி, அவன் வாயை அடைத்து விட்டார் தங்கசாமி.
அதற்குப் பிறகு அடியோடு நம்பிக்கை இழந்து விட்ட ரங்கன், 'உடம்புக்கு முடியவில்லை!' என்று அடிக்கடி விடுமுறை எடுக்க ஆரம்பித்தான்.
ஒருநாள் பக்கத்து ஊரிலுள்ள தன் நண்பர் செந்தில்நாதனைப் பார்க்கப் போய் இருந்தார் தங்கசாமி.
அப்போது செந்தில்நாதன், ''தங்கசாமி! உங்கள் ஊரில் வேலை செய்தால் கூட அதற்குத் தகுந்த கூலி கொடுக்காத ஒரு பெரிய மனிதன் இருக்கிறானாம். அப்படியா?'' என்று கேட்டார்.
''எங்கள் ஊரில் நான்தான் பெரிய மனிதன். நான் கூலி எல்லாம் ஒழுங்காகத்தானே கொடுக்கிறேன்,'' என்றார் தங்கசாமி.
''அது என்னவோ எனக்குத் தெரியாது. உங்கள் ஊர்க்காரன் ஒருவன்தான் அப்படிச் சொன்னான். அவன் வேலை செய்யும் முதலாளி மகாக் கருமியாம். அவன் கொடுக்கும் சம்பளம் மாதத்தில் பத்து நாட்களுக்குக் கூட வராதாம். அதனால் அவன் அடிக்கடி என்னிடம் வந்து விவசாய வேலை செய்வான். வேலை என்றால் சாதாரண வேலையா? எட்டு ஆள் செய்யக் கூடிய வேலையை அவன் ஒருவனே செய்வான். அதனால் நான் அவன் கேட்பதைப் போல இரண்டு மடங்கு கூலிகொடுப்பேன். அவன் இப்போது கூட என் தோட்டத்தில்தான் வேலை செய்து கொண்டிருக்கிறான்,'' என்றார் செந்தில்நாதன்.
''நான் அவனைப் பார்க்கலாமா!'' என்று கேட்டார் தங்கசாமி.
''தாராளமாகப் பார்க்கலாம்!'' என்ற செந்தில்நாதன் அவரைத் தன் தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கே ரங்கன் வேலை செய்து கொண்டு இருந்தான். அவர் அதைப் பார்த்துத் திடுக்கிட்டார். ஆனால், ஒன்றும் சொல்லாமல் ஊருக்குக் கிளம்பினார்.
மறுநாள் தங்கசாமி ரங்கனை அழைத்து வரச் சொன்னார்.
''ரங்கா! நீ ஊர் ஊராகப் போய் வேலை செய்ய வேண்டாம். இனி நான் உனக்கு நான்கு மடங்கு சம்பளம் கூடுதலாக தருகிறேன்,'' என்றார்.
அதைக் கேட்ட ரங்கன் ஆச்சரியத்தால் திணறினான்.
***
